சண்முகம்: ‘ராப்’ காணொளி எல்லை மீறியது, ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல

உள்ளூர் நகைச்சுவைக் கலைஞர் பிரீத்தி நாயர் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ‘ராப்’ பாடல் காணொளி ‘எல்லை மீறிய’ ஒன்று என்றும் அது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கூறியுள்ளார்.

அந்த ‘ராப்’ பாடல் காணொளி சிங்கப்பூர் சீனர்களை அவமதிக்கிறது என்றும் நான்கு எழுத்துக்களைக் கொண்ட ஆங்கில அவதூறு வார்த்தையைச் சிங்கப்பூர் சீனர்கள் மீது பயன்படுத்துகிறது என்றும் நடுவிரலைக் காட்டி சிறுபான்மையினரைச் சிங்கப்பூர் சீனர்கள் மீது கோபப்படத் தூண்டுகிறது என்றும் அமைச்சர் சுட்டினார்.

 

அந்த காணொளியை அகற்றுமாறு ஃபேஸ்புக் சமூக ஊடக நிறுவனத்திடம் தொடர்புத் தகவல் அமைச்சு கேட்டுக்கொண்டதாகவும் அமைச்சர் சண்முகம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார்.

2 நிமிடம், 50 வினாடிகள் நீள காணொளி ஃபேஸ்புக் உட்பட மற்ற சமூக ஊடகங்களிலிருந்தும் நேற்று மாலை அகற்றப்பட்டது. 
அண்மையில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பிய ‘பிரவுன்ஃபேஸ்’ விளம்பரத்தைச் சாடி அந்த காணொளியை பிரீத்தி நாயரும் அவரது சகோதரர் சுபாஸ் நாயரும் திங்கட்கிழமை வெளியிட்டிருந்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சண்முகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சண்முகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சர்ச்சைக்குரிய epaysg.com மின்னியல் கட்டண இணையத்தளத்திற்கான விளம்பரத்தில் மீடியாகார்ப் நிறுவன நடிகர் டென்னிஸ் சாவ் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர் போல சித்திரிக்கப்படுகிறார். அவர் தலையில் முக்காடு அணிந்த மலாய் முஸ்லிம் பெண்ணாகவும் கருமையான தோல் நிறம் கொண்ட இந்தியராகவும் அந்த விளம்பரத்தில் சித்திரிக்கப்பரடுகிறார்.
இந்த விளம்பரத்துக்கு எதிராகத்தான் அந்தக் காணொளியின் வெளியிடப்பட்டது என்று சொல்வது தற்காப்பு வாதம் அல்ல என்று அமைச்சர் சண்முகம் கூறினார்.

“உங்களுக்கு ஒன்று பிடிக்கவில்லை என்றால் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கோருங்கள், அது குற்றச்செயல் என்று நினைத்தால் போலிசில் புகார் கொடுங்கள். எல்லையை மீறாதீர்கள்,” என்று திரு சண்முகம் சொன்னார்.
“இந்த ஒரு ‘ராப்’ பாடல் காணொளியை அனுமதித்தால் நூற்றுக்கணக்கான மற்ற காணொளிகளையும் அனுமதிக்கவேண்டும்.
“ அப்போது நமது இன நல்லிணக்கத்துக்கு என்ன ஆகும்? சமூகக் கட்டமைப்பு? மக்கள் ஒருவரை ஒருவர் எப்படி பார்ப்பார்கள்?” என்றார் அவர்.

இந்த ‘ராப்’ காணொளியை அனுமதித்தால் பின்பு அதற்கு எதிராக ஒரு சீனர், இந்தியர்களையும் மலாய்க்காரர்களையும் சாடி, நான்கு வார்த்தை கொண்ட அவதூறான சொல்லைப் பயன்படுத்தி, ஆபாசமான சைகைகளைப் பயன்படுத்தினால் இந்தியர்களும் மலாய்க்காரர்களும் எப்படி உணர்வார்கள் என்றும் அமைச்சர் கேட்டார்.
“சிங்கப்பூர் வேறுபட்டு இருப்பதற்கும் இன நல்லிணக்கம் இருப்பதற்கும் பல இனங்கள் பாதுகாப்பாக உணர்வதற்கும் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உணர்வதற்கும் பல நல்ல காரணங்கள் உள்ளன. அதை எப்போதும் நாம் கட்டிக்காக்கவேண்டும்,” என்று அமைசச்ர் வலியுறுத்தினார்.

epaysg.com விளம்பரம் தற்போதய சூழலில் பலருக்குப் பிடிக்காத ஒன்றாக அமையும் என்றும் மற்ற நாடுகளில் இதுபோன்ற நிகழ்ந்த சம்பவங்களைக் கருத்தில் கொண்டிருக்கலாம் என்றும் கூறிய அமைச்சர், அந்த விளம்பரத்தை ஆராய்ந்த வழக்கறிஞர்கள் அதில் குற்றச்செயல் ஏதும் இல்லை என்று தம்மிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில் ‘ராப்’ காணொளி குறித்து போலிஸ் விசாரணை நடைபெறுகிறது. 

 

 

 

 

Loading...
Load next