தெம்பனிஸ், பொங்கோலில் 3,373 பிடிஓ வீடுகள்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் புதன்கிழமை (செப்டம்பர் 11ஆம் தேதி) 4,089 வீடுகளை விற்பனைக்கு விட்டுள்ளது. தெம்பனிஸ் மற்றும் பொங்கோல் வட்டாரங்களில் மொத்தம் 3,373 தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் (பிடிஓ) வீடுகளை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். ஈரறை ஃப்ளெக்சி முதல் ஐந்து அறை வரையிலான அடுக்குமாடி வீடுகள் இந்த வீடுகளில் அடங்கும்.

முதன்முறையாக வீவக வீடு வாங்குவோருக்கான கூடுதல் மானியம், வீடுகளைத் தேர்ந்தெடுப்பதில் கூடுதல் நீக்குப்போக்கு உள்ளிட்ட சில மாற்றங்கள் நேற்று அறிவிக்கப்பட்டதை அடுத்து பிடிஒ வீடுகளின் விற்பனை பற்றிய இந்தத் தகவல் வெளிவந்தது.

வீட்டு விலைகள் குறைந்தபட்சமாக பொங்கோலிலுள்ள இரண்டு அரை ‘ஃப்ளெக்சி’ (flexi) வீடுகளுக்கு 109,000 வெள்ளியாகவும் (மானியங்கள் இன்றி) தெம்பனிசில் நான்கு அறை வீடுகளுக்கு 312,000 வெள்ளியாகவும் உள்ளன.

அத்துடன், கடந்தாண்டு நவம்பரின் விற்பனை நடவடிக்கையிலிருந்து எஞ்சியிருக்கும் வீடுகள் பல்வேறு வட்டாரங்களில் விற்பனைக்கு உள்ளன. அவற்றில் சுமார் 12 விழுக்காடு ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியவை தொடர்ந்து கட்டப்பட்டு வருகின்றன. அவசரமாக வீடு தேவைப்படுவோரும் வீட்டின் கட்டிடாம்சங்களைப் பற்றி அதிகம் கவலைப்படாதவர்களும் இந்த வீடுகளுக்காக விண்ணப்பிக்கலாம் என்றது வீவக.

வீடு வாங்க நினைப்பவர்கள் இன்று முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை இந்த வீடுகளுக்காக விண்ணப்பிக்கலாம்.

நவம்பர் மாதத்தில் வீவக மேலும் 4,500 பிடிஓ வீடுகளை அங் மோ கியோ, தெம்பனிஸ், தெங்கா ஆகிய இடங்களில் விற்பனைக்கு விடும்.  கூடுதலாக 3,000 பிடிஓ வீடுகள் செம்பவாங்கிலும் தோ பாயோவிலும் விற்பனைக்கு வரும்.