புது வரவுடன் பொங்கல் குதூகலம்

கடந்த ஆண்டு பொங்கலுக்குத் தமிழ் முரசில் பிரசுரிக்கப்பட்ட “சிங்கப்பூர் தமிழகக் காதல்” என்ற சிறப்பு கட்டுரை, கடந்த ஆண்டில் அதிகம் வாசிக்கப்பட்ட தமிழ் முரசு கதைகளில் ஒன்று. சம்பந்தப்பட்ட காணொளியும் பரவலாகப் பார்க்கப்பட்டது. சிங்கப்பூரின் செய்தி ஊடகங்கள் உட்பட இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஊடகங்களிலும் இந்த கதை பிரபலமானது.

ஜெயலஷ்மி கன்னியப்பன், 51, சுப்பையா மாணிக்கம், 58, தம்பதியின் மகள்களான ரேணுகா, 31, ஜெயந்தி, 28, கௌரி, 26 மூன்று சகோதரிகளாவர். இவர்கள் ராமலிங்கம் வேணுகோபால், 61, உமா ராமலிங்கம், 54 ஆகியோரின் மகன்களான அருண், 32, பாலாஜி, 31, ஹரிஹரசுதன், 30 ஆகிய மூன்று சகோதரர்களைத் திருமணம் செய்துகொண்டனர். 

சிங்கப்பூர் கல்சா சங்கத்தில் 2018ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி ஒரே நேரத்தில் அவர்களின் திருமணம் நடந்தேறிேயது.

பாலாஜி-ஜெயந்தி தம்பதிக்கு இப்போது கவிஷ் பாலாஜி என்ற மகன் பிறந்திருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் பிறந்த கவிஷ் தற்போது மூன்று மாதமாகியுள்ள நிலையில் இத்தம்பதியினருக்கு மரின் பரேட் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புது வீடும் கிடைத்தது.

“புது வீடு கிடைத்த அடுத்த மாதத்திலே கவிஷ் பிறந்தார். நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கிறது. வரும் ஆண்டுகளில் கவிஷின் வளர்ப்பைப் பார்ப்பதற்கு குடும்பமே ஆவலாக இருக்கிறோம். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு பெண் குழந்தை நமக்கு கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்,” என்றார் தாயாராகியிருக்கும் திருமதி ஜெயந்தி. 

“என் மகள் கருவுற்றதை அறிந்தபோது பூரித்துப் போனேன். கவிஷைப் பார்த்துக்கொள்ள துணையாக என் வீட்டிலேயே பாலாஜியையும் ஜெயந்தியையும் தங்க சொல்லிவிட்டேன். எனது முதல் பேரக்குழந்தை என்பதால் பூரித்துப் போய் உள்ளோம். குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கிறோம்,” என்றார் திருமதி ஜெயலஷ்மி. 

மூத்த தம்பதியான அருண்-ரேணுகா பிடோக் நார்த் பகுதியில் புது வீடு வாங்கியுள்ளனர்.  நிலச் சீரமைப்புத் துறையில் பணிபுரிந்து வந்த திரு அருண் வேலை மாறி கடந்த மூன்று மாதங்களாக ‘கோ-அஹேட்’ (Go-ahead) என்ற பொதுப் போக்குவரத்து நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராக (Bus captain) பணியாற்றி வருகிறார். 

“மாறுநேர வேலை இது. வாரத்தில் ஆறு நாட்கள் வேலை இருப்பதால் சற்று கடினமாக உழைக்கவேண்டியதாக இருக்கிறது. ஆனால் இந்த புது வேலை நிலைத்தன்மை உடையது. சம்பளமும் அதிகம். நல்ல வேலை இருப்பதால் நீண்டகால சிங்கப்பூர் விசா கிடைக்கசுலபமாகியிருந்தது. புது வீடு வாங்கவும் இப்பணம் கைகொடுக்கிறது,” என்றார் திரு அருண். 

“வெளிநாட்டவரைத் திருமணம் செய்த 21 வயதுக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள், மறுவிற்பனை வீவக வீடுகளை வாங்குவதற்கு கூடுதல் மானியங்கள் வழங்கும் புது அரசாங்கத் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைமுறைக்கு வந்தது. அதற்குத் தகுதி பெற்றதால் கூடுதலாக வீடு வாங்க $21,000 மானியம் கிடைத்தது. ஏறத்தாழ $60,000 மானியத்துடன் வீடு வாங்குவது சாத்தியமானது, அருணுக்கு நல்ல வேலையும் கிடைத்ததில் கூடுதல் நன்மை,” என்றார் ரேணுகா. 

அடுத்த மாதம் புது வீட்டில் குடி புகத் திட்டமிட்டுள்ளனர் அருண்-ரேணுகா தம்பதி. ஆக இளைய தம்பதியான ஹரிஹரசுதன்-கௌரி தமது அக்கா-அண்ணன் போல நிலையான வேலை கிடைப்பதற்குக் காத்திருக்கிறார்கள். 

திருமதி கௌரி பணி மாறி தற்போது பகுதி நேர ‘கிராப்’ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ‘சேட்ஸ்’ நிறுவனத்தின் சேவைக் குழுவில் பணியாற்றிய திரு ஹரிஹரசுதனும் கிடங்கு உதவியாளராக வேலை மாறியுள்ளார். இவ்வாரம் ‘டிபி ஷெங்கர்’ நிறுவனத்தில் சேரவுள்ளார் திரு ஹரிஹரசுதன். 

“எங்கள் இருவரின் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன. அண்மையில் ஹரிஹரசுதனின் நீண்டகால விசா நிராகரிக்கப்பட்டதால், வேலையை இழக்க நேரிட்டது. வேலை இல்லாதபோது என் பெற்றோர் ஆதரவு வழங்கினார்கள். வாடகை வீட்டில் தங்குவதற்கும் செலவு கட்டுப்படியாகவில்லை. தற்போது பெற்றோருடன் இருக்கிறோம்,” என்றார் கௌரி. 

“விசா கிடைப்பது ஒரு பெரிய இடையூறாகவே இருக்கிறது. சிங்கப்பூர் குடிமக்களைத் திருமணம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு அரசாங்கம் மேலும் பல உதவிகள் வழங்க வேண்டும்,” என்றார் திரு சுப்பையா. 

திருமதி ஜெயலஷ்மியின் தாயாரான திருமதி காசியம்மாள் மாணிக்கமும் அவருடைய இரண்டு சகோதரிகளும் மூன்று சகோதரர்களை 1960களில் திருமணம் செய்துகொண்டவர்கள். அதைப் போலவே தனது மகள்களும் ஒரே குடும்பத்தில் சகோதரர்களைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது திருமதி ஜெயலஷ்மியின் பல்லாண்டு கால கனவு, வேண்டுதல். 

“இந்திய நாட்டின் மாப்பிள்ளைகளைத் தவிர்க்க பலரும் சொன்னார்கள். வாழ்வில் பல சிக்கல் ஏற்படும் என விமர்சனம் செய்தனர். எனக்கு என் மகள்களின் மகிழ்ச்சிதான் முக்கியம். இப்போது போல அவர்கள் என்றும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்,” என்று சொன்னார் திருமதி ஜெயலஷ்மி. 

svenga@sph.com.sg