வேலை பாதுகாப்பு மன்றம் வழி 7,000க்கும் அதிகமானோருக்கு புதிய வேலை

கொவிட்-19 கிருமித்தொற்றால் தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கப்பட்ட அல்லது ஆட்குறைப்பு செய்யப்பட்ட  கிட்டத்தட்ட 7,000 ஊழியர்கள்,  தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) வேலை பாதுகாப்பு மன்றத்தின் உதவியுடன்  புதிய வேலைகளில் சேர்ந்துள்ளனர்.

பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்த மன்றத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் இணைந்திருக்கின்றன. 

வேலையிடங்களுக்கிடையே ஊழியர்களைப் பகிர்வது, அவர்களை வேறு வேலையிடங்களில் பணிக்கு அமர்த்துவது, ஆட்குறைப்பு செய்யப்பட்ட  ஊழியர்களுக்கு வேறு வேலை வாய்ப்புகளை அளிப்பது உள்ளிட்டவை இந்த ஏற்பாட்டின் நோக்கம்.

தளவாடம், ஊடகத் தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் 7,000க்கும் அதிகமான ஊழியர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக என்டியுசி இன்று (மே 27) வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித்தது. 

இவ்வாறு பயனடைந்த நிறுவனங்களில் ஒன்று  ‘சீகேட் டெக்னாலஜி’ என்று என்டியுசி குறிப்பிட்டது.  

வேலை பாதுகாப்பு மன்றத்தின் உதவியுடன் அந்நிறுவனம்,  ‘ஏரோஸ்பேஸ்’ துறையிலுள்ள நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த சில ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. 

அத்துடன், இக்காலகட்டத்தில் மளிகைப் பொருட்களுக்கான தேவை கூடியுள்ளதால் சுமார் 4,000 ஊழியர்கள்  மன்றத்தின் உதவியால்  என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிக்கு வேலை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊழியர்கள் குறுகிய கால மற்றும் நிரந்தர வேலைகளுக்கு மாற்றுவதுடன் கொவிட்-19 கிருமிப்பரவலால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் உள்ளமைப்பை மேம்படுத்தவும் இந்த மன்றம் உதவுவதாக என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு திரு இங் சீ மெங், சேட்ஸ் எனப்படும் விமான தரையிரங்கல் சேவை மற்றும் விமானப் பயண உணவு விநியோகச் சேவை நிறுவனத்தை  எடுத்துக்காட்டாக  சுட்டினார். 

பயணக் கட்டுப்பாடுகளின் அறிமுகத்திற்குப் பிறகு பெரிதும் பாதிக்கப்பட்ட அந்நிறுவனத்தின் உள்ளமைப்புக்கு என்டியுசி பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர உதவியதுடன்  ஊழியர் தங்கும் விடுதிகளுக்கான உணவு விநியோக பணியில் ஈடுபடுத்தியதாகத் திரு இங் குறிப்பிட்டார். 

அத்துடன், வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக உணவு விற்பதற்கான வழிகளையும் ஆராய சேட்ஸ் நிறுவனத்திற்கு என்டியுசி உதவி வருகிறது என்றும் அவர் கூறினார்.

செவ்வாய்க்கிழமையன்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் இவ்வாண்டுக்கான தமது நான்காவது வரவுசெலவுத் திட்ட உரையில்  அறிவித்த தேசிய வேலைகள் மன்றத்தின் வழி  (National Jobs Council)  என்டியுசியின் வேலை பாதுகாப்பு மன்றம் மேலும் விரிவான கட்டமைப்புடன் இணைந்து ஊழியர்களுக்கு  உதவலாம் என திரு இங் சீ மெங் நம்பிக்கை தெரிவித்தார்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online