கொவிட்-19க்கு எதிராகச் செயல்படும் 5 ஆன்டிபாடிகளை கண்டுபிடித்த சிங்கப்பூர் தற்காப்பு ஆய்வு அமைப்பு

கொவிட்-19க்கு காரணமான கிருமியை சமன்படுத்தும் (அழிக்கும்) திறன் கொண்ட ஐந்து ஆன்டிபாடிகளை சிங்கப்பூரின் தற்காப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஎஸ்ஓ தேசிய ஆய்வகங்களின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

‘சமன்படுத்தும் ஆன்டிபாடிகள்’ என அழைக்கப்படுபவை, கிருமித்தொற்றுகண்ட நோயாளின் உடலில் செல்கள் பாதிக்கப்படுவதிலிருந்து தடுக்கின்றன.

கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளிலிருந்து மனிதர்களின் உடலில் சுரக்கும் நோயெதிர்ப்புத் திறன்கொண்ட ஆயிரக்கணக்கான ஆன்டிபாடிகளை கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்த ஆய்வாளர்கள் பரிசோதனை செய்து வந்தனர்.

தேசிய தொற்று நோய்கள் நிலையமும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையும் ரத்த மாதிரிகளை இந்த ஆய்வாளர்களுக்கு வழங்கியது.

அத்தகைய முதல் இரண்டு ‘சமன்படுத்தும் ஆன்டிபாடிகள்’ மார்ச் 19, 30 தேதிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.  சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் உயிர் அறிவியல் கழகம் மற்றும் என்யூஎஸ் யோங் லூ லின் மருத்துவப் பள்ளி ஆகியவற்றுடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக இணைந்து கண்டுபிடித்த பரிசோதனை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவை கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த மாதத்தில் அத்தகைய மேலும் மூன்று ஆன்டிபாடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த ஐந்து ஆன்டிபாடிகளில் மிகவும் சிறந்ததாகக் கருதப்படும் AOD01 எனும் ஆன்டிபாடியை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கும் நடைமுறை வரும் மாதங்களில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. சுகாதார அறிவியல் ஆணையத்தின் அனுமதிக்காக இது காத்திருக்கிறது.

அரசாங்க முகவைகள், ஆய்வுக் கழகங்கள், உயிர்மருத்துவ நிறுவனங்கள் போன்றவற்றை ஒன்றிணைத்து சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு ஒன்றை டிஎஸ்ஓ உருவாக்கி, ஆன்டிபாடிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட உள்ளது.

ஆன்டிபாடிகளைக் கொண்டு சிகிச்சை மேற்கொள்வதற்காக அதிக எண்ணிக்கையில் அவற்றை உருவாக்கும் திறன் சிங்கப்பூரில் உள்ள நிலையில், அந்த ஆன்டிபாடிகளை மருத்துவரீதியில் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்த பிறகு, அவற்றை கொவிட்-19 சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியும் என முதன்மை ஆய்வாளர் டாக்டர் பிரெண்டன் ஹான்சன் குறிப்பிட்டார்.

ஆய்வு நிலையில் இருந்தாலும், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, கொவிட்-19க்கு எதிரான சிங்கப்பூரின் போராட்டத்தில் இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்றார் டிஎஸ்ஓவின் தலைமை நிர்வாக அதிகாரி சியோங் சீ ஹூ.

பொதுவாக, ஆன்டிபாடிகளை உடலில் செலுத்தினால் அவற்றின்  திறன் சுமார் ஒரு மாத காலத்துக்கு இருக்கும். அந்தக் காலகட்டத்தில் கிருமித்தொற்றினால் பாதிக்கப்படும் சாத்தியம் குறைவு. கொவிட்-19 சிகிச்சைக்கு அத்தகைய ஆன்டிபாடிகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online