சுடச் சுடச் செய்திகள்

அரசியலில் இருந்து ஓய்வுபெறுகிறார் கோ சோக் டோங்

நாடாளுமன்ற உறுப்பினராக 44 ஆண்டுகள் சேவையாற்றியதைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், 79,  அரசியலிலிருந்து ஓய்வுபெறுகிறார்.

அரசியலிலிருந்து தாம் ஓய்வு பெறுவது குறித்த முடிவைக் கடிதம் மூலம் பிரதமர் லீ சியன் லூங்கிடம் திரு கோ நேற்று (ஜூன் 24) தெரிவித்தார். அவரது முடிவை திரு லீ ஏற்றுக்கொண்டார்.

வாழ்நாள் முழுவதும் மெச்சத்தகுந்த சேவை வழங்கியதற்காக திரு கோவுக்கு சிங்கப்பூரர்கள் அனைவரது சார்பிலும் பிரதமர் லீ நன்றி தெரிவித்துக்கொண்டார். இதன் தொடர்பில் திரு கோ, பிரதமர் லீ எழுதிய கடிதங்கள் இரண்டையும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டது.

“மரின் பரேட் தொகுதியில் வசிக்கும் சிங்கப்பூரர்களின் வாழ்வில் நீங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். 10  பொதுத் தேர்தல்கள், ஒரு இடைத் தேர்தல் என 11 முறை நீங்கள் மரின் பரேட் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்,” என்று பிரதமர் லீ தமது கடிதத்தில் கூறினார்.

கடந்த 44 ஆண்டுகளாக மக்கள் செயல் கட்சி, மரின் பரேட் குழுத்தொகுதி குடியிருப்பாளர்கள், சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரர்களுக்கு சேவையாற்றியதைத் தாம் பெரும் கௌரவமாகக் கருதுவதாக திரு கோ தமது கடிதத்தில் கூறினார். 

மற்ற வழிகளில் தாம் தொடர்ந்து பங்காற்றவிருப்பதாகவும் அவர் சொன்னார்.

பொருளியல் நிபுணரான திரு கோ, 1964ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் நிர்வாகச் சேவையில் இணைந்தார். அதன் பிறகு 1969ல் ‘நெப்டியூன் ஓரியண்ட் லைன்ஸ்’ கப்பல் நிறுவனத்தில் அவர் சேர்ந்தார். 1973 முதல் 1977ஆம் ஆண்டு வரை அதன் நிர்வாக இயக்குநராக அவர் பொறுப்பு வகித்தார்.

1976ஆம் ஆண்டில் திரு கோ அரசியலில் கால்பதித்தார். அதே ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மரின் பரேட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதற்கு அடுத்து நடைபெற்ற ஒன்பது பொதுத் தேர்தல்களிலும் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1979க்கும் 1990ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வர்த்தக தொழில், சுகாதார, தற்காப்பு அமைச்சராக திரு கோ பதவி வகித்தார்.

1985ல் துணைப் பிரதமராக அவர் நியமிக்கப்பட்டார். 1990ஆம் ஆண்டு நவம்பரில் சிங்கப்பூரின் இரண்டாவது பிரதமராக அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

2004ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் திரு லீ சியன் லூங்கிடம் பிரதமர் பொறுப்பை திரு கோ ஒப்படைத்தார். அதையடுத்து, மூத்த அமைச்சராக அவர் பொறுப்பு வகித்தார்.

2004 முதல் 2011ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவராக அவர் இருந்தார்.

2011 பொதுத் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவையிலிருந்து திரு கோ விலகினார். அதன் பிறகு ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் என்ற பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் மூத்த ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், நாட்டிற்காக திரு கோவின் பங்களிப்புக்கு நன்றி கூறியவர்களில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டும் ஒருவர்.

“2011ல் நான் அரசியலில் கால்பதித்ததைத் தொடர்ந்து, திரு கோ ஒரு சிறந்த மதியுரையாளராக இருந்தார். தமது தொகுதி குடியிருப்பாளர்கள், அமைச்சரவை சகாக்கள், சக சிங்கப்பூரர்கள் என தம்மை சுற்றியுள்ளவர்களது நலனில் அவர் பெரிதும் அக்கறை கொண்டு உள்ளார். சேவையாற்றுவதில் அவர் கொண்டிருக்கும் கடப்பாடு ஊக்கம் தருகிறது,” என்று திரு ஹெங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டார்.

மக்கள் செயல் கட்சி வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டாக்டர் டான் சீ லெங், 55, திரு கோவுக்கு பதிலாக மரின் பரேட் குழுத் தொகுதியில் போட்டியிடுவார்.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon