‘பொருளியல், வேலைகள், சமூக ஆதரவில் அதிக கவனம்’

பொருளியல் ரீதியாக அடுத்த ஆறு முதல் 12 மாதங்கள் சிங்கப்பூருக்குச் சிரமமானதாக இருக்கும் என்றும் ஆயினும் செய்ய வேண்டியவை குறித்து அரசாங்கம் தெளிவாக இருக்கிறது என்றும் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

“தேர்தல் பிரசாரம், தேர்தல் தொடர்பாக வெளியான செய்திகள் எதுவாக இருந்தாலும், கொவிட்-19 நோய்ப் பரவல் நெருக்கடியில் இருந்து எப்படி மீண்டுவரப் போகிறோம் என்பதுதான் முதன்மையான அக்கறையாக இருக்கிறது,” என்று அமைச்சர் சான் கூறினார்.

சிங்கப்பூரர்களுக்கு வேலை பெற்றுத் தர எந்தக் கட்சி வேட்பாளர்களால் முடியும், முதலீடுகளை ஈர்க்கும் வல்லமை எந்தக் கட்சிக்கு இருக்கிறது, எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள ஊழியர்களுக்கும் குடும்பங்களுக்கும் உதவும் வகையில் யாரால் சமூகக் கட்டமைப்புகளை அணிதிரட்ட முடியும் என்ற கேள்விகளை சிங்கப்பூர் எதிர்நோக்கி உள்ளது என்றும் அவர் கூறினார்.

மக்கள் செயல் கட்சி இன்று காலை ஏற்பாடு செய்த மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் திரு சான், என்டியுசி தலைமைச் செயலாளரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான திரு இங் சீ மெங், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

அமைச்சர் சான் நாட்டின் பொருளியல் நிலை குறித்த கண்ணோட்டத்தை முன்வைத்தார். வேலைகள் குறித்து திரு இங்கும் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோருக்கான உதவித் திட்டங்கள் குறித்து அமைச்சர் லீயும் பேசினர்.

பொருளியல் கண்ணோட்டம்

கொவிட்-19 கொள்ளைநோய் உலகை நிலைகுலைய வைத்திருக்கும் இச்சூழலில், சிங்கப்பூர் மற்றும் அனைத்துலக அளவிலான பொருளியல் கண்ணோட்டத்தை செய்தியாளர்களிடையே முன்வைத்தார் வர்த்தக, தொழில் அமைச்சரும் மக்கள் செயல் கட்சியின் இரண்டாவது உதவி தலைமைச் செயலாளருமான திரு சான் சுன் சிங்.

அண்மைய அனைத்துலக பண நிதியத்தின் மதிப்பீடுகளின் அடிப்படையில், சீனாவைத் தவிர மற்ற பெரிய பொருளியல் நாடுகள் இந்த ஆண்டில் பொருளியல் மந்த நிலையை எதிர்நோக்கும் என்றார் திரு சான்.

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பொருளியல் 8 முதல் 10 விழுக்காடு வரையில் சரியக்கூடும், சீனாவின் பொருளியல் 1 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று கூறப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு சீனாவின் பொருளியல் வளர்ச்சி 6 விழுக்காடாக இருந்ததை திரு சான் சுட்டிக் காட்டினார்.

சிங்கப்பூரில் ஆண்டு அடிப்படையில், முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.7 விழுக்காடு சரிந்துள்ளது. தேவைகள் தொடர்ந்து வலுவற்று இருக்கும் எனவும் மீட்சி படிப்படியாகவும் சீரற்றும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்ட அதிரடி நடவடிக்கைகளுக்குப் பிறகு, சிங்கப்பூரில் பொருளியல் இரண்டாம் கட்டத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், வரும் மாதங்களில் அனைத்துலக அளவிலான சவால்களால் ஏற்படும் சிரமங்களைச் சமாளிக்க சிங்கப்பூரர்கள் தயாராக வேண்டும் என்று திரு சான் கூறினார்.

வேலை வாய்ப்புகளை உருவாக்குவது

கடந்த மூன்று மாதங்களில் ஆட்குறைப்பு, வேலையின்மை விகிதங்கள் சிங்கப்பூரில் அதிகரித்துள்ளதாக திரு சான் குறிப்பிட்டார்.

வேலை தேடுபவர்களுக்கு உதவும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை விவரித்த ஊழியரணி தலைவர் இங் சீ மெங், ஊழியர்களை இயன்ற வரை நல்ல நிலையில் வைக்க அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது என்றார். அவர்களது வேலைகளைத் தக்கவைக்க, அல்லது அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டால், SGUnited Jobs and Skills தொகுப்பு மூலம் புதிய வேலையில் சேர்வதற்கான உதவிகளை அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் நடைபெற்ற வேலைக் கண்காட்சியில் 7,000 வேலைகள், 3,000 பயிற்சி வேலைகள், 6,000 பயிற்சி வாய்ப்புகள் என 16,000 வேலைகள் இடம்பெற்றிருந்தன. 12,000 வேலைகள் இதுவரை எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவது

இந்த நெருக்கடியான காலகட்டத்தில், சமுதாய பாதுகாப்புக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதையும் ஒருவர் மற்றவரைப் பார்த்துக்கொள்வதில் சிங்கப்பூரர்கள் நல்ல முறையில் பங்களிப்பதையும் உறுதிப்படுத்துவது முக்கியம் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ குறிப்பிட்டார்.

குறைந்த வருமானக் குடும்பங்கள், வாடகை வீடுகளில் வசிப்போர் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய சமூகத்தினருக்கு பல்வேறு அமைப்புகளும் முகவைகளும் எவ்வாறு உதவி வருகின்றன என்பதை திரு லீ விவரித்தார்.

கொவிட்-19 ஆதரவு மானியம், காம்கேர் திட்டம் போன்ற மானியங்களும் திட்டங்களும் இருப்பதை அவர் குறிப்பிட்டார். கொவிட்-19 ஆதரவு மானியத்தின்கீழ் 35,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றார் அவர்.

கடந்த சில மாதங்களாக மாதந்தோறும் சுமார் 4,000 புதிய காம்கேர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் புதிய காம்கேர் விண்ணப்பங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 விழுக்காடுவரை அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவை தவிர, சுமார் 6,000 பேருக்கு காம்கேர் ஆதரவு ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருப்பதையும் திரு லீ குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!