பிரதமர் லீ: இன நல்லிணக்கம் தொடர ஒன்றுபட்ட முயற்சி அவசியம்

இன நல்லிணக்க நாளை முன்னிட்டு பல்வேறு பாலர் பள்ளிகளில் இன்று பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் அரங்கேறின. பிள்ளைகள் தங்களது சொந்த கலாசாரம் பற்றி விவரிக்கும் அதே நேரம் கலாசாரத்தைப் பறைசாற்றும் விளையாட்டுகளிலும் பங்கேற்றனர்.  

இன நல்லிணக்க நாள் கடைப்பிடிக்கப்படும் வேளையில் பிரதமர் லீ சியன் லூங் அது தொடர்பில் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் குறிப்பிடுகையில், “ஒவ்வோர் ஆண்டும் நாம் இன நல்லிணக்க நாளைக் கொண்டாடுகிறோம்.  இன நல்லிணக்கத்தை இந்நிகழ்ச்சி பலப்படுத்தும் அதே நேரம் தொடர்பு முயற்சிகளும் ஈடுபாடுகளும் இதற்குத் தேவை.

"ஒவ்வொரு தலைமுறையினருக்கும் வெவ்வேறு வாழ்க்கை அனுபவங்கள் இருக்கும். இனம், சமயம் தொடர்பான தகவல்கள் அவர்களின் கருத்துகளை வடிவமைத்திருக்கும். எனது தலைமுறை 1960களில் நடைபெற்ற இனக் கலவரம் என்னும் அழியாத சுவடு களைத் தாங்கி நிற்கும். அதேநேரம் இப்போதைய தலைமுறையினர் கறுப்பின இயக்கம் போன்ற உலக விவகாரங்களின்பால் ஈர்க்கப்படுகின்றனர்.

“முந்திய தலைமுறையினர் இனம் பற்றியும் சமயம் பற்றியும் பேசும்போது அதிக எச்சரிக்கையைக் கடைப்பிடித்தனர். அவர் களின் கடந்த கால சிரமங்களும் கடின உழைப்புகளும் இப்போது நாம் அனுபவிக்கும் நல்லிணக்கத்தை சாதிக்க உதவின. இதுபோன்ற அம்சங்களில் இளையர்கள் மிகவும் வெளிப்படையாக உள்ளனர். மேலும் உணர்ச்சிகரமான விவகாரங்கள் பற்றி பேச அதிக விருப்பம் காட்டுகின்றனர்.

“நற்பண்புகள், கண்ணோட்டங்கள் காலப்போக்குடன் தொடர்புடையவை. இருப்பினும் நமது அமைதிச் சூழலை சுலபமாகக் கருதிவிடக்கூடாது என்பது மிகவும் முக்கியம். நமது இப்போதைய இளைய தலைமுறையினர் சிங்கப்பூரின் மரபுரிமையைக் காக்கக்கூடியவர்கள். எல்லாருக்குமான நல்லிணக்க சமுதாயத்தைக் கட்டிக்காக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவது அவசியம்,” என்று பிரதமர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.