டைசன் நிறுவனம் ஆட்குறைப்பு: சிங்கப்பூரில் 16 பேர் பாதிப்பு

கொவிட்-19 காரணமாக பயனீட்டாளர்களிடையே தேவை குறைந்து இருக்கிறது.  

இதன் காரணமாக  பிரிட்டனின் தொழில்நுட்ப நிறுவனமான டைசன், உலகம் முழுவதும் 900 பேரை ஆட்குறைப்பு செய்கிறது. 

அவர்களில் 600 பேர் பிரட்டனில் வேலை பார்ப்பவர்கள்.

அந்த  நிறுவனத்தின் அனைத்துலகத் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது.

இங்கு 16 பேர்  வேலை இழப்பார்கள் என்று தெரிய வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. 

ஆட்குறைப்பு செய்தாலும் முடிந்தவரை ஊழியர்களை வேறு வேலைகளில் அமர்த்த முயற்சி செய்வதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் டைசன் நிறுவனத்தில் சுமார் 1,500 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் 350 பேர் பொறியாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள்.

குப்பைகளை உறிஞ்சி தரையைச் சுத்தப்படுத்தும் சாதனம், தலை முடியை உலர வைக்கும் கருவி போன்றவற்றை உருவாக்கும் இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 14,000 பேர் வேலை பார்ககிறார்கள். 

அவர்களில் 4,000 பேருக்கும் மேற்பட்டவர்கள் பிரிட்டனில் வேலை பார்க்கிறார்கள்.

டைசன் நிறுவனம், இங்கு செயிண்ட் ஜேம்ஸ் மின்நிலைய வளாகத்தில் தனது புதிய தலைமையகத்தைக் கட்டி வருகிறது.

இந்தப் பணிகள் கொவிட்-19 காரணமாக மெதுவடைந்துள்ளன.

இங்கு இந்த நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.