சுடச் சுடச் செய்திகள்

மேலும் 40,000 பேர் வேலைக்குத் திரும்புவர்

கட்டுமானத் துறை மீண்டும் விரைவாகக் காலூன்ற உதவி

மனிதவள அமைச்சின் பதிவுபெற்றுள்ள வெளிநாட்டுக் கட்டுமான ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள், கட்டட, கட்டுமான ஆணையத்தின் அனுமதி பெறாமலேயே சில பணிகளை மீண்டும் தொடங்கலாம்.

கட்டட, கட்டுமான ஆணையத்தால் நேற்று அறிவிக்கப்பட்ட இந்த விதிமுறை மாற்றம், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் சிறிய அளவிலான கட்டட வேலைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

கட்டுமானத் துறை மீண்டும் விரைவாகக் காலூன்ற உதவும் நோக்கில் இந்த விதிமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், அதிகமான ஊழியர்களுடன் இயங்கக்கூடிய கட்டுமானத் தளங்களிலும் வளாகங்களிலும் வேலையைத் தொடங்குவதற்கு நிறுவனங்கள் கட்டட, கட்டுமான ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த விதிமாற்றத்தை அடுத்து, கூடுதலாக 40,000 ஊழியர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்ப முடியும்.

ஆறு வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் தனிமைப்படுத்தப்படும் இடங்களாகச் செயல்படும் 17 புளோக்குகள் தவிர மற்ற அனைத்து வெளிநாட்டு ஊழியர் விடுதிகளும் கொவிட்-19 தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டதாக மனிதவள அமைச்சு நேற்று முன்தினம் கூறிய நிலையில், இந்த விதிமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதிகபட்சம் பத்து வெவ்வேறு விடுதிகளில் ஊழியர்களைத் தங்க வைத்த பின்னரே நிறுவனங்கள் வேலையைத் தொடங்க முடியும் என்ற விதிமுறையும் அகற்றப்பட்டுவிட்டது.

வெவ்வேறு விடுதிகளைச் சேர்ந்த ஊழியர்கள் பணியிடங்களில் கலந்துறவாடும்போது கொரோனா தொற்றும் அபாயத்தைக் குறைக்கவும் அதேபோல பாதிக்கப்படும் விடுதிகளின் எண்ணிக்கையையும் குறைக்கவும் இலக்கு கொண்டு அவ்விதி நடைமுறைப்படுத்தப்பட்டது.

இப்போது எல்லா விடுதிகளும் கிருமித்தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், தங்களது ஊழியர்கள் பத்துக்கும் மேற்பட்ட விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு இருந்தாலும் நிறுவனங்கள் வேலையைத் தொடங்க முடியும். இருப்பினும், நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான தங்குமிடங்களின் எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருப்பதைத் தொடர வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தி இருக்கிறது.

முதலாளிகளும் தங்கும் விடுதி நடத்துநர்களும் தொடர்ந்து இணைந்து பணியாற்றி, பாதுகாப்பான வசிப்பிடச் சூழலையும் வெளிநாட்டு ஊழியர்களுக்கென பிரத்தியேகப் போக்குவரத்து ஏற்பாடுகளையும் உறுதிசெய்ய வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

“கட்டுமானத் தளங்களில் அதிகமான ஊழியர்கள் பணிபுரிய நேர்ந்தால், அவர்கள் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு இருப்பதையும் வெவ்வேறு தங்குமிடங்களில் வசிக்கும் அல்லது வெவ்வேறு வேலைகளைச் செய்யும் ஊழியர்கள் பணியிடங்களில் தங்களுக்குள் கலந்துவிடாமல் இருப்பதையும் ஒப்பந்ததாரர்கள் உறுதிசெய்ய வேண்டும்,” என்று ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.

விதிகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய தணிக்கைகளும் சோதனைகளும் அதிகரிக்கப்படும்.

இதற்கிடையே, ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஒரே முகவரியில் வசிக்கும் வகையில் கட்டட, கட்டுமான ஆணையம், மனிதவள அமைச்சு, பொருளியல் வளர்ச்சிக் கழகம் ஆகியவையும் மற்ற அமைப்புகளும் ஊழியர் தங்குமிட மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 43 வெளிநாட்டு ஊழியர் விடுதிகளைச் சேர்ந்த 160,000 ஊழியர்களை மறுகுடியமர்த்தும் பணியும் அதில் அடங்கும்.

ஏறக்குறைய 3,300 கட்டுமானத் தளத் திட்டங்களில் மீண்டும் பணிகளைத் தொடங்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது என்று கட்டட, கட்டுமான ஆணையம் குறிப்பிட்டது.

இன்னும் 22,500 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படும் இடங்களில் உள்ளனர். தனிமைப்படுத்திக்கொள்ளும் காலம் நிறைவுற்றதும் அவர்களிடம் மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon