புருணை, நியூசிலாந்து செல்ல அனுமதி

அடுத்த மாதத்தில் இருந்து புருணை, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குப் பொதுவான பயணங்களை மேற்கொள்ள முடியும்.

இருப்பினும், புருணை, நியூசிலாந்து நாடுகளுக்குச் செல்ல திட்டமிடுவோர் அந்நாடுகளில் உள்ள நுழைவு விதிமுறைகள் பற்றி தெரிந்துகொண்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

அதேபோல, தொலைதூரக் கல்வியை ஒரு தெரிவாக வழங்காத வெளிநாட்டுக் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களும் அந்நாடுகளுக்குச் சென்று கல்வியைத் தொடர அனுமதியளிக்கப்படும்.

கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இன்றைய மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பின்போது அதன் இணைத் தலைவரும் கல்வி அமைச்சருமான திரு லாரன்ஸ் வோங் இவற்றைத் தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு வரும் புருணை, நியூசிலாந்து நாட்டினருக்கு வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு வழங்கப்படாது. இங்கு வருவதற்குமுன் 14 நாட்கள் அவர்கள் தங்களது நாடுகளிலேயே தங்கி இருந்தால் மட்டுமே இது பொருந்தும்.

மாறாக, சிங்கப்பூர் வந்திறங்கியதும் விமான நிலையத்திலேயே அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனை முடிவு ‘கிருமித்தொற்று இல்லை’ என வந்தால் மட்டுமே அவர்கள் சிங்கப்பூருக்குள் நடமாட அனுமதிக்கப்படுவர்.

சிங்கப்பூர் வர விரும்பும் புருணை, நியூசிலாந்து நாட்டவர்கள், தங்களது பயணத் தேதிக்குமுன் ஏழு முதல் 30 நாட்களுக்குள் விமானப் பயண அனுமதியைப் பெற விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும். இங்கு இருக்கும்போது கொரோனா தொற்றுக்காக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால் அதற்கான கட்டணத்தை அவர்களே செலுத்த வேண்டும்.

அதேபோன்று, ஆஸ்திரேலியா (விக்டோரியா மாநிலம் தவிர்த்து), மக்காவ், சீனா, தைவான், வியட்னாம், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு வீட்டிலேயே இருப்பதற்கான காலம் 14 நாட்களில் இருந்து ஏழு நாட்களாகக் குறைக்கப்படுகிறது.

எல்லைக் கட்டுப்பாட்டுத் தளர்வைப் பொறுத்தமட்டில், மூன்று பிரிவுகளைக் கொண்ட கட்டமைப்பை சிங்கப்பூர் கொண்டிருப்பதாக திரு வோங் குறிப்பிட்டார்.

வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு வழங்கப்படாத பயணிகள், குறுகிய காலத்திற்குத் தங்களது வசிப்பிடங்களிலேயே இருப்பதற்கான உத்தரவைப் பெறும் பயணிகள், பிரத்தியேக வசிப்பிடங்களில் 14 நாட்கள் தங்கியிருக்க வேண்டிய பயணிகள் ஆகியவையே அம்மூன்று பிரிவுகள்.

“இம்மூன்று பிரிவுகளிலும் இடம்பெறும் நாடுகளின் பட்டியல் ‘கல்லில் வடிக்கப்பட்டது’ போல நிரந்தரமானதல்ல. அவ்வப்போது நிலைமையை மதிப்பிட்டு, அதில் மாற்றங்கள் செய்யப்படும்,” என்றார் அமைச்சர் வோங்.

மாணவர்கள் வெளிநாடு செல்ல அனுமதிப்பது குறித்துக் கருத்துரைத்த திரு வோங், “பல வெளிநாட்டுக் கல்வி நிலையங்களும் விரைவில் வகுப்புகளைத் தொடங்கவுள்ளன. இதனால் அந்தக் கல்வி நிலையங்களில் முழு நேரமாகப் பயிலும் சிங்கப்பூர் மாணவர்கள் அந்த நாடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்பதை அறிந்துள்ளோம்,” என்றார்.

புருணை, நியூசிலாந்து நாடுகளுக்குச் செல்வோரும் கல்வியைத் தொடர்வதற்காக வெளிநாடுகளுக்குச் செல்வோரும் ஒருவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் சிகிச்சைக்கு அரசாங்க மானியங்களைப் பெறவும் காப்புறுதிப் பாதுகாப்புக்கும் தகுதிபெறுவர்.

இருதரப்பு ஏற்பாடுகளின்கீழ் தொழில்ரீதியான, அதிகாரத்துவ, வேலை சார்ந்த அத்தியாவசியமான பயணங்களை மேற்கொள்ளலாம் என்றும் வேறு எந்தக் காரணத்திற்காகவும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சுகள்நிலை பணிக்குழு அறிவுறுத்தியுள்ளது.

“வெளிநாடுகளில் இருக்கும்போது பயணிகள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; நல்ல சுகாதாரப் பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்; உள்ளூர் நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்; உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைகளுக்குச் செவிமடுக்க வேண்டும்,” என்று அமைச்சர் வோங் கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!