நூறு வெள்ளி பயணத்துறை பற்றுச் சீட்டுகள்

உள்ளூர் சுற்றுலாத் தளங்களில் செலவிட 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் ஒவ்வொருவருக்கும் $100 மதிப்புடைய பயணத்துறை பற்றுச்சீட்டுகள் வரும டிசம்பர் மாதம் வழங்கப்படும். ‘சிங்கப்பூர்டிஸ்கவர்ஸ்’ பற்றுச்சீட்டை ‘சிங்பாஸ்’ வழி டிசம்பர் முதல் பயன்படுத்தத் தொடங்கலாம். நுழைவுச்சீட்டுகள் வாங்கும்போதும் ஹோட்டல்களில் தங்கும்போதும் இந்த பற்றுச்சீட்டை சிங்கப்பூரர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்பற்றுச்சீட்டு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. நிரந்தரவாசிகள் இப்பற்றுச்சீட்டுகளுக்குத் தகுதிபெறமாட்டார்கள்.

பற்றுச்சீட்டுக்குத் தகுதிபெறும் ஒவ்வொரு சிங்கப்பூரரும், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்காக சுற்றுலாத்தள மற்றும் சுற்றுலாப் பயண நுழைவுச்சீட்டுகளை வாங்கும்போது அதிகபட்சமாக ஆறு நுழைவுச்சீட்டுகள் வரை சலுகை விலையில் பெற்றுக்கொள்ளலாம்.அதன்படி ஒவ்வொரு நுழைவுச்சீட்டுக்கும் $10 தள்ளுபடி இருக்கும். இந்த சலுகையும் இவ்வாண்டு டிசம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடையும். பற்றுச்சீட்டு குறித்து நேற்று விவரங்களை அறிவித்தார் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங்.விடுமுறை காலமான ஜூன் மாதத்தையும் டிசம்பர் மாதத்தையும் உள்ளடக்கும் விதமாக இந்த பற்றுச்சீட்டுகள் வழங்கும் காலகட்டமும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சான், இந்த இடைப்பட்ட மாதங்களில் சிங்கப்பூரர்கள் தங்களின் சுற்றுப்பயணத் திட்டங்களை தேவைக்கேற்ப வகுத்துக்கொள்வர் என எதிர்பார்ப்பதாக கூறினார். இந்நிலையில் இவ்வாறு பயணத்துறை பற்றுச்சீட்டுகளை வழங்குவது ஒருவகை சமூக ஆதரவுத் திட்டம் கிடையாது என்று கூறினார் அவர்.

“இது பொருளியல் சார்ந்த ஒரு திட்டம். நம் சுற்றுலாத் தளங்கள் அவற்றின் ஆற்றலைப் பேண இது உதவும். இந்த ஆற்றல் பல ஆண்டுகளின் விளைவாக ஏற்பட்டது. இதற்கிடையே சுற்றுலாத் தளங்கள் தங்களின் திறனையும் ஒருங்கிணைத்துக் கொள்ள முடியும்,” என்று ஜூரோங் பறவைப் பூங்காவுக்குச் சென்றிருந்த திரு சான் செய்தியாளர்களிடம் கூறினார். சுற்றுப்பயணத் துறைக்கு உந்துதலாக இருக்கும் வகையில் அரசாங்க முயற்சியின் ஒரு பகுதியாக $320 மில்லியன் மதிப்பிலான ‘சிங்கப்பூர்டிஸ்கவர்ஸ் பற்றுச்சீட்டுகள் திட்டம்’ சென்ற மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த $10 பற்றுச்சீட்டுகளை உரிமம் பெற்ற ஹோட்டல்கள், உல்லாச சுற்றுலாத் தளங்கள், உள்ளூர் சுற்றுலா நிறுவனங்களின் ஏற்பாட்டிலான சுற்றுப்பயணங்கள் ஆகியவற்றுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.<அத்துடன் சிங்கப்பூர் பயணத்துறை கழகத்தின் ஒப்புதல் பெற்று இயங்கும் இடங்களாகவும் இருக்க வேண்டும். தற்போது 214 ஹோட்டல்கள், 40 சுற்றுலாத் தளங்கள், 438 சுற்றுப்பயணத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு கழகம் பச்சை கொடி காட்டிவிட்டது. பாதுகாப்பு நிர்வாக அம்சங்களுடன் இவை இயங்கத் தொடங்கியுள்ளன.

உள்ளூர்வாசிகள் சிங்கப்பூரிலேயே விடுமுறையைக் கழிக்கவும் உள்ளூர் வர்த்தகங்களுக்கு ஆதரவு அளிக்கவும் $45 மில்லியன் மதிப்பிலான ‘சிங்கப்பூர்டிஸ்கவர்ஸ்’ விற்பனை இயக்கம் ஜூலை மாதத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்துக்குத் துணையாக இந்த $100 பற்றுச்சீட்டு வழங்கப்படுகிறது.

இதற்கிடையே தற்போது ஒரு சமயத்தில் 25% பலத்தில் மட்டுமே இயங்க முடியும் என்ற கட்டுப்பாடு உள்ள சுற்றுலாத் தளங்கள், 50 விழுக்காடாக அதிகரித்துக்கொள்ள நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

வெளிப்புறக் காட்சிகளில் தற்போது 50 பேர் மட்டுமே பங்கேற்கலாம். இதையும் 250ஆக உயர்த்த கழகத்தின் அனுமதியை நாடலாம். அனைத்து சுற்றுலாத் தளங்களும் இணைய முன்பதிவு முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளதால் வருகையாளர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும் என்றது கழகம்.

பயணத்துறை பற்றுச்சீட்டின் பயன்பாடு குறித்த தகவல்கள்:

பற்றுச்சீட்டை ‘சிங்பாஸ்’ மூலம் டிசம்பர் முதல் பயன்படுத்தலாம்.

 பற்றுச்சீட்டை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பயன்படுத்திட வேண்டும்.

 பற்றுச்சீட்டு பத்து வெள்ளி என்ற கணக்கில் வழங்கப்படும்.

 சிங்கப்பூரர்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருந்தால் பற்றுச்சீட்டுக்குத் தகுதிபெறுவர்.

 பெரியவர்கள் தங்களின் பற்றுச்சீட்டைப் பயன்படுத்தி 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்காக சலுகை விலையில் நுழைவுச்சீட்டுகள் வாங்கலாம்.

 பற்றுச்சீட்டை உரிமம் பெற்ற ஹோட்டல்கள், உல்லாச சுற்றுலாத் தளங்கள், உள்ளூர் சுற்றுப்பயணங்கள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம்.

 ‘யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூர்’, ஜூவல் சாங்கி விமான நிலையத்தின் ‘கெனோபி பார்க்’, புலாவ் உபின் மற்றும் கம்போங் கிளாம் பகுதிகளுக்கான சுற்றுப்பயணங்கள் போன்றவற்றுக்கு பற்றுச்சீட்டு பயன்படுத்தப்படலாம்.

 கூடுதல் விவரங்கள் நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்படும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon