போலிஸ் அதிகாரிக்கு உதவிய இரண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கு அங்கீகாரம்

கத்தியைக் கையில் ஏந்தியபடி கலவரம் உண்டாக்கிய ஆடவர் ஒருவரைக் கைது செய்ய உதவிய இரண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்கு, பொதுநல உணர்வுமிக்க செயலுக்கான விருதை நேற்று ஜூரோங் போலிஸ் பிரிவு வழங்கியது. சுவா சூ காங் அவென்யூ 3, பிளோக் 409 அருகே செப்டம்பர் 29ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைப் பற்றி அன்று நண்பகல் போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. இது தொடர்பான காணொளியும் சமூக ஊடகங்களில் பரவி வந்தது.

விருதுபெற்ற திரு பஞ்சவர்ணம் சுரே‌ஷ், 43, திரு ரவி சந்தோ‌ஷ்குமார், 25, ஆகிய கட்டுமானத் துறை ஊழியர்கள் இருவரும் சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு அருகே வேலை செய்துகொண்டிருந்தார்கள். பெண் ஒருவர் உதவி கோரி அலறுவதைக் கேட்டு இருவரும் விரைந்தனர்.

“அந்த நேரத்தில் நமக்கு என்ன பாதிப்பு வரும் என்பதை யோசிக்கவே இல்லை. அவரை எப்படியாவது காப்பாற்றவேண்டும். அந்த ஓர் எண்ணம் தான் இருந்தது. சம்பவம் முடிந்தபின் ஓர் உயிரைக் காப்பாற்றிய மனநிறைவு கிடைத்தது,” என்றார் சுரே‌ஷ்.

இரண்டு வெளிநாட்டு ஊழியர்களைப் போலவே தமது போலிஸ் பணியில் இல்லாத நேரத்திலும் உதவிக்கு அழைத்த அவலக் குரலைக் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தார் போலிஸ் அதிகாரியான சார்ஜண்ட் இஸீகியல் லட்சுமணன் கே சாமிநாதன். பணிநேரமாக இல்லாததால் ஆயுதங்கள் எதுவும் அந்த சமயத்தில் இஸீகியலிடம் இல்லை.

“வீட்டில் என் மின்னஞ்சல்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. என்ன நடந்தது என்று அறிய உடனே கீழே சென்றேன். பொதுமக்களைச் சேர்ந்த ஒருவரிடம் விசாரித்தேன். நிலைமை ஆபத்தானதாக இருப்பதை அப்போது அறிந்தேன். கையில் கிடைத்ததை வைத்து நிலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முனைந்தேன்,” என்றார் திரு இஸீகியல், 42.

அந்த சூழ்நிலையில் விரைந்து உதவ வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாகவும் அருகே இருந்த வெளிநாட்டு ஊழியர்களிடம் தற்காப்புக்காக கையில் எதையாவது எடுத்துக்கொள்ளச் சொன்னதாகவும் சம்பவத்தை நினைவுகூர்ந்தார் திரு இஸீகியல்.

அதன்படி கலவரத்திற்குக் காரணமான 23 வயது ஆடவரைக் கையாள கயிறு, மண்வெட்டி ஆகிய பொருட்களை இரு ஊழியர்களும் எடுத்து வந்தனர்.

பிறகு ஆயுதம் ஏந்திய ஆடவரிடம் இஸிகியல் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர் திரு சுரே‌ஷ், திரு ரவி.

ஆயுதம் ஏந்திய ஆடவர் தனது கையை வெட்டிக்கொள்ள முயற்சி செய்தார். அவர் கவனம் அதில் இருப்பதை அறிந்து, கத்தி இருந்த கையை இஸீகியல் பிடித்தார். மற்றொரு கையை ஊழியர்கள் இருவரும் பிடித்தனர். பின்னர் அந்த ஆடவரின் இரு கைகளையும் கயிற்றால் கட்டினர். சம்பவ இடத்துக்கு வந்த போலிசார் ஆடவரைக் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த விசாரணை நடந்து வருகிறது.

போலிசார் வருவதற்கு முன்பே சமூகத்தில் இருப்பவர்கள் செயலில் இறங்கி மற்றவர்களைப் பாதுகாப்பது, போலிசாருக்கும் சமூகத்திற்கும் இடையே உள்ள நெருங்கிய பங்காளித்துவத்தைப் பறைசாற்றுகிறது என்று குறிப்பிட்டார் போலிஸ் துணை ஆணையரும் ஜூரோங் போலிஸ் பிரிவின் தளபதியுமான திரு தேவ்ராஜன் பாலா.

“ஆயுதம் ஏந்தியவரைக் கட்டுப்படுத்தி மற்றவர்களுக்கு மேலும் ஆபத்து நேராமல் தடுத்த சம்பவத்தில் சார்ஜண்ட் இஸீகியலும் இரண்டு ஊழியர்களும் தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

“தேவைப்படுவர்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டவர் உதவுவது இது முதல் முறை அல்ல. தன்னலமற்ற அவர்களின் செயல் பாராட்டுக்குரியது,” என்றார் திரு தேவ்ராஜன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!