தீவிரவாத சிந்தனைகொண்ட மலேசியர் சிங்கப்பூரில் கைது, நாடு கடத்தல்; சிங்கப்பூரரான மனைவிக்கு கட்டுப்பாட்டு ஆணை

தீவிரவாதப்போக்குடன் இருந்த 33 வயது மலேசிய துப்புரவாளர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டு, பின்னர் மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

சிங்கப்பூரரான தம் மனைவியுடன் சேர்ந்து சிரியாவுக்குச் சென்று ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுடன் இணைந்து வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டிருந்த முகமது ஃபிர்டாஸ் கமால் இன்ட்ஸாம் எனும் அந்த ஆடவர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூரின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை இன்று (பிப்ரவரி 9) தெரிவித்தது. இருப்பினும், சிங்கப்பூரில் வன்முறையில் ஈடுபடுவதற்கான எந்த குறிப்பிட்ட திட்டமும் அவர் தீட்டியதற்கான அறிகுறிகள் இல்லை என்று கூறப்பட்டது.

சமய ஆசிரியராக இருந்த அவரது 34 வயது மனைவியையும் அவர் தீவிரவாத சிந்தனைக்கு உட்படுத்தியதையடுத்து, அவரும் தம் கணவருடன் சேர்ந்து சிரியாவுக்குச் செல்ல விரும்பினார் என்று குறிப்பிட்ட உள்நாட்டு பாதுகாப்புத் துறை, அந்த மாதுக்கு ஈராண்டுகளுக்கு கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. பயிற்றுவிப்பதற்கு அனுமதி அளிக்கும் அவரது அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டில் ஃபிர்டாஸ் தம்முடைய சமயம் சார்ந்த புரிதல்களை ஆழப்படுத்திக்கொள்ளும் நோக்கில் இணையத்தில் பயணித்தபோது, அவர் ஐஎஸ் ஆதரவு தகவல்களைக் காண நேர்ந்ததென விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து அத்தகைய கருத்துகளை வாசித்ததையடுத்து, ஐஎஸ் அமைப்பானது இஸ்லாத்துக்காக போராடுகிறது எனவும் இஸ்லாமிய கலிஃபாட்டை உருவாக்க அது வன்முறையில் இறங்குவதையும் அவர் நியாயப்படுத்திக்கொண்டார் என்றது உள்நாட்டு பாதுகாப்புத் துறை.

2010ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ‘ஐஎஸ் கலிஃபாட்’டின் வீழ்ச்சிக்குப் பிறகும் அந்த பயங்கரவாத அமைப்புக்கு தொடர்ந்து ஆதரவாளராக இருந்து வந்த ஃபிர்டாஸ், அந்த அமைப்பின் ஆயுதமேந்திய போராட்டத்துக்கு ஆதரவான கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றி வந்தார்.

அந்தக் குழுவுக்கு தன்னுடைய விசுவாசத்தைத் தெரிவிக்கும் விதத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஐஎஸ் அமைப்பின் கொடி ஒன்றை உருவாக்கிய ஃபிர்டாஸ், அதனை தம் வீட்டில் தொங்கவிட்டார்.

சிரியாவுக்குச் செல்வது மட்டுமின்றி, முஸ்லிம்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நாடுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தவும் விருப்பம் கொண்டிருந்தார் ஃபிர்டாஸ். “தெய்வீக பரிசுகளைப் பெறுவதற்காக இத்தகைய போர்தொடுத்து அதில் மாண்டுபோகவும் விருப்பம் கொண்டிருந்தார் ஃபிர்டாஸ்,” என உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

இந்த விசாரணைகளின் தொடர்பில் மலேசிய சிறப்பு பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டது சிங்கப்பூரின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை.

விசாரணை முடிந்த பிறகு, ஃபிர்டாசின் வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டு, மலேசிய சிறப்புப் பிரிவு அதிகாரிகளிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார்.


தீவிரவாத சிந்தனைக்கு உட்படுத்தப்பட்ட மனைவி:

கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்துகொண்ட பிறகு, தம் மனைவி ருக்கையா ராம்லியையும் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவான சிந்தனைகளுக்கு உட்படுத்தினார் ஃபிர்டாஸ்.

இல்லத்தரசியும் சமயப் பள்ளியின் பகுதிநேர ஆசிரியருமான அவருக்கு கடந்த் 2017ஆம் ஆண்டில் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் வழங்கிய பயிற்றுவிப்பு அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு ஆணையின்கீழ் அவர் சமய வகுப்புகள் எடுக்க அனுமதி இல்லை.

“தொடக்கத்தில் தயங்கினாலும், நாளடைவில் கணவரின் கருத்துகளுக்கு செவிசாய்க்கத் தொடங்கினார் ருக்கையா. மேலும் தம் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு கணவருடன் சிரியாவுக்குச் செல்லவும் தயாராக இருந்தார் அவர். அங்கு தம் குடும்பத்தை கவனித்துக்கொள்ளவது, காயமடைந்த ஐஎஸ் போராளிகளுக்கு உதவுவது போன்ற பணிகள் தமக்கிருக்கும் என்று எண்ணினார்,” என்றது உள்நாட்டு பாதுகாப்புத் துறை.

தமது ஐஎஸ் ஆதரவு கருத்துகளை ருக்கையா மற்றவர்களிடம் பரப்ப முற்படவில்லை என்று கூறப்படுகிறது. தீவிரவாதப் போக்கிலிருந்து அகல, அவருக்கு சமய ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

கட்டுப்பாட்டு ஆணையின்கீழ், அவர் வீடு, வேலையை மாற்ற முடியாது; அதிகாரிகளின் அனுமதியின்றி சிங்கப்பூரை விட்டு வெளியேற முடியாது; பொது அறிக்கைகள் விடுக்க முடியாது, அதிகாரிகளின் அனுமதி இன்றி வேறு அமைப்புகளில் இணைய முடியாது.


அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!