பள்ளிவாசல்களில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குத் திட்டமிட்டிருந்த 16 வயது சிங்கப்பூர் இளையர் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தடுத்து வைப்பு

சிங்கப்பூரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களைத் தாக்கி, தொழுகையில் ஈடுபட்டிருப்பவர்களைக் கொல்லத் திட்டம் தீட்டிய 16 வயது மாணவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரரான அந்த மாணவர், கிறைஸ்ட்சர்ச்சில் தாக்குதல்கள் நடந்த இரண்டாவது ஆண்டு நிறைவான, வரும் மார்ச் மாதம் 15ஆம் தேதி அந்தத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

இந்திய இனத்தைச் சேர்ந்த புரோட்டஸ்டன்ட் கிறித்துவரான அந்த மாணவர், வலதுசாரி தீவிரவாதக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முதல் நபர் எனவும் பயங்கரவாதம் தொடர்பான செயல்களுக்கு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இதுவரை தடுத்து வைக்கப்பட்டவர்களுள் ஆகக் குறைந்த வயதுடையவர் எனவும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை இன்று (ஜனவரி 27) தெரிவித்தது.

உயர்நிலைப் பள்ளி மாணவரான அந்த இளையர், வெட்டுக்கத்தியைக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக இரண்டு பள்ளிவாசல்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த விரிவாகத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

செம்பவாங் அசையாஃபா பள்ளிவாசல், உட்லண்ட்சில் இருக்கும் யூசோஃப் இஷாக் பள்ளிவாசல் ஆகிய இரண்டையும் தாக்குதலுக்கு அவர் குறிவைத்திருந்ததாகக் கூறப்பட்டது.

கிறைஸ்ட்சர்ச்சில் தாக்குதல் நடத்திய பிரென்டன் டேரன்டால் ஈர்க்கப்பட்ட அந்த இளையர், ‘ஃபிளேக்’ (flak) சட்டை ஒன்றை வாங்கினார். கேரசல் இணையத்தளத்தில் அரிவாள் ஒன்றை வாங்கத் திட்டமிட்டதுடன் அந்த பயங்கரவாதத் தாக்குதலை நேரடியாக சமூக ஊடகங்களில் ஒளிபரப்பவும் திட்டமிட்டிருந்தார்.

“இஸ்லாமிய சமயத்தின் மீது கடும் வெறுப்புக் கொண்ட அவ்விளையர், வன்முறையின் மீது மோகம் கொண்டு சுய தீவிரவாத சிந்தனையை வளர்த்துக்கொண்டார். நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் இரு பள்ளிவாசல்களில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களை நேரலையாகப் பார்த்த அவர், தாக்குதலை நடத்திய பிரென்டன் டேரன்டைப் பற்றி படித்து தெரிந்துகொண்டார்,” என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

மேலும், ஐஎஸ் அமைப்பின் பிரசாரக் காணொளிகளைப் பார்த்து, ஐஎஸ் அமைப்பு இஸ்லாத்தைப் பிரதிநிதிப்பதாகவும் இஸ்லாத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் கொல்ல இஸ்லாம் அழைப்புவிடுப்பதாகவும் அவ்விளையர் தவறான முடிவுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட இரண்டு பள்ளிவாசல்களையும் பற்றி இணையம் வழி செய்திகளைத் திரட்டிய அவ்விளையர், இரு இடங்களுக்கும் இடையிலான பயணத்துக்கு வாகனத்தில் செல்லத் திட்டமிட்டார். அதற்காக ஒரு வாகனத்தைத் தயார் செய்யவும் அவர் திட்டமிட்டதாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

இணையம் வழியாக வாங்கிய மேற்சட்டையில் வலதுசாரி தீவிரவாத குறியீடுகளை அமைத்து, அந்தச் சட்டையை தாக்குதலின்போது அணிந்துகொள்ளத் திட்டமிட்டார். அந்தச் சட்டையில் கைபேசியை வைப்பதற்கு ஏதுவாக ஒரு பகுதியையும் ஏற்படுத்தி, அதன் மூலம் தாக்குதலை நேரலையாக்கத் திட்டமிட்டார் இளையர்.

வெட்டுக்கத்தியைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தும் முடிவுக்கு வருவதற்கு முன்பு, அவர் பல்வேறு தெரிவுகளையும் ஆராய்ந்ததாகக் கூறப்பட்டது.

முதலில் துப்பாக்கி ஒன்றை வாங்கத் திட்டமிட்ட அவர், சிங்கப்பூரின் கடுமையான துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டங்களைக் கருத்தில் கொண்டு, பின்னர் அதனைக் கைவிட்டார்.

தாக்குதலுக்கு வெடிகுண்டைப் பயன்படுத்துவது, பெட்ரோலைக் கொண்டு பள்ளிவாசல்களில் தீ மூட்டுவது போன்ற திட்டங்களையும் தீட்டி, பின்னர் அவற்றைத் தருவிப்பது, தனது சொந்த பாதுகாப்பு போன்ற காரணங்களால் அந்தத் திட்டத்தையும் கைவிட்டார்.

இறுதியில் வெட்டுக்கத்தியை ஆயுதமாகத் தேர்ந்தெடுத்த அவர், தாக்கப்படுபவர்களின் கழுத்து, மார்புப் பகுதிகளைக் குறிவைக்கத் திட்டமிட்டார்.

உள்நாட்டு பாதுகாப்புத் துறையால் அவர் கைது செய்யப்பட்டபோது அவர் வெட்டுக்கத்தியை வாங்கியிருக்கவில்லை.

இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பாகவே கைது செய்யப்படலாம், அல்லது தாக்குதல் நடத்திய பிறகு போலிசாரால் சுட்டுக் கொல்லப்படலாம் என எதிர்பார்த்ததாக அந்த இளையர் விசாரணையின்போது தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இதுவரை மேற்கொண்ட விசாரணையில், அவர் தனித்து செயல்பட்டதாகவே தெரியவந்துள்ளது. அவர் மற்றவர்களை ஈர்க்கவோ அல்லது தன்னுடைய தாக்குதல் திட்டங்களில் மற்றவர்களை ஈடுபடுத்தவோ இல்லை.

அவரது குடும்ப உறுப்பினர்களோ அல்லது அவரது சமூகத் தொடர்புகளோ இந்தத் தாக்குதல் திட்டங்கள் பற்றியோ அல்லது இஸ்லாம் மீதான அவரது ஆழ்ந்த வெறுப்பு பற்றியோ அறிந்திருக்கவில்லை என உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

“தீவிரவாதக் கருத்துகள், இன, சமய வேறுபாடின்றி, சிங்கப்பூரர்களை சுய தீவிரவாதத்துக்கு உட்படுத்த முடியும் என்பதை இச்சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது. நமது வாழ்க்கை முறைக்கும் நமக்கும் இது ஒரு அச்சுறுத்தல்,” என்று குறிப்பிட்ட உள்நாட்டு பாதுகாப்புத் துறை, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து சந்தேகப்படும்படியான பொருள்கள், தனிநபர்கள் பற்றி உடனடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு 999 என்ற எண்ணில் அழைக்கலாம், அல்லது 71999 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் அல்லது SGSecure செயலி வழி தொடர்பு கொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!