அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்கும் மருத்துவமனைகள்

சிங்கப்பூரில் சமூக அளவில் கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்திருப்பதாலும் டான் டோக் செங் மருத்துவமனையில் புதிய கிருமித்தொற்றுக் குழுமம் உருவாகியிருப்பதாலும், அவசரமற்ற அறுவை சிகிச்சைகளையும் மருத்துவமனைகளில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதையும் ஒத்திவைக்குமாறு சுகாதார அமைச்சு அனைத்து மருத்துவமனைகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.

அவ்வாறு செய்வதன் மூலம் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் உள்ள வளங்கள் கட்டிக்காக்கப்படும் என்றும் அமைச்சு விவரித்தது.

அவசரமற்ற நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களின் மருத்துவரைக் காண்பதும் ஒத்தி வைக்கப்படும்.

டான் டோக் செங் மருத்துவமனையின் வார்டு 9Dல் உள்ள தாதி ஒருவருக்கு கிருமித்தொற்று இருப்பது ஏப்ரல் 28ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டவுடன் அம்மருத்துவமனையில் கிருமித்தொற்றுக் குழுமம் உருவானது.

அன்றிலிருந்து அக்குழுமத்தில் 34 பேர் சேர்ந்துள்ளனர். அவர்களில் ஒருவரான வார்டு 9Dல் சிகிச்சை பெற்று வந்த 88 வயது மாது கடந்த வாரம் மாண்டார்.

“மருத்துவக் கவனிப்பு தேவைப்படும் எந்த நோயாளியையும் மருத்துவமனைகள் திருப்பி அனுப்பாது,” என்றும் கூறிய அமைச்சு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவமனைகளுக்கு வரும் வருகையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்றும் தெரிவித்தது.

அவர்களில் டான் டோக் செங் மருத்துவமனைகளில் நோயாளிகளைச் சந்தித்தவர்களும் மருத்துவமனைகளுக்கு வருகையை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

டான் டோக் செங் மருத்துவமனையில் புதிய நோயாளிகளைச் சேர்த்துக்கொள்வதை அம்மருத்துவமனை அடுத்த அறிவிப்பு வரும் வரை படிப்படியாக நிறுத்திக்கொள்ளும் என்றும் சுகாதார அமைச்சு இன்று (மே 3) தனது அறிக்கையில் கூறியது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவ வாகனங்களில் கொண்டு செல்லப்படும் நோயாளிகள் மற்ற பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அது கூறியது.

டான் டோக் செங் மருத்துவமனையில் நிபுணத்துவ வெளிநோயாளி கவனிப்புச் சேவைகள் அவசரமில்லாத நோயாளிகளுக்கு ஒத்திவைக்கப்படும். ஒருவேளை தனிப்பட்ட நிபுணத்துவ கவனிப்பு தேவைப்படுவோரை கிருமித்தொற்றுக் குழுமத்தில் இல்லாத பணியாளர்கள் கவனிப்பார்கள்.

டான் டோக் செங் மருத்துவமனை நோயாளிகள் தற்போது மற்ற மருத்துவமனைகளை நாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கவனிப்பு சேவைகளை அதிகரிக்குமாறு அமைச்சு அவற்றைக் கேட்டுக்கொண்டுள்ளன.

இன்று (மே 3) சில மருத்துவமனைகள், டான் டோக் செங் மருத்துவமனையில் உள்ள சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கு உதவும் வகையில் தங்கள் மருத்துவர்கள், தாதியர், துணை சுகாதாரப் நிபுணர்கள் ஆகியோரை அங்கு அனுப்பின என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!