விசை: வரலாற்றுப் புதினத்தின் சவால்கள் 

காலப்போக்கில் நான் ஒன்றைப் புரிந்து கொண்டேன், சுவாரசியமான பொய்களை நெய்வதற்காக நீங்கள் நாவலாசிரியர் ஆக முடியாது, நீங்கள் உண்மை கூற வேண்டும் என்பதற்காகவே நாவலாசிரிய ராக இயலும். – ஹிலாரி மாண்டெல்
வரலாற்றுப் புனைவுகளுக்கான தேவை என்ன? வரையறைகள் எவை? சவால்கள் என்னென்ன? வரலாற்றுப் புனைவு என்றொரு பொத்தாம்பொதுவான வரையறை கொண்டாலும் அதனுள் பல கிளைகள் உண்டு. ஒரு காலகட்டத்தின் நுண்வரலாற்றைச் சொல்வது என்பது பெரும்பாலான யதார்த்தவாத நாவல்களின் தன்மை. மிகச் சிறந்த உதாரணம் தால்ஸ்தாயின் ‘போரும் வாழ்வும்’. தமிழில் அசோகமித்திரனின் 18ஆம் அட்சக்கோடு ஒரு முக்கியமான நாவல். சமூக, அரசியல் மாற்றத்தை கதை மாந்தர்களின் அகப் பரிணாமம் வழியாக சித்திரிப்பவை. இவ்வகை நாவல்களின் முதன்மை நோக்கம் வரலாற்றை விசாரணை செய்வது அல்ல. 
தமிழில் இவ்வகையான கதைகளே பெரும்பான்மை. ‘மணல் கடிகை’ ‘ஆழி சூழ் உலகு’ ‘இருபது வருடங்கள்’ ‘புயலிலே ஒரு தோணி’ என ஒரு பட்டியலை இடலாம். சிங்கப்பூர் மலேசிய சூழலில் தோட்டக் காட்டின் வரலாறு, சிதைவு மற்றும் உருமாற்றத்தை சொல்லும் சீ. முத்துசாமியின் நாவல்களை முக்கிய மானவையாகச் சொல்லலாம். ஈழத்தில் போரின் பின்புலத்தில் உருவாகி வந்த ‘ஆதிரை’ மிக முக்கியமான ஆக்கம். வரலாற்றுப் புனைவு என கறாராக வரையறை செய்தோம் என்றால் வெகு சில புனைவுகளே எழுதப்பட்டுள்ளதை உணர்ந்துகொள்ள முடியும். அதிலும் சிறுகதைகள் என மேலும் நம் வரையறையை சுருக்கினால் வெகு சில கதைகளே எஞ்சும். 
ஹிலாரி மாண்டெல் இருமுறை புக்கர் விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் எனும் பெருமைக்குரியவர். அவருடைய வரலாற்றுப் புனைவுகள் மத்தியகால ஆங்கிலேய அரசை மையமாகக் கொண் டவை, குறிப்பாக ஆங்கிலேய அரசர் எட்டாம் ஹென்றி மற்றும் டூடர் வம்சாவளியினரின் காலகட்டத்தைச் சித்திரிப்பவை. வரலாற்றுப் புனைவுகள் சார்ந்து அவர் ஆற்றிய ரெய்த் உரை சில முக்கியமான சிந்தனைகளை எழுப்பியது. 

‘புனைவு, சரிதை, வரலாறு முரணானவை அல்ல’
வரலாற்று ஆசிரியருக்கும் புனைவு எழுத்தாளனுக்கும் இடையிலான வேறு பாடு பற்றி விவாதிக்கும்போது, “வரலாற்று ஆசிரியன் நடுநிலைக்காக போராடுகி றான், ஆனால் நாவலாசிரியருக்கு அது ஒரு சிக்கல் அல்ல. அவனுடைய பாத்திரங்களின் பின் ஒளிந்துகொள்ள முடியும்.” என்கிறார். 
வரலாற்று ஆசிரியன் நடுநிலையை விழைகிறான், அதை நெருங்குகிறான், ஆனால் முழுக்க நடுநிலை என்பது சாத்தியமா? வரலாற்று ஆசிரியன், அவனுக்குக் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு நிகழ்வுகளின் தொடர்ச்சியைக் கட்டமைக்கிறான், அதற்கொரு திசையை அளிக்கிறான், நிகழ்வுகளின் நோக்கங் களை ஊகிக்கிறான். மென்மையான அளவில் என்றாலும் இங்கு புனைவுத் தன்மை தென்படுகிறது. 
எனவே, புனைவு, சரிதை, வரலாறு மூன்றும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல எனும் பார்வையை முன்வைக்கிறார். “வரலாற்று ஆசிரியன், வாழ்க்கைச் சரிதை எழுத்தாளன், புனைவெழுத்தாளன் வெவ்வேறு நெருக்கடிகளுக்குள் இயங்கு கிறார்கள், எனினும் அவை எதிரெதி ரானவை அல்ல, ஒன்றையொன்று நிரப்புபவை.” 
தூய வரலாறு, தூய புனைவு என ஏதுமில்லை என்பதே அவருடைய வாதத்தின் மையமாக இருக்கிறது.

‘வரலாற்றுத் தடங்களை அழிப்பதே கடும் தண்டனை’ 
நடுகல் துவங்கி நம் பண்பாட்டில் நினைவுகூர்தல் முக்கிய பங்காற்றுகிறது. அடக்குமுறை அரசுகள் துரோகிகளுக்கு அளிக்கும் மிகக் கொடூரமான தண்டனை என்பது மரணம் அல்ல, வரலாற்றுத் தடங்களை அழித்தல். மனிதன் வாழ்ந்து மறைந்த பின் விட்டுச்செல்வது வரலாற்றை மட்டுமே. அது எத்தனை எளிமை யானதாகவும் சாதாரணமாகவும் இருந் தாலும் கூட. அதையும் அவனிடமிருந்து பிடுங்குவது என்பது வாழ்வு நோக் கத்தைச் சிதைப்பது, வாழ்க்கையின் அர்த்தப்பாட்டை அழிப்பது. 
ஹிலாரி நினைவுகூர்தலின் அரசிய லைப் பற்றி பேசுகிறார். அதிலுள்ள தேர்வுகள் அசலான உண்மை அறிதலை விழைவாகக் கொண்டவையா, எனும் கேள்வி முக்கியமானது. 
நினைவுகூர்தல் சில சமயங்களில் உண்மையை நாடுகிறது, சில சமயங்களில் நமக்கு வாகான மாயத்தோற்றத்தைத் தேடுகிறது என்கிறார். தனி மனிதர்களாக துயரத்தினாலோ அல்லது தேவையி னாலோ நாம் கடந்தகால மனிதர்களை மீட்கிறோம். ஒரு சமூகமாக நம் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப ஒரு கடந்த காலத்தை நாடுகிறோம். இனக்குழுவாக, தேசமாக நாம் நம் கடந்தகால தொன்மங்களைத் தேடுகிறோம், கடந்த காலப் பெருமைகளையோ அல்லது துயரங் களையோ அதன் அடிநாதமாக மீட்க முயல்கிறோம், ஆனால் அரிதாகவே சமரசமற்ற உண்மையின்பாற்பட்டு கடந்த காலத்தை அணுகுகிறோம் என்கிறார். 

வரலாறும் புனைவும் கலக்கும் 
புள்ளி எது?
வரலாறும் புனைவும் கலக்கும் புள்ளிகள் அவருடைய உரையின் மிக முக்கியமான பகுதி. எந்தெந்த தளங்களில் புனைவு செயல்பட முடியும்? எந்த அளவுக்கு வரலாற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது போன்ற கேள்விகளை அவர் எதிர்கொள்கிறார். புற உலகைக் கச்சிதமாக கட்டமைப்பதற்கு வரலாற்றுத் தகவல்கள் தனக்கு உதவு கின்றன என்கிறார். 
நிகழ்வுகள் திட்டவட்டமாகப் புலப் படுகின்றன, ஆனால் பாத்திரங்களின் உணர்வு மோதல்களை, நாடகீயத் தருணங்களை, அலைக்கழிப்பை, புனைவைக் கொண்டு நிரப்புகிறேன் என்கிறார். 
வரலாற்றுச் சான்றுகளில் உள்ள இடைவெளிகள், மௌனங்கள் தன்னை நாவலாசிரியர் ஆக்கின என்கிறார். எனினும் ‘எனது நிலையை கேள்விக்குட்படுத்தும் சூழலை நான் விரும்புவதில்லை என்பதால் நான் இட்டுக் கட்டுவதில்லை, ஒருவழியாக என்னை திருப்திப்படுத்தும் நடுவாந்திரமான பாதை யைக் கண்டடைந்தேன். ஒரு மனிதனின் உளக் கொந்தளிப்பை நான் கற்பனை செய்துவிட முடியும், ஆனால் அவனுடைய வசிப்பறையின் சுவர்தாளின் நிறத்தை ஒருபோதும் இட்டுக்கட்ட மாட்டேன்.” 
வரலாற்று ஆசிரியர்கள் சான்றுகளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதில் பயிற்சி உடையவர்கள், நாவலாசிரியர் இக்கலையை இனிதான் சரியாக கற்க வேண்டும் என்கிறார். 
ஒரு கேள்விக்கு – வரலாற்றுத் தரவுகள் மற்றும் ஆவணங்களில் சில நேரங்களில் ஒரு எழுத்தாளராக நாம் தேடுவது கிட்டாமல் போகும், உள்ளே என்ன நிகழ்ந்தது? இந்த விளைவுக்குக் காரணமான திருப்புமுனை என்னவாக இருக்கும்? வேறு என்ன சாத்தியங்கள் இருந்திருக்கக் கூடும்? என பல கேள்விகள் மனதை அரிக்கும். 
அதன் ஒவ்வோர் உரையாடலையும் ஒவ்வொரு காட்சியையும் கண்டடைய முற்பட்டு நாடகீயத் தருணங்களை அடைய நாடுவதே எழுத்து வாழ்வின் அற்புத கணங்கள் என்கிறார். 
வரலாற்றுப் புனைவாசிரியனின் மிக முக்கியமான சவால் என்பது அவன் இன்றைய மொழியை, இன்றைய அறிதலை பழங்காலத்துக்குக் கொண்டு செல்கிறான். அங்கு கதை மாந்தர்களுக்கு அவர்களு டைய வருங்காலத்தில் என்ன  நிகழும் என்பது தெரியாது, அவர்களுடைய மொழியை செவிகூர்ந்து கேட்கிறான், அதை சமகால மொழியில் திரும்பக்கூற முயல்கிறான். 

வரலாற்றுப் புனைவு என்ன செய்யும்? 
வரலாற்றுப் புனைவு என்ன செய்யக் கூடும் என்பதைத் தெளிவாகவே முன் வைக்கிறார். “நேர்மையாக எழுதப்பட்ட வரலாற்றுப் புனைவு தட்டையாக இருக்க வேண்டிய அவசியமில்லை, அது நம்மை அசவுகரியமான எல்லைகளுக்கு இட்டுச் செல்லக் கூடும். ‘இதை நம்பு’ என கோராது, மாறாக ‘இதைப் பரிசீலித்துப் பார்’ என்று வரலாற்று ஆசிரியனுக்கு அருகமர்ந்து – மாற்று உண்மைகளை அல்ல, மேலதிக உண்மைகளைக் கூட அல்ல, புதிய திறப்புகளை அளிக்க முடியும்,” என்கிறார். 
காந்தியின் காரியதரிசி கல்யாணத்தின் நினைவுகளைக்கொண்டு எழுதப்பட்ட குமரி எஸ்.நீலகண்டனின் நாவல் நினைவுக்கு வருகிறது. நேர்மையாக எழுதப்பட்டிருந்தது, சில முன்முடிவுகளை அசைத்தது, எனினும் சுவாரசியமாக இருந்ததா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். 
எனினும் இங்கு சுவாரசியம் என்பதை மட்டும் கணக்கில் கொள்ளக் கூடாது, அதீத சுவாரசியம் வரலாற்று கற்பனாவாத நாவல்களையே உற்பத்தி செய்யும். பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், வானம் வசப்படும் ஆகிய நாவல்கள் தமிழின் முதல் வரலாற்று நாவல்கள் என அடையாளப்படுத்தப்படுகின்றன. 
ஓரளவு தரவுகளையும் சுவாரசியத் தையும் சமன்படுத்த முயன்றிருக்கிறார் என்றே எண்ணுகிறேன். சு.வெங்கடேச னின் ‘காவல் கோட்டம்’, பூமணியின் ‘அஞ்ஞாடி’ ஆகிய நாவல்களையும் இவ்வரிசையில் வைக்கலாம். மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் ‘சிக்க வீர ராஜேந்திரன்’ இவ்வகையில் சமநிலையை எட்டிய மிகமுக்கியமான நாவல். 
ஜெயமோகனின் ‘வெள்ளையானையும்’ அவ்வகையில் குறிப்பிடத்தக்க முயற்சி. “நாம் வாழாத வாழ்வுக்கான உளவியல் ஈடாக எல்லா நாவல்களையும் வரையறுக் கலாம். வரலாற்று நாவல்கள் அனுபவங் களின் மீதான பேராசையால் உருவாகின் றன.” என்கிறார்

சான்றுகளை ஐயத்துடன் அணுகுதல் 
வரலாற்றுப் புனைவை வாசகர்களுக்கு முன் படைக்கும்போது நாவலாசிரியருக்கு சில கூடுதல் பொறுப்புகள் உள்ளன என்கிறார் ஹிலாரி. “கடந்தகால மக்களை தாழ்வானவர்களாகச் சித்திரிக்கக் கூடாது, நம்முடைய வேறு வடிவங்களாக ஆக்கி அவர்களை சிதைத்துவிடக் கூடாது. நமக்கு கிடைக்கும் சான்றுகளை ஐயத்துடனே அணுக வேண்டும். பிழையை தொடரக்கூடாது. நமது போதாமைகளையும் இடைவெளிகளையும் படைப்பூக்கத்துடன் பயன்படுத்த முடியுமா என்று நோக்க வேண்டும்”. 
“தொன்மம் என்பது பொய்யல்ல, குறியீட்டிலும், உருவகத்திலும் வடிக்கப் பட்டுள்ள உண்மை,”  எனும் கருத்து வெண் முரசு போன்ற  இந்திய எழுத்தை மதிப்பிடவும் புரிந்துகொள்ளவும்  மிக முக்கியமான கருவி. ஒப்பீட்டளவில் வரலாற்று ஆவணங்களைக்காட்டிலும் இந்திய துணைக் கண்டம் தொன்மங் களுக்கும் புராணங்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வந்துள்ளதை வரலாற்று ஆய்வாளார்கள் ஒரு மிக முக்கியமான குற்றச்சாட்டாக வைப்ப துண்டு. எனினும், தொன்மங்களோ, நாட்டார் கதைகளோ, புராணங்களோ நிகழ்வுகளின் அப்பட்டமான ஆவணங்கள் அல்ல. 
மாறாக அன்றைய சமூகம் அறம் என்றும் விழுமியம் என்றும் எதை வகுத்ததோ அதை காலாதீதமாகக் கொண்டு செல்ல முயன்றது. அதில் வெற்றியும் பெற்றது. கற்பு, வீரம், தியாகம், ஞானம் என சிலவற்றை தக்கவைத்துக் கொள்ளும் விழைவு. 
இந்திய, தமிழக சூழலில் தொன்மங்களின் மீட்டுருவாக்கம் தொடர்ந்து நிகழ்கிறது. பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’ புதுமைப்பித்தனின் ‘அகலிகை’ ‘அன்று இரவு’ துவங்கி ஜெயமோகனின் ‘பத்ம வியூகம்’ ஜா. தீபாவின் ‘திரை’ வரை பெரும் வரிசை உள்ளது. தேவிபாரதி நல்லதங்காள் கதையை மறு ஆக்கம் செய்திருக்கிறார். நாட்டார் கதைகளை மறு ஆக்கம் செய்வதும் வழக்கமே.    
படைப்பூக்கம் கொண்ட புனைவெழுத் தாளனுக்கு வரலாறு ஒரு கதைக்கிடங்கு. தகவல் யுகத்தில் அவன் கைக்கெட்டும் தொலைவில் கிடங்கின் சாவி கிடந்தாலும் உள்நுழைந்து ஆராய்ந்து ஆக்கத்தை உருவாக்கும் முனைப்பு குறைவாகவே உள்ளது. வருங்காலங்களில் இது மாறும் என்பதே நம் எதிர்பார்ப்பு.   

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon