ஜப்பானிய விஞ்ஞானிக்கு மருத்துவத்திற்கான நோபெல் பரிசு

ஸ்டாக்ஹோம்: 2016 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபெல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த உயிரணு ஆராய்ச்சியாளர் யோ‌ஷிநோரி ஒசுமிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆட்டோஃபேகி என்றழைக்கப்படும் உயிரணுக்களின் அழிவு மற்றும் மறுசுழற்சி குறித்த ஆய்வுப் பணிக்காக இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. உயிரணுக்களின் அடிப்படை செயல்பாடுகளின் முக்கிய அம்சத்தை அவர் கண்டுபிடித்தார். யோ‌ஷிநோரி தொடர்ந்து விடாமுயற்சியுடன் பல சோதனைகளை மேற்கொண்டு கண்டுபிடிப்பில் வெற்றி பெற்றார். 1992ஆம் ஆண்டு அவர் தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.

உயிரணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தொற்றுகள் காரணமாக ஏற்படுகின்ற பார்கின்சன்ஸ், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் நரம்பியல் நோய்கள் உட்பட பல செயல்முறைகளைப் புரிந்து கொள்ள யோ‌ஷிநோரியின் கண்டுபிடிப்புகள் உதவியதாக சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபெல் பரிசு வழங்கும் குழு தெரிவித்துள்ளது. ஆட்டோஃபேகி பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்த போதிலும் இது பெரிய அளவில் தாக்கம் செலுத்தியது யோ‌ஷிநோரியின் கண்டுபிடிப்புக்குப் பிறகுதான் என்பதால் இவருக்கு மருத்துவத்திற்கான நோபெல் பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.