இந்தோனீசியாவில் வெள்ளம், நிலச்சரிவு; எண்மர் உயிரிழப்பு

இந்தோனீசியாவின் சுலாவேசி தீவின் தென்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, கரைகளை உடைத்துக்கொண்டு ஓட, ஒன்பது மாவட்டங்களில் உள்ள பல கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஜெனபோன்டோ மாவட்டத்தில் ஐவரும் கோவா மாவட்டத்தில் மூவரும் மாண்டதாக இந்தோனீசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது. குறைந்தது நால்வரைக் காணவில்லை.  ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இரண்டு பாலங்கள் சேதமடைந்தன. படகுகளும் உணவுப் பொருட்களும் இன்னும் தேவைப்படுவதாகப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பேச்சாளர் கூறினார். படம்: ஏஎஃப்பி