தமிழ்க் குடும்பத்தை இலங்கை அனுப்ப முனைப்பு காட்டும் அமைச்சர்

சிட்னி: இலங்கையிலிருந்து அகதிகளாக வந்து ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்துகொண்ட தமிழ்த் தம்பதியர் தங்களது இரு குழந்தைகளைக் காட்டி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைய திட்டமிட்டிருப்பதாகவும் அது நடக்காது என்றும் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.

அகதி அந்தஸ்து பெற அந்தத் தமிழ்க் குடும்பத்தினர் தகுதி பெறவில்லை என்று குறிப்பிட்ட திரு டட்டன், அவர்களை இலங்கைக்கு அனுப்புவதில் உறுதியாக இருக்கிறார்.குழந்தையின் சார்பாக ஆஸ்திரேலிய தமிழ் அமைப்புகள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை அடுத்து அக்குடும்பம் நாடு கடத்தப்படுவது தாமதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்க்குடும்பத்தினருக்கு ஆதரவாகப் போராடும் ஆர்ப்பாட்டக்கார்கள். (படம்: ஏஎஃப்பி)
தமிழ்க்குடும்பத்தினருக்கு ஆதரவாகப் போராடும் ஆர்ப்பாட்டக்கார்கள். (படம்: ஏஎஃப்பி)

நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக அந்தக் குடும்பத்துடன் இலங்கை நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பியது.தற்போது அந்தக் குடும்பம் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான கிறிஸ்மஸ் தீவில் உள்ள அகதிகள் முகாமில் வைக்கப்பட்டுள்ளது.தம்பதியரின் இரண்டு வயது பெண் குழந்தையின் அகதி அந்தஸ்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் மதிப்பீடு செய்யவில்லை என்று வாதிட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட இருக்கிறது.

“எந்த நிலையிலும் அந்தத் தம்பதியர் ஆஸ்திரேலியாவில் தங்க முடியாது என்று அவர்களிடம் தெளிவாகச் சொல்லிவிட்டோம். அப்படி இருந்தும் இரண்டு குழந்தைகளை அவர்கள் பெற்றெடுத்தனர். குழந்தைகளை வைத்து குடியுரிமை கோரும் பெற்றோரை பல நாடுகளில் காண முடிகிறது,” என்றார் திரு டட்டன்.

இலங்கைக்கு அனுப்பப்பட்டால் தங்கள் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று அந்தத் தமிழ்க் குடும்பம் தெரிவித்துள்ளது.