ட்ரூடோ: விபத்தில் மாண்டோருக்கு நீதி கிடைக்க பாடுபடுவேன்

ஈரான் ஆகாய வெளியில் அண்மையில் அந்நாட்டு புரட்சிப் படையினரால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனிய விமானத்தில் இருந்த பயணிகள் உட்பட மொத்தம் 176 மாண்டனர். இதில் 57 பயணிகள் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள்.

கனடியப் பயணிகளின் இறப்புக்கு ஆறுதல் தெரிவிக்கச் சென்ற அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதையும் இதற்குப் பொறுப்பானர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதையும் தாம் உறுதி செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.

இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற திரு ட்ரூடோவின் குரல் இதைக் கூறும்போது தழுதழுத்தாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே சம்பவத்தில் இந்த எண்ணிக்கையிலான கனடியர்கள் இறந்தது கடந்த 40 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்படுகிறது.

“நீங்கள் ஆற்றொணாத் துயரத்தில் தனித்து நிற்பதாக எண்ணலாம். ஆனால், நீங்கள் தனியாக விடப்படவில்லை, இந்த நாடே இன்றல்ல, நாளையல்ல, இனி வரும் காலங்களிலும் உங்களுக்கு துணையாக நிற்கும்,” என்று அல்பர்ட்டா மாநிலத்தின் எட்மண்டன் நகரிலுள்ள உடற்பயிற்சி நிலையத்தில் கூடியிருந்த சுமார் 2,300 பேரிடம்  தமது துயரத்தை அவர் வெளிப்படுத்தினார்.

அவர் பேசிய இடத்தில் கறுப்பு நிற சட்டத்துடன் கூடிய இறந்தவர்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அந்தப் படங்களைச் சுற்றி மெழுவர்த்திகள், மலர் இதழ்கள், தட்டுகளில் பேரீச்சம் பழங்கள் போன்றவை வைக்கப்பட்டிருந்ததாக பிபிசி செய்தித் தகவல் தெரிவிக்கிறது.

“இந்தத் துயரச் சம்பவம் நடந்திருக்கவே கூடாது. இந்த  அசாதாரணமான, சிரமமான காலகட்டத்தில் என் முழு ஆதரவு உங்களுக்கு உண்டு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.

இந்த விமான விபத்து வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட மனிதத் தவற்றால் நிகழ்ந்துள்ளது என்று அல்பர்ட்டா மாநில பிரதமர் ஜேசன் கென்னி வர்ணித்தார்.

#தமிழ்முரசு