அச்சம் தவிர்த்து உதவிக்கரம்

வூஹான்: கிருமித்தொற்று அபாயம் காரணமாக வூஹான்வாசிகள் எவரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்ற அறிவிக்கப்பட்டபோதும் மோட்டார்சைக்கிளோட்டிகள் ஒரு சிலர் மட்டும் அச்சமேதுமின்றி சாலைகளில் தங்கள் வாகனங்களில் விரைந்தபடி உள்ளனர்.

அவர்களுள் ஸாங் லின்னும் ஒருவர். “நாங்கள் வூஹான்வாசிகள். உங்களைப் போன்றோர் எங்களுக்கு உதவ வந்துள்ளபோதும் வூஹான்வாசிகளும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்,” என்று ‘ஏஎஃப்பி’ செய்தியாளர்களிடம் கூறினார் திரு லின்.

அங்குள்ள ஒரு மருந்தகத்திற்கு வந்திருந்த ஒருவரை மீண்டும் அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக அம்மருந்தகத்திற்கு வெளியே தமது மோட்டார்சைக்கிளுடன் காத்திருந்தார் 48 வயதான திரு லின்.

“சாலைகளில் கார்கள் எதுவும் ஓடவில்லை. மருத்துவமனைக்குச் செல்வதற்கும் வீடு திரும்புவதற்கும் உதவி தேவைப்படுகிறது. அந்தப் பணியைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்,” என்றார் பேருந்து ஓட்டுநரான யின் யூ, 40.