அமெரிக்கா: 4வது நாளாக 1,000க்கும் மேலானோர் மரணம்

சிக்காகோ: அமெரிக்காவில் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று முன்தினம் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பால் 1,000க்கும் அதிகமானோர் உயிர்இழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

கடைசியாக, ஜூன் மாத தொடக்கத்தில்தான் தொடர்ச்சியாக நான்கு நாட்களாக 1,000க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகி இருந்தன.

இம்மாதம் மட்டும் அமெரிக்காவின் 19 மாநிலங்களில் கிருமித்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது.

அமெரிக்காவில் நேற்று முன்தினம் குறைந்தது 1,019 மரணங்கள் பதிவாகின.

அதற்கு முந்தைய மூன்று நாட்களில் கிருமித்தொற்றால் 1,100க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.

அமெரிக்காவில் கிருமித்தொற்றால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 145,352ஆக பதிவாகியுள்ளது.