நாசா அனுப்பிய ‘பெர்செவரன்ஸ் ரோவர்’ இயந்திரன் செவ்வாய்க் கோளில் வெற்றிகரமாக இறங்கியது

அமெரிக்காவின் நாசா அனுப்பிய ‘ரோவர்’ இயந்திரன் செவ்வாய்க் கோளில் தரையிறங்கியது.

சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த செவ்வாய்க் கோளில் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அனுப்பிய ‘பெர்செவரன்ஸ் ரோவர்’ எனும் இயந்திரன் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது.

செவ்வாய்க் கோளில் ஆராய்ச்சிக்கான அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய அந்த விண்கலத்தை நாசா கடந்த ஆண்டு ஜூலை மாதம் செலுத்தியது.

செவ்வாய்க் கோளில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமா என்ற ஆய்வுக்காகவே பிரத்யேகமாக இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டது.

ஏழு மாதங்கள் பயணம் செய்து வெற்றிகரமாக செவ்வாய்கிரகத்தை அடைந்து, அதன் சுற்றுவட்டபாதையில் சுற்றி வந்தது அந்த விண்கலம்.

இந்நிலையில், விண்கலத்தில் இருந்து ‘ரோவர்’ இயந்திரன், ஜெசிரோ பள்ளத்தில் சிங்கப்பூர் நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணி அளவில் தரையிறங்கியது.

விண்கலத்தில் இருந்து ரோவர் 7 நிமிடங்களில் தரையிறங்கியது.

‘சாஃப்ட் லேண்டிங்’ முறையில் வான்குடை மிதவையைப் பயன்படுத்தி ‘ரோவரை’ விஞ்ஞானிகள் தரையிறக்கினர்.

இதன்பிறகு அந்த இயந்திரன் செவ்வாய்க் கோளில் எடுத்த முதல் புகைப்படத்தை நாசாவுக்கு அனுப்பிவைத்தது. ரோவர் செவ்வாயில் தரையிறங்கியதை பார்த்து நாசா விஞ்ஞானிகள் ஆரவாரத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆறு சக்கரங்கள் கொண்ட இந்த ‘ரோவர்’ இயந்திரன் 5 மைல்கள் தூரம் வரை பயணம் செய்து மாதிரிகளை சேகரிக்கும்.

அது செவ்வாய்க் கோளில் இறங்கிய பகுதியானது, இதற்கு முன்பு ஆற்றுப்படுகை இருந்த இடமாகக் கருதப்படுவதால், இந்தப் பகுதியில் கிடைக்கும் மாதிரிகள் செவ்வாய்க் கோள் குறித்த பல புதிய தகவல்களை வெளிப்படுத்தும் என நம்பப்படுகிறது. துளையிடும் கருவி ஒன்றும் ரோவரில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இயந்திரன் சேகரிக்கும் மாதிரிகளை மற்றொரு ‘ரோவர்’
மூலம் வரும் 2031ஆம் ஆண்டு பூமிக்கு கொண்டு வர நாசா திட்டமிட்டுள்ளது.

செவ்வாய்க் கோளில் ஓராண்டுக்கு ,அதாவது, பூமியின் கணக்குப்படி 687 நாட்கள் இந்த இயந்திரன் ஆய்வு மேற்கொள்ளும்.

கரியமில வாயுவை ஆக்சிஜனாக மாற்றும் கருவியும் இந்த ரோவருடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன் செயல்பாட்டு வெற்றியைப் பொறுத்து மனிதர்களை செவ்வாய்க் கோளுக்கு அனுப்பும் திட்டத்தை நாசா வகுக்கும் என்று கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 2 கிலோ எடை கொண்ட சிறிய ரக ஹெலிகாப்டரும் இத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது வெற்றிகரமாக செவ்வாயில் பறந்தால், பூமிக்கு வெளியே ஹெலிகாப்டரை பறக்க செய்த சாதனையை நாசா படைக்கும்.

இந்த மாதத்தில் மட்டும் ஐக்கிய அரபு சிற்றரசுகள், சீனா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் விண்கலங்கள் செவ்வாய் கிரகத்தை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!