உதவி கேட்பதும் பலமே, பலவீனம் அல்ல

ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்

அவள் பெயர் ரூபா. 18 வயதுதான். ஆனால் கையில் ஏகப்பட்ட வெட்டுத் தழும்புகள். கத்தியைக் கொண்டு அவளே தன்னை வெட்டிக்கொள்வாள். எப்படி ஆரம்பித்தது இந்தப் பழக்கம்? நண்பர்கள், குடும்பம், பள்ளி வாழ்க்கை தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கியபோதுதான் இப்பழக்கம் துளிர்விட்டது. பள்ளிப் பாடங்களை அவளால்  சமாளிக்க முடியவில்லை. தேர்வில் மிக மோசமாகச் செய்தாள். அவளுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் உலகமே கொடூரம் நிறைந்ததாக அவளுக்குத் தோன்றியது. தன் கையை வெட்டத் தொடங்கினாள். 

அதில் அவளுக்கு ஏற்பட்ட வலி அவள் அனுபவித்து வந்த  மனவேதனையிலிருந்து அவளின் கவனத்தைத் திசை திருப்ப உதவியது போன்று இருந்தது. ஆனால் தன்னுடைய பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வு அது இல்லை என்பதையும் அவள் மெல்ல மெல்ல உணரத் தொடங்கினாள். தோழியின் உதவியுடன் பழக்கத்தைக் கைவிட்டாள். 

ரூபா உண்மை பெயரல்ல. ஆனால் இளையர்கள் இதுபோல் தங்களையே காயப்படுத்திக்கொள்ளும் சம்பவங்கள் நாட்டில் உண்மையாக நடந்து வருகின்றன.

சிங்கப்பூர் இளையர்களில் மூன்றில் ஒருவர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வதாக ‘YouGov’ எனும்  அனைத்துலக ஆய்வு நிறுவனம் சென்ற மாதம் வெளியிட்ட ஆய்வில் தெரிவித்தது. அத்துடன் மூன்றில் ஒருவருக்குத் தற்கொலை எண்ணங்களும் வந்திருப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆய்வு தொடர்பில் ‘நொவினா மெடிக்கல் செண்ட’ரின் ஆலோசக மனநல மருத்துவரான திரு முனிதாசா வின்ஸ்லோ, முடிவுகள் அதிர்ச்சி அளிக்கவில்லை என்று கூறினார். ஆனால் தற்கொலை எண்ணங்கள் உள்ளவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது சற்று அதிர்ச்சி அளிப்பதாகக் கருதுகிறார்.

ஆய்வில் குறிப்பாக 18 முதல் 24 வயதுடைய இளையர்கள் தங்களுடைய உணர்வுகள் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி பேசுவதிலும் அவற்றைச் சமாளிப்பதிலும் பழக்கம் இல்லை என்று தெரிவித்தார் டாக்டர் வின்ஸ்லோ. 

இளையர்கள் தாங்கள் எதிர்நோக்கும் மனச்சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். அத்துடன் உதவி நாடுவதற்கான வளங்களைப் பற்றிய விழிப்புணர்வும் அவர்களுக்கு இல்லை. இந்நிலையில் தங்களுக்கே காயம் விளைவிப்பதற்கு அவர்கள் திரும்பலாம் என்று கூறினார் சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கத்தின் (Samaritans of Singapore) மூத்த துணை இயக்குநர் வோங் லாய் சுன்.

இளையர்கள் தங்களையே காயப்படுத்திக்கொள்வதில் ஈடுபடப் பொதுவாக மூன்று காரணங்கள் உண்டு  என்றும் சுட்டினார். படிப்பு தொடர்பான மனவுளைச்சல், உறவுகள் சார்ந்த மனவுளைச்சல், ‘ஹார்மோன்’ மாற்றங்கள் ஆகியவை அவர்களுடைய உணர்ச்சிகளைப் பாதிக்கலாம். மேலும், தங்களுடைய நண்பர்கள் இவ்வாறு தங்களைக் காயப்படுத்திக்கொள்வதாக கேள் விப்பட்டாலும் சிலர் அதில் ஈடுபடலாம். 

“தன்னையே வெட்டிக்கொண்டு காயம் ஏற்படுத்திக்கொள்வது ஒருவருக்கு உடலளவில் வலியை உண்டாக்குகிறது. மனதளவில் எதிர்நோக்கும் வலியிலிருந்து எண்ணங்களைத் திசைதிருப்புகிறது,” என்று அவர் கூறினார். ஆனால் பிரச்சினை மீண்டும் வரும் என்றும் எச்சரித்தார்.

உணர்ச்சிகளால் ஏற்படும் வலியைப் பற்றி பேசுவதால் பிரச்சினையைத் தீர்க்க வழியுண்டு. வேடிக்கை செய்யாமல் சொல்வதைக் கேட்பது முக்கியம் என்று கூறினார் டாக்டர் வின்ஸ்லோ. 

மூத்த ஆலோசக உளவியலாளரான டாக்டர் ராஜே‌ஷ் ஜேக்கப், தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் இளையர்களைப் பற்றியும் அவர்களை எவ்வாறு கண்டறிந்து உதவலாம் என்பதைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார். 

"சிலர் தெரிந்தே தங்களுடைய உடலைக் காயப்படுத்திக்கொள்வர். இறப்பிற்கான எண்ணம் இல்லாதபோதும் இவ்வாறு ஈடுபடுவர். இந்த முறையில் காயப்படுத்திக்கொள்வதை  "parasuicide" என்றும் அழைப்பர். இதை உடனே கண்டறிவது முக்கியம். ஏனெனில், மீண்டும் மீண்டும் தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளுதல் இறுதியில் தற்கொலையில்  முடியலாம். தன்னைத்தானே காயப்படுத்துதல் மன அழுத்தத்தால் ஏற்படலாம். இதைக் கண்டறிந்து இதற்கான உதவியைத் தக்க சமயத்தில் வழங்குவது அவசியம்.

“தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வது  அதிகம் பேசப்படாத ‌‌ஒன்றாக இருப்பதால் அதை மக்கள் தவிர்த்துவிடுகின்றனர். ஆனால், உண்மையிலேயே என்ன பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களிடம் பேசியாக வேண்டும். மேலும், இவ்வாறு பேசுவதன் மூலம் அவர்களுடைய உணர்வுகளை அவர்களால் வெளிப்படுத்த முடியும். அவர்கள் உதவி நாடுவதற்கான சாத்தியத்தையும் பேச்சுவழி கொண்டுவரலாம்,” என்றும் டாக்டர் ராஜேஷ் பகிர்ந்துகொண்டார்.

ஆய்வில் 1,095 சிங்கப்பூரர்கள் பங்கேற்றனர். 55 வயதுக்கு மேற்பட்டவர்களைக் காட்டிலும் தங்களுக்கு மனநலப் பிரச்சினை இருக்கிறது என்று இளையர்கள் கூறுவதற்கான வாய்ப்புகள்  மும்மடங்காக உள்ளது என்று கண்டறியப்பட்டது. 

இது ஒரு நல்ல அறிகுறி என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். முதியவர்களைவிட மனநலம் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி இளைய தலைமுறையினர் இன்னும் நன்கு அறிந்துள்ளனர் என்று இந்த ஆய்வு முடிவுகள் காட்டுவதாக கூறப்பட்டது. சில பிரபலங்கள் தங்களுக்கு இருந்த மனநலப் பிரச்சினைகளைப் பற்றியும் அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்துகொண்டது இளையர்களிடையே இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கூறப்பட்டது. 

இளையர்களுக்கிடையே மனநலப் பிரச்சினைகளைப் பற்றி உள்ள தவறான அபிப்பிராயம் குறைந்துள்ளதைப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக நிபுணர்கள் கூறினா லும் சமுதாயத்தில் இன்னும் அந்த அபிப்பிராயம் உள்ளதாகக் கூறினார்கள். தங்களுக்கு மனநலப் பிரச்சினை இருந்தால் அதை ஒப்புக்கொள்ள வெட்கப்படுவர் என்று 64% சிங்கப்பூரர்கள் கூறினர். ஆனால் மனநலப் பிரச்சினைகள் இருந்தால் தகுந்த உதவியை நாடுவோர் அதில் 58 விழுக்காட்டினர் மட்டுமே என்று ஆய்வில் தெரிய வந்தது.

தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, ஆண்களைவிட பெண்கள் உதவி நாடும் வாய்ப்பும் அதிகம் என்று தெரியவந்துள்ளது.

பெண்கள் துன்பத்தில் இருக்கும்போது தங்களுடைய குடும்பத்தினர், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வர். ஆனால் பலம், சகிப்புத்தன்மை, பிறர் உதவியின்றி செயல்படுதல், சவாலை எதிர்கொள்ளும் திறன் போன்றவை ஆண்மையைக் குறிக்கும் தகுதிகளாகக் கருதப்படுகின்றன. அதனால் பொதுவாகவே சில ஆண்கள், தாங்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதை ஒப்புக்கொள்வது பலவீனம் என்று கருதுகிறார்கள். 

குடும்ப ஆதரவுடன் மனவுளைச்சலைச் சமாளிக்கும் உத்திமுறைகளை ஒருவர் வளர்த்துக்கொள்வது முக்கியம் என்றும் உதவி கேட்பதும் பலமே, பலவீனம் அல்ல என்றும் வலியுறுத்தினார் டாக்டர் ராஜேஷ். 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நிகழ்ச்சியை வழிநடத்தியவர்களில் ஒருவரான ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி மதுமிதா ராஜேந்திரன், பங்கேற்பாளர் ஒருவருக்கு உணவு பரிமாறுகிறார். ஒளிவிளக்கு அணைக்கப்பட்ட பின்னர் பங்கேற்பாளர்கள் உணவு அருந்தினர். படம்: மக்கள் கழகம்

09 Dec 2019

பார்வையற்றோரின் நிலையை உணர்த்திய விருந்து நிகழ்ச்சி

குண்டர் கும்பலில் சேருவதனால் இளையர்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து முகாமில் கலந்துகொண்டோருக்கு விளக்குகிறார் சிறப்புப் பேச்சாளர் ஜேய்டன். படம்: சாவ் பாவ்

09 Dec 2019

குண்டர் கும்பல் ஆபத்து குறித்த இளையர் முகாம்