மகேஷ், மதன் இரட்டையர்கள். படிப்பில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று சாதாரண நிலை தேர்வில் முறையே ஐந்து புள்ளிகளையும் எட்டுப் புள்ளிகளையும் பெற்றனர். சிறந்த தொடக்கக்கல்லூரியில் இடம் கிடைத்தபோதும் பலதுறை தொழிற் கல்லூரியில் கடல்துறைக் கல்வியை இருவருமே தேர்ந்தெடுத்துள்ளனர் இந்த இணைபிரியா சகோதரர்கள்.
இப்போது 25 வயதுடைய இந்த இருவருமே ஒரே கப்பல் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். “என்னை இவன் விடுவதே இல்லை,” என்று மதன் நகைச்சுவைத் தொனியில் தமது தம்பியைப் பற்றி கூறினார்.
ஒருவருக்கு ஒருவர் ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் இருப்பதால் பல முடிவுகளில் சகோதரர்கள் ஒத்துப்போவதாக இருவரும் கூறுகின்றனர்.
நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற சிந்தனை உடையவர்களாகத் தங்களை வருணித்துக்கொள்ளும் இச்சகோதரர்கள், சிங்கப்பூரின் பொருளியலில் கடல்துறை முக்கிய இடம் வகிப்பதே அதனை வாழ்க்கைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்ததன் காரணம் எனத் தெரிவித்தனர்.
“பலதுறை தொழிற்கல்லூரியில் இந்தக் குறிப்பிட்ட துறையைத் தவிர நாங்கள் வேறு எதையும் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. ஒருசில தொடக்கக்கல்லூரிகளைத் தெரிவு செய்தோம். அதே நேரத்தில் நேரடி சேர்க்கைப் பயிற்சியில் இந்தக் கடல்துறைப் படிப்புக்கு விண்ணப்பித்தோம். அதற்கான நேர்முகத் தேர்வுக்கும் சென்றிருந்தோம்,” என்றார் மதன்.

“தொடக்கக் கல்லூரியின் அறிமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது அந்த விண்ணப்பத்தின் முடிவுகள் கிடைத்தன. சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரியின் விரிவுரையாளர்களுடன் கலந்தாலோசித்துத் தகுந்த ஆலோசனையைப் பெற்றோம்.
தொடக்கக் கல்லூரியிலிருந்து விலகி இந்தக் கடல்துறை பாடத்திட்டத்தில் சேர்ந்துகொண்டோம்,” என்று மதன் கூறினார். சாலமன் ஐலண்ட்ஸ், ஏமன், கத்தார், பனாமா, மெக்சிகோ, தைவான், ஜப்பான், திமோர் லெஸ்டே, கிரீஸ், நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தச் சகோதரர்கள் சென்றுள்ளனர்.
பதினேழு வயதில் தொடங்கி ஏழு கடல்களையும் தாண்டிச் சென்றுள்ள இவர்கள், தங்களது துறையிலுள்ள சவால்களையும் விவரித்தனர். அந்தச் சவால்களையே தங்கள் வேலையில் பிடித்த அம்சம் என்றும் கூறுகின்றனர்.
“ஒவ்வொரு நாளும் முந்தைய நாளைப் போல் இருப்பதில்லை. கற்றுக்கொண்டு சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் தன்மையைப் பெற்றிருப்பது அவசியம்,” என்று மகேஷ் தெரிவித்தார்.
“கப்பல்களைப் பராமரிப்பது, அவற்றைச் சரியான பயண இடங்களில் சேர்ப்பது உள்ளிட்ட சில வேலைகளை நாம் சரிவரச் செய்யவேண்டும். முன்புபோல கப்பல்களில் 40 பேர் வரை வேலை செய்யும் சூழல் இப்போது மாறிவிட்டது. இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கிட்டத்தட்ட 20 பேர்தான் பணிபுரிகின்றனர்,” என்றார் மதன்.
சவால்கள் இருந்தாலும் கடலில் வேலை செய்வதில் ஒரு தனி திகில் இருப்பதாக சகோதரர்கள் கூறுகின்றனர்.
நடுக்கடலில் கப்பல் பயணம் செய்து வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று அவற்றைச் சுற்றிப் பார்ப்பது கவர்ச்சிகரமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
“கணக்கில் அடங்காத அளவுக்கு நாங்கள் பல்வேறு பயண இடங்களுக்குச் சென்றுள்ளோம். மற்ற நாடுகளைவிட சிங்கப்பூரில் பாதுகாப்பும் செயல்திறனும் அதிகமாகவே உள்ளன. கப்பலின் சரக்குப் பெட்டிகளை சிங்கப்பூர் துறைமுகங்களில் சிறிது நேரத்தில் ஏற்றி இறக்கிவிட்டுச் செல்லலாம். இதே செயலைச் செய்து முடிக்க மற்ற துறைமுகங்களில் ஒரு மணி நேரம் வரை ஆகலாம்.
“ஒரு கப்பலில் பத்து வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை செய்வர். அவர்களுடன் இணைந்து வேலை செய்வதற்கும் சிங்கப்பூரர்களுடன் வேலை செய்வதற்கும் வேறுபாடு உள்ளது. எனவே பல்வேறு நாடுகளில் காணப்படும் வேலை கலாசாரம் குறித்த விழிப்புணர்வு இந்த வேலையில் தேவைப்படுகிறது.

இருவருமே மோண்ட்ஃபர்ட் ஜூனியர் தொடக்கப்பள்ளியில் பயின்று மோண்ட்ஃபர்ட் உயர் நிலைப் பள்ளிக்குச் சென்றனர். சிறு வயது முதற்கொண்டு தங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டி நிலவுவதாகக் கூறும் அவர்கள், இதனால் இருவருமே படிப்பில் முன்னேறி சாதாரண நிலைத் தேர்வில் சிறப்பாகச் செய்ததாகக் கூறுகின்றனர்.
“பள்ளிப் பருவத்தில் தேர்வுகளின்போது நீயா நானா என்ற ஒரு போட்டி மனப்பான்மை எங்களுக்கு இடையே இருந்தது. இந்தப் போட்டித்தன்மை காலப்போக்கில் குறைந்தபோதும் சிறப்பாகச் செய்யவேண்டும் என்ற துடிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது.
“ஒரு கட்டத்திற்குப் பிறகு போட்டி மனப்பான்மை நின்று போனது. இருந்தபோதும் ஒருவருக்கு ஒருவர் உற்சாகம் கொடுக்கும் வழக்கம் இன்று வரையிலும் எங்களுக்கிடையே உள்ளது,” என்றார் மதன்.
ஈராண்டுகளில் மாலுமி சான்றிதழைப் பெறுவது அவர்களின் தற்போதைய குறிக்கோளாக உள்ளது. இந்தச் சான்றிதழ் தங்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
சூழலுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ளும் திறன், ஒரு மாலுமிக்கு மிக அவசியம். கடலில் பயணம் செய்யும்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்குத் தகுந்தாற்போல் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். வாழ்நாள் கற்றலுக்கான அவசியம் மற்ற துறைகளைப் போல இந்தத் துறையிலும் அதிகம் தேவைப்படுவதாக இவர்கள் கூறுகின்றனர்.

“ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கற்றுக்கொண்ட தொழில்நுட்பத் திறன்கள் இன்று பழையதாகிவிட்டன. தொடர்ந்து பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றுக்கொள்ளவேண்டும். தொழில்நுட்பம் மாறிக்கொண்டே வருவதால் ஆண்டுக்கு ஆண்டு நாமே முயற்சி எடுத்து முனைப்புடன் பயிற்சி வகுப்புகளில் சேரவேண்டும்.
“அவ்வாறு செய்யும்போது எங்களது வேலையை மேலும் சுலபமாகவும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள முடியும்,” என்று மகேஷ் தெரிவித்தார்.
திறன் மேம்பாடு செய்யத் தவறினால் பின்தங்குவது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீண்ட பயணங்களால் குடும்பத்தினரை ஐந்து ஆறு மாதங்களாகப் பார்க்க முடியாமல் போகலாம். ஆயினும், தற்போதுள்ள அதிநவீன இணைய வசதிகளால் தங்களது தாய் தந்தையருடன் சகோதரர்கள் அடிக்கடி தொடர்புகொள்வதாகக் கூறுகின்றனர்.
“நெருக்கமானவர்களைப் பல நாட்கள் பிரிந்திருப்பது சிரமம் என்றாலும் அவர்களுக்காகவே வேலையில் முழு கவனம் செலுத்தி அதனைச் சிறப்பாகச் செய்ய முயல்கிறோம்,” என மதன் பகிர்ந்துகொண்டார்.

தொடக்கத்தில் இது குறித்து தயக்கமும் கவலையும் அதிகமாக இருந்ததாகக் கூறினார் அவர்களின் தாயார் ஜூன், 49. அவர்கள் வேறு துறைகளில் சேர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
“ஆனால் இதுதான் அவர்களின் விருப்பம் என்று நான் புரிந்துகொண்டேன். வேறு துறைகளில் சேர நான் கட்டாயப்படுத்தி அது சரியாக அமையாவிட்டால் அவர்கள் பாதிப்புக்குள்ளாவர். நான் அதை நினைத்து மிகவும் நொந்துபோவேன்,” என்றார் இரட்டையர்களின் தாய்.
மகன்கள் தாங்கள் எடுத்த முடிவைப் பற்றி நன்கு விளக்கியதால் இறுதியில் தம் மனதை மாற்றிக்கொண்டதாகக் கூறுகிறார் திருமதி ஜூன். இருந்தபோதும் அவர்களது நீண்டநேர பயணங்களின் தொடக்கத்தில் அதிக அச்சமும் கவலையும் இருந்ததாக அவர் உணர்ச்சிபூர்வமாகக் கூறினார்.
“நடுக்கடலில் என் இரு மகன்கள் கப்பலில் இருப்பதை நினைத்து முன்பு அதிகம் பயந்தேன். என்னைத் தொடர்புகொள்வதில் தாமதம் ஏற்படும்போதெல்லாம் பதற்றமடைந்தேன். ஆயினும் போகப்போக பழகிப்போனது. நேரத்துடன் என்னைத் தொடர்புகொள்ளவும் அவர்கள் உறுதியாக உள்ளனர். என் மகன்களும் என்னைப் பலவாறு தேற்றி தைரியமூட்டுவர்,” என்றார் திருமதி ஜூன்.
இப்போது தமது மகன்கள் இந்தத் துறையில் சிறந்து விளங்குவதைக் கண்டு அகமகிழ்வதாகக் கூறும் அந்தத் தாயார், அவர்களது விருப்பங்களை அனுமதித்தது சரிதான் என்றார், மனநிறைவுடன்.
எந்த நாட்டிலும் கிடைக்காத அரிய வாய்ப்புகளை சிங்கப்பூர் கடல்துறை வழங்குவதாக கூறி இத்துறையில் சேர மாணவர்களை ஊக்குவிக்கின்றனர் சகோதரர்கள்.
“எங்களைப் பொறுத்தவரை இது சிங்கப்பூரில் மிகச் சிறந்த துறைகளில் ஒன்று. வெளிநாடுகளில் இதுபோன்ற வாய்ப்புகள் அதிகம் கிடைக்காது. அத்துடன் தற்போது இல்லாத வாய்ப்புகள்கூட எதிர்காலத்தில் உருவாகலாம்.
“கப்பல்துறையில் இருப்போர் கப்பலில் பயணம் செய்து பணி புரியவேண்டும் என்பதில்லை. இத்துறையில் வேறு ஏராளமான வாய்ப்புகளும் உள்ளன. உயர்நிலைக் கல்வியை முடித்த நிலையில் மாணவர்கள் தயக்கமின்றி இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்,” என இருவரும் ஒருமித்த குரலில் அறிவுறுத்தினர்.