மதுவுக்கு அடிமையாகும் இளையர்களின் நிலை

தமது பெற்றோர் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதைப் பார்த்து அதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட மனோ (இவரது உண்மையான பெயர் அல்ல), 14 வயதிலேயே மதுப் பழக்கத்திற்கு அடிமையானார்.

தமது நண்பர்களுடன் சேர்ந்து வாரத்திற்கு ஒரு முறை இரண்டு பீர் டின்களைப் பருகி வந்த அவரால் காலப்போக்கில் அப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை.

மது அருந்துவதால் தமது கவலைகளை மறப்பதோடு தன்னம்பிக்கை அதிகரிப்பதுபோல தவறாக எண்ணியதால் நாளுக்கு நாள் மதுப் பழக்கத்துக்கு மனோ அடிமையாகி அதிலிருந்து அவர் மீளமுடியாத நிலை ஏற்பட்டது.

மனோவைப் போன்று இளையர்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாவதற்கு பல காரணங்கள் உள்ளதாக மனநலக் கழகத்தின் ‘நேஷனல் அடிக்‌ஷன்ஸ் மேனெஜ்மண்ட் சர்வீஸ்’ நிலையம் கூறுகிறது. அவற்றில் உடல், மன ரீதியான காரணங்களும் அடங்கும்.

புதிய அனுபவங்களைப் பெறுவதிலும் புதிய விஷயங்களை ஆராய்வதிலும் கூடுதல் ஆர்வத்தை இளையர்கள் இயல்பாகவே கொண்டிருப்பர்.

சக இளையர்களுடன் அவர்கள் சிறந்த நட்புறவைக் கொண்டிருக்க விரும்பும் காரணத்தால் ஒரே மாதிரியான பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவர்.

நண்பர் வட்டத்திலிருந்து தனித்து விடப்படக்கூடாது என்பதால் தமக்குப் பிடிக்காவிட்டாலும் தமது நண்பர்களுடன் சேர்ந்து இளையர்கள் சிலர் மது அருந்துகின்றனர்.

மது அருந்துவது ஒருவரை ‘வளர்ந்தவராக’ குறிக்கும் என்ற தவறான கண்ணோட்டத்தைக் கொண்ட மற்ற சிலரும் தம்மை வயது கூடியவராக காண்பிக்கவும் இப்பழக்கத்திற்கு ஆளாகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், கல்வியில் தோல்வி, மற்றவர்களுடன் பழகுவதில் சவாலை எதிர்கொள்வது, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களைவிட்டு விலகியிருப்பது போன்ற காரணங்களால் இளையர்கள் இப்பழகத்திற்கு அடிமையாவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தக் காரணங்களே பின்னர் அவர்களை மதுப் பழக்கத்திற்கு அடிமையாக்கக்கூடும் என்று குறிப்பிடப்படுகிறது. மதுப் பழக்கத்திலிருந்து விடுபட தற்போது ‘கவுன்சலிங்’ எனும் ஆலோசனை சேவையைப் பெற்று வருகிறார் மனோ.

இருப்பினும், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியிருப்போருக்கு ‘நேஷனல் அடிக்‌ஷன்ஸ் மேனெஜ்மண்ட் சர்வீஸ்’ நிலையம் வழங்கும் சேவை மூலம் பயன்பெற்றுவரும் அவர், இப்போது மதுப் பழக்கத்தைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மதுப் பழக்கத்தைக் கொண்ட நண்பர் கூட்டத்திலிருந்து விலகி இருப்பதுடன், மது அருந்துவதற்காக அவர் அடிக்கடி சென்ற இடங்களையும் தவிர்த்து வருகிறார்.

அதோடு தமது ஆலோசகரின் உதவியுடன், தாம் திருந்தி வாழ்வதற்கான அனைத்து வித முயற்சிகளையும் எடுத்து வருகிறார் மனோ.

‘நேஷனல் அடிக்‌ஷன்ஸ் மேனெஜ்மண்ட் சர்வீஸ்’ நிலையத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆலோசகராக பணிபுரியும் பவீனாகாயத்திரி தினகரன், இந்திய சமூகத்தைச் சேர்ந்த இளையர்களிடம் மது அருந்தும் பழக்கம் குறித்து விவரித்தார்.

“அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் ஒருவர் தவறான முடிவுகளை எடுக்கலாம். அதனால், அந்த நபருக்கு பிற்காலத்தில் உடல்நலக்கேடு, குடும்ப உறவுகளில் விரிசல், பணப் பிரச்சினை, சட்ட ரீதியான சிக்கல் போன்றவை எழக்கூடும்.

“ஒருவரின் பிரச்சினைக்கு மதுப் பழக்கம் என்றுமே தீர்வாகாது. மாறாக, புதிய, மேலும் அதிகமான பிரச்சினைகளுக்கே அது இட்டுச் செல்லும். உங்களைச் சிரமத்திற்குள்ளாக்கும் பிரச்சினை எதுவும் இருந்தால் உங்களுக்கு தெரிந்த நம்பிக்கையான ஒருவர் அல்லது ஆலோசகர்களின் உதவியை நாடுங்கள்,” என்றார் குமாரி பவீனாகாயத்திரி.

மது அருந்துதல் ஒருவித மனஅமைதியையும் மகிழ்வூட்டும் உணர்வையும் தரும் காரணத்தால் சிலர் மது பழக்கத்திற்கு ஆளாகின்றனர் என்று குறிப்பிடுகிறார் மதுவுக்கு அடிமையாவது மற்றும் உளவியல் துறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் திரு பிரேம் குமார் சண்முகம், 49.

இவர் மதுவுக்கு அடிமையாவதன் அறிகுறிகளில் முக்கியமான ஒரு அறிகுறியைப் பகிர்ந்துகொண்டார்.

“உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும் சிலர் தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் தினந்தோறும் மது அருந்துவர்.

“உதாரணத்திற்கு, மது அருந்தாத காரணத்தினால் சிலர் மனவுளைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாவதுடன் தங்களது தினசரி பணிகளிலும் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும்.

“மதுப் பழக்கத்திற்கு அடிமையாவதிலிருந்து மீள்வதற்கு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சிகிச்சை அளிக்கப்படவேண்டும்.

“உடல்நலம், சமூகம், உளவியல், ஆன்மிகம் ஆகியவற்றின் துணை கொண்டு ஒவ்வொருவருக்கும் ஏற்ற சிகிச்சை அளிக்கப்படவேண்டும்,” என்றார் அவர்.

- avaid@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!