ப.சிதம்பரம்: இவ்வாண்டின் மிகப்பெரிய ஊழல் குறித்து விசாரணை வேண்டும்

நாக்பூர்: இந்த ஆண்டின் மிகப்பெரிய ஊழல் ரூபாய் நோட்டு ஒழிப்பு. இதற்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசினார் ப.சிதம்பரம். “ரூபாய் நோட்டு ஒழிப்பு ஏழைமக்களின் முதுகெலும்பை ஒடித்துள்ளது. இவ்வளவு துயரங்களைத் தேசிய பேரிடர் கூட ஏற்படுத்தி இருக்கமுடியாது. இது அபத்தமான ஒன்று. இது ஒரு சிந்தனையற்ற நடவடிக்கை. உலகில் உள்ள வேறு யாருக்கும் இதற்கு ஒரு நல்ல வார்த்தை கூற முடியாது. நாட்டின் முக்கிய பத்திரிகைகளும் பொருளியல் நிபுணர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பால் நாட்டிற்கு எப்படி நன்மை கிடைக்கும். ஊழல், கறுப்புப் பணத்தை ஒழித்து விட்டதா என்றால் அவ்வாறு அதை அது செய்யவில்லை. இதனால் ஏழை மக்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டு உள்ளனர். இப்போது அவர்கள் பணமில்லா பொருளியல் என்று ஒரு புதிய கண்டுபிடிப்பைக் கொண்டு வந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.