டெக் வை கிரெசண்ட் வட்டாரத்தில் மாண்டு கிடந்த 35 வயது ஆடவர்

டெக் வை கிரெசண்ட் புளோக் 165Aவுக்கு அருகில் உள்ள நடைபாதையில் 35 வயது ஆடவர் ஒருவர் நேற்று அதிகாலை மாண்டு கிடக்கக் காணப்பட்டார். அவரைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 48 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். நடைபாதையில் ஒருவர் பேச்சுமூச்சின்றி கிடப்பது குறித்து போலிசாருக்கு நேற்று அதிகாலை 4.42 மணிக்குத் தகவல் கிடைத்தது. அந்த ஆடவர் இறந்துவிட்டதாக அதிகாலை 4.55 மணிக்கு மருத்துவ உதவியாளர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, குற்றவியல் புலனாய்வுத் துறை, ஜூரோங் போலிஸ் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்த தொடங்கினர். காலை 10.15 மணிக்கு மாண்டு கிடந்த ஆடவரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. தம்முடன் ஒரே வீட்டில் வசித்து வந்தவருடன் ஏற்பட்ட தகராற்றைத் தொடர்ந்து அந்த ஆடவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மரணம் அடைந்தவரின் நெஞ்சுப் பகுதியில் கத்திக் குத்துக் காயம் இருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது. அவர் படிக்கட்டு வழியாகக் கீழே ஓடியிருக்கலாம் என்றும் அப்போது அவர் துரத்தப்பட்டிருக் கலாம் என்றும் நம்பப்படுகிறது.

மரணமடைந்தவரின் உடலை விரிப்பு பயன்படுத்தி மூடும் போலிஸ் அதிகாரிகள். படம்: வான்பாவ்

Loading...
Load next