உருமாறும் அரசியல்; தலைவியான தோழி

இந்தியாவின் மக்களாட்சித் தத்துவத்தின்படி கோடானு கோடி வாக்காளர்கள் வாக்கு அளித்து தேர்ந்து எடுத்த, இந்திய அளவில் மிக பலம் பொருந்திய ஓர் அரசியல் தலைவியான ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அந்தக் கட்சியை அவரின் தோழியான சசிகலா கைப் பற்றிக்கொண்டு இருக்கிறார்.

ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சி நடந்தபோதெல்லாம், அந்த ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டபோதெல்லாம் அதற்கு காரணமாகக் கூறப்பட்டவர் சசிகலா. அவர் தலைக்கு மேல் நீதி என்கின்ற ஒரு கத்தி தொங்கிக் கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா எப்படி மரணம் அடைந்தார் என்பது புதிராக இருக்கையில் அவரின் மரணத்துக்கும் சசிகலாவே காரணமாக இருக்கலாமோ என்ற சந்தேகம்வேறு கிளம்பி இருக்கிறது. அரசியலுக்கு இலக்கணம் வகுத்தவர் என்றும் அரசியல் குரு என்றும் உலக அளவில் வர்ணிக்கப்படும் சாணக்கியர் தன் சாணக்கியத்தனத்தால் பாடலிபுத்திரத்துக்குச் சந்திரகுப்த மௌரியரை மன்னராக்கினார்.

இதைச் சாதிக்க சாணக்கியருக்குக்கூட பல காலம் பிடித்தது. ஆனால் சசிகலாவோ சில நாட்களிலேயே மிகப் பிரம்மாண்ட இடத்தைப் பிடித்துக்கொண்டுவிட் டார். இந்திய நாடாளுமன்றத்தில் மொத்தம் 50 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆகப்பெரிய மூன்றாவது சக்தியாக இப்போது அவர் திகழ்கிறார். ஆனால் வாக்காளர்களிடம் அவருக்கு இந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறதா என்பது சந்தேகத்துக்கு இடமாக உள்ளது. இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட என்ன காரணம்-? அரசியலில் தனி நபர் துதிபாடும் போக்கு, தங்களுக்கு உள்ள வாக்கு உரிமையை அலட்சியமாகப் பயன்படுத்தி காசாக்குவது, அரசியல்வாதிகளை அரசியலில் தேடா மல் திரைப்படத் துறையில் தேடுவது போன்ற வாக்காளர் களின் அணுகுமுறையும் அரசியல் கட்சிகளின் தலை வர்கள் அடுத்தகட்ட தலைவர்களை உருவாக்காமல் போவதும்தான் இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தி இருப்பதாகக் கருத இடம் இருக்கிறது.

இந்த அணுகுமுறை கடந்த அரைநூற்றாண்டு காலத் தில் திரைப்பட துறையினர் அரசியலில் நுழைந்ததன் காரணமாகத்தான் ஏற்பட்டுவிட்டது என்றும் அரசியல் அனுபவமில்லாத நடிகர்கள் அரசியலில் ஈடுபடும் போக்கு ஒரு நோய் என்றும் அந்த நோய் தமிழகத்தைக் கவ்விவிட்டது என்றும் பெருந்தலைவியும் திரைப்படத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவருமான ஜெய லலிதாவே கவலைப்பட்டு முன்பு சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது.

தமிழக அரசியல் களம் இப்போது உருமாறுகிறது. மிகப் பிரம்மாண்ட அதிமுக, திமுக கட்சிகளில் தலை கீழ் மாற்றங்கள் இடம்பெறுகின்றன. யார் யாரோ இருந்த இடங்களில் இன்று சசிகலாவும் ஸ்டாலினும் மோதிக் கொள்ளும் நிலை உருவாகி இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் தேசிய கட்சிகள் அப்படியேதான் இருக்கின்றன. ஸ்டாலினோ சசியோ யாராக இருந்தாலும் திமுக, அதிமுகவைச் சுற்றி தேசிய கட்சிகள் அலைய வேண்டிய நிலைதான் இன்னமும் இருக்கிறது. என்றாலும் ஜெயலலிதாவின் மறைவு, திமுக முது பெரும் தலைவர் கருணாநிதியின் இயலாமை ஆகியவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள தேசிய கட்சிகளுக்கு முன் எப்போதையும்விட இப்போது காலம் கனிந்து இருப்பதாகவே தெரிகிறது. இப்போதைய அதிமுக அரசு மீது கைவைக்காமல் அதன் 50 உறுப்பினர்களைப் பயன்படுத்திக்கொள்வதே விவேகம் என்று மத்தியில் ஆளும் பாஜக நினைக்கிறது. அதிமுக ஆட்சி மீது மத்திய அரசு கைவைத்தால் அந்த சாக்கில் எப்படியாவது அதிமுகவை அணுகிவிட லாம் என்று காங்கிரஸ் கனவு காண்கிறது. தன் ஆட்சிக்கு இன்னும் 20 எம்எல்ஏக்கள்தான் தேவை என்று திமுக கணக்குப்போடுகிறது.

எல்லா சூழல்களையும் பார்க்கையில், சகிகலாவுக்குப் பதவி இல்லை என்றால் அதிமுக உடையும். திமுக ஆட்சிக்கு வழி ஏற்படும். அல்லது தேர்தல் வரும். இதை அக்கட்சியினர் விரும்புவதாகத் தெரியவில்லை. ஆகையால் இன்னும் சில ஆண்டுகளுக்கு சசிகலா கையில்தான் தமிழ்நாடு என்ற நிலைதான் தெரிகிறது. தாங்கள் தேர்ந்து எடுக்கும் ஒருவர் அதிகாரத்துக்கு வருவதைக் காண வாக்காளர்கள் காத்திருக்கத்தான் வேண்டும். ஜனநாயக நடைமுறையில் தாங்கள் ஏற் படுத்திய ஓட்டைகளை தாங்களே அடைப்பது பற்றி அவர்கள் இப்போதாவது சிந்திக்கத்தான் வேண்டும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!