லீ குவான் இயூ காட்டிய வழியில் சிங்கப்பூர் தொடர்ந்து முன்னேறட்டும்

சிங்கப்பூர் இப்போது உலகமே புகழ்ந்து பேசும் ஒரு நாடாகத் திகழ்கிறது. அந்த நாட்டின் கடப்பிதழ் கையில் இருந்தால் அதுவே ஓர் அனுகூலமாக அங்கீகரிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் ஒரு சிறிய அடுக்குமாடி வீடு சொந்தமாக இருந்தால் அது மதிப்பில் முன்னேறிய நாடுகளின் நகர்களில் தோட்டம் துரவுகளுடன் இருக்கும் வீட்டுக்குச் சமம் என்ற நிலை உள்ளது.

ஊழலை அறவே சகித்துக்கொள்ளாத நிலை, தகுதிக்கு முன்னுரிமை, சமத்துவம், நீதி-நேர்மை, இன, சமய நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சிக்கு நல்ல எடுத்துக்காட்டாக அது திகழ்கிறது.

இயற்கை வளம் இல்லாத, மனித வளத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்ட ஒரு சிறு நிலப்பரப்பு நாடான சிங்கப்பூர், குறுகிய காலத்தில் பிரம்மாண்டமாக விஸ்வரூபம் எடுத்து ஏராள சாதனைகளை நிகழ்த்தி வளர்ந்த பசுமை மண்டிய நாடாக நெஞ்சை நிமிர்த்தி நிற்கிறது.

இந்தச் சாதனைக்கெல்லாம் சிங்கப்பூரின் முன்னோடித் தலைவர்களும் அவர்களின் தொலைநோக்கும் கோட்பாடுகளும் வியூகங்களும்தான் அடிப்படைக் காரணம்.

அந்த முன்னோடித் தலைவர்களுக்கெல்லாம் தலைமைப் பொறுப்பேற்று செயல்பட்டவர் சட்ட வல்லுநரான, அரசியல்வாதியான, தேசியத் தலைவரான, சிங்கப்பூரை நிறுவிய பிரதமரான திரு லீ குவான் இயூ அவர்கள். திரு லீ குவான் இயூ 1959 முதல் 1990 வரை பிரதமர் பதவியை வகித்தவர். மக்கள் செயல் கட்சி 1954ல் தொடங்கப்பட்டது முதல் அதன் தலைமைச் செயலாளர் பொறுப்பை ஏற்று 1992 வரை அதை செவ்வனே நிறைவேற்றியவர்.

தஞ்சோங் பகார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 1955 முதல் 2015ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தனது 91வது வயதில் மரணம் அடைந்தது வரை சேவையாற்றியவர். ஒவ்வொரு தேர்தலிலும் மிகப் பெரும் பெரும்பான்மையைச் சாதித்துக் காட்டியவர். என்றாலும் தானே முன்வந்து பிரதமர் பொறுப்பை 1990ல் வாரிசிடம் ஒப்படைத்தவர். 2004 வரை மூத்த அமைச்சராக அமைச்சரவையில் சேவையாற்றியவர். பிறகு மதியுரை அமைச்சராக 2011 வரை அமைச்சரவைக்கு வழிகாட்டி உதவியவர்.

திரு லீ 1923 செப்டம்பர் 16ஆம் தேதி பிறந்தார். அவருடைய 100வது பிறந்தநாள் விழா இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

மலேசியாவில் இருந்து பிரிந்து தனித்து விடப்பட்ட சிங்கப்பூரை ஒரு நாடாகக் கட்டி எழுப்பும் முயற்சிக்கு வழிகாட்டும் மிக முக்கியமான அடிப்படைக் கோட்பாடுகளைத் திரு லீ குவான் இயூ தன் சகாக்களுடன் சேர்ந்து நிர்ணயித்தார்.

சிங்கப்பூரில் அப்போது குடியேறி இருந்த மக்களை குடிமக்களாக ஆக்க வேண்டும்; அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும். சிங்கப்பூர் பல இன, பல சமய நாடாகத் திகழ வேண்டும். இனம், மொழி, சமயம் என்று பாராமல் தகுதிக்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்;

எந்தவொரு நிலையிலும் எந்தவொரு சூழலிலும் லஞ்சம், ஊழல் அறவே கூடாது; நீதி நேர்மை, சமத்துவம், சமய சுதந்திரம் உன்னதநிலையை எட்டும் வேட்கை, சமய நல்லிணக்கம், ஒற்றுமை எப்போதும் பேணி வளர்க்கப்படவேண்டும்;

சிங்கப்பூரில் பெரும்பான்மைச் சமூகமாக சீனர்கள் வாழ்ந்தாலும் இந்தியர்கள், மலாய்க்காரர்கள் யுரேஷியர்கள் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகத்தினரும் தங்களுடைய மொழி உள்ளிட்ட தனித்தன்மைகளை, உரிமைகளை இழக்காமல் அதேநேரத்தில் சிங்கப்பூரர் என்ற அடையாளத்துடன் திகழ வேண்டும்;

அரசாங்கமும் மக்களும் ஒற்றுமை, புரிந்துணர்வோடு செயல்பட்டு சிங்கப்பூரை மிக அதிக வருமானத்தைக் கொண்ட வளர்ந்த பொருளியல் நாடாக உருவாக்க வேண்டும். எந்தச் சவாலையும் வெற்றிகரமாக சமாளிக்க வேண்டும்; எந்த வளமும் இல்லாத நிலையில் இவற்றை எல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து அவற்றை நிறைவேற்ற முயற்சிகளை முடுக்கிவிட்டவர் அவர்.

மிகத் திறமையான, ஊழலை அறவே சகித்துக்கொள்ளாத அரசாங்கத்தையும் அரசாங்கச் சேவையையும் சாதித்தவர். பொருளியல் சாதனைகளை நிகழ்த்தியவர்.

சிங்கப்பூர் உலகமய நகர நாடாக இருந்தாலும் ஆசியப் பண்புகள் நிலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ், சீனம், மலாய் ஆங்கில மொழிகளை அதிகாரபூர்வ மொழிகளாக்கி, ஆங்கிலத்தை அலுவல் மொழியாக்கி தங்கள் தாய்மொழியை மாணவர்கள் பள்ளிகளில் கற்கவேண்டிய கட்டாயத்தை உருவாக்கியவர்.

எதிர்காலம் எப்படி வேண்டுமானாலும் போகலாம் என்பதால் நாட்டின் சேமிப்பைப் பாதுகாக்க அதிபரிடம் ஒரு சாவியும் அரசிடம் ஒரு சாவியும் இருக்க வேண்டும்; அப்படிப்பட்ட மிக முக்கிய பொறுப்பை ஏற்கும் அதிபரை மக்களே தேர்ந்து எடுக்க வேண்டும் என்ற ஏற்பாட்டை நடைமுறைப்படுத்தியவர்.

சிறுபான்மைச் சமூகத்தின் உரிமைகள் நிலைக்க வேண்டும். அவர்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக 1988ஆம் ஆண்டில் தேர்தலில் குழுத்தொகுதிகள் ஏற்பாட்டை இடம்பெறச் செய்தவர்.

குழுத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் குழுவில் குறைந்தபட்சம் ஒருவராவது சிறுபான்மைச் சமூகத்தவராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.

மிக முக்கிய ஆதாரத் தூணாக இருந்து செயல்பட்டு இவற்றை எல்லாம் சாதித்த திரு லீ நலிவுற்று இருந்த நிலையிலும் கடைசியாக தனது 90வது பிறந்தநாளன்று நாடாளுமன்றத்திற்கு வந்தார்.

“சிங்கப்பூர் எப்போதுமே லஞ்ச ஊழலை அறவே சகித்துக்கொள்ளாத நாடாக இருந்துவரவேண்டும். இதில் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும். இல்லை எனில் சிங்கப்பூரின் கதை முடிந்துவிடும்” என்று அவர் அப்போது வலியுறுத்திக் கூறினார்.

திரு லீயின் கோட்பாடுகளை வேத வாக்காகக் கருதி சிங்கப்பூர் தலைவர்களும் மக்களும் செயல்பட்டு வருகிறார்கள். புலன்விசாரணைக்கு அமைச்சர் உட்படுத்தப்பட்டுள்ள நிலை; நாடாளுமன்ற நாயகர் நீக்கப்பட்ட சம்பவம்; இனத்தைப் பாராமல் தகுதி உள்ளவரை அதிபராக தேர்ந்து எடுக்க மக்கள் செய்த முடிவு; கொவிட்-19 போன்ற சவால்களைச் சமாளித்த வழி உள்ளிட்ட பலவற்றிலும் திரு லீயின் கோட்பாடுகள் மிளிர்கின்றன.

நவீன சிங்கப்பூரின் தந்தையான திரு லீயின் 100வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் அவர் விட்டுச் சென்றுள்ள அடிப்படைக் கோட்பாடுகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து சிங்கப்பூர் மேலும் மேலும் சாதனைகளைப் படைக்க அனைவரும் சூளுரைப்போம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!