காஸா போர் எதிரொலி: இன, சமய ஒற்றுமைக்கு சிங்கப்பூரின் அணுகுமுறை

டாக்டர் கியோரா எலிராஸ்

பல கலாசார மக்கள் வாழும் உலகம், புவிசார் அரசியல் சூழல்- இந்தச் சவால்களுக்கு இடையே சமுதாய நல்லிணக்கம், கட்டிறுக்கம் என்ற அடிப்படையில் இன, சமய இணக்கம் என்ற பண்புநெறி சிங்கப்பூரில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

இந்த அடிப்படை பண்புநெறிதான் பரந்த அளவிலான சகிப்புத்தன்மை, கலந்துரையாடுவது, ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுத்து ஏற்றுக்கொள்ளும் தன்மை என்ற சமுதாய, அரசியல் சிந்தனையாக உருவெடுத்துள்ளது.

அது மட்டுமல்ல, சிங்கப்பூரில் நிலவும் அமைதியும் நல்லிணக்கமும் அப்படியே என்றென்றும் நீடித்து இருக்கும் என்று வாளா இருந்துவிட முடியாது என்றும் அடிக்கடி நமக்கு நினைவூட்டப்படுகிறது. இதில் நாம் அனைவரும் கடமையுணர்வுடன் விழிப்புடனும் இருக்க வேண்டியது அவசியம்.

பார்க்கப்போனால், கடந்த அறுபது ஆண்டுகளாக, சிறிய தனிநாடாக, முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் வட்டாரத்தில், மிகத் திறமையாகவும் புத்திக்கூர்மையுடனும் சிக்கல் மிகுந்த புவிசார் அரசியல், மக்கள் சூழலை சிங்கப்பூர் கடந்து வந்துள்ளது.

பல கலாசாரங்கள் பின்னிப் பிணைந்திருக்கும் வளமான சூழலை கட்டிக் காப்பது எவ்வளவு முக்கியம் என்பதை சிங்கப்பூர் நன்றாகவே அறிந்துள்ளது. தூரத்து நாடுகளில் நடப்பவைகூட நம்மிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படத்தலாம் என்பதை சிங்கப்பூர் நன்கு புரிந்துவைத்துள்ளது. அதனாலேயே அது அவற்றை உன்னிப்பாக கவனித்தும் வந்துள்ளது. எனவேதான், கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதும், அதைத் தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவம் உடனடியாக பதிலடி கொடுக்கத் தொடங்கியதும் அதன் அதிர்வலைகள் நமது நாட்டையும் தாக்குமுன் நமது சமுதாய, அரசியல் உணர்வுகள் வலுவாக அதை எதிர்கொண்டது.

அங்கு வேகமாக நடப்பவற்றை எதிர்கொள்ள சிங்கப்பூரின் சமுதாய நல்லிணக்கத்தைகட்டிக் காப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அங்கு நடப்பவை நமது நாட்டில் தலைகாட்டக்கூடாது என்பதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். இதன் தொடர்பில் குடிமக்கள் அனைவரும் விழிப்புடன் இருந்து சந்தேகப்படும்படியான நடவடிக்கை, ஒரு சாராருக்காக நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளுதல், ஆகியவை ஏற்புடையதல்ல என்பது தெள்ளத்தெளிவாக தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், இந்தப் போரில் சிங்கப்பூர் கொள்கைப் பிடிப்புடனும் சமதர்மம் பேணும் வகையில் சமநிலையுடனும் நடந்து கொண்டுள்ளது. சிங்கப்பூரின் தற்காப்பு திறன்களை வளர்க்க உதவிய இஸ்ரேலை நினைவில் கொண்டு அது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தது. அத்துடன், பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாதத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் அது உறுதிபடக் கூறியது.

மறுபுறம், சிங்கப்பூர் பாலஸ்தீன அமைப்பின் தலைவர்களுக்கு தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்து, காஸாவில் மனிதநேய அடிப்படையில் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தது. ஐநாவில் அதற்கு ஆதரவும் தெரிவித்து வாக்களித்தது.

சிங்கப்பூரின் சரித்திர, அரசியல், கலாசார, சமுதாயச் சூழலை ஒருவர் நன்கு அறிந்திருந்தால் மட்டுமே அது எவ்வாறு இப்படி ஒரு இன, சமய அடிப்படையிலான ஒரு போற்றுதற்குரிய நாடாக உருவெடுத்துள்ளது என்பது புரியும்.

இதன் ஆழ்வேர்கள் நவீன சிங்கப்பூரின் நிறுவனரும் அதன் முதல் பிரதமருமான லீ குவான் யூ 1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி, மலேசியாவிலிருந்து பிரிந்து தனிநாடாக உதயமானபோது அவர் ஆற்றிய உரையில் அடங்கியுள்ளது. சுதந்திர சிங்கப்பூரை பிரகடனப்படுத்திய அவர், “இது ஒரு மலாய் தேசமல்ல, இது ஒரு சீன தேசமல்ல, இது ஓர் இந்திய தேசமல்ல. மொழி, கலாசாரம், சமயம் என இங்கு அனைவருக்கும் அவரவர்க்கு உரிய இடமுண்டு,” என முழங்கினார். இதன் பின்னணியில் மலாய்-முஸ்லிம், சீன வகுப்பினரிடையே 1964ஆம் ஆண்டு நிகழ்ந்த வன்முறையுடன் கூடிய இனக் கலவரங்கள் அனைவர் மனதிலும் எச்சரிக்கையாக நிழலாடிக் கொண்டிருந்தது.

பல சமய மக்களிடையே சகிப்புத்தன்மை, பல கலாசாரங்கள் சங்கமித்து பல இன மக்கள் ஒன்றுகூடி வாழும் நிலை ஆகியவற்றுக்காக தென்கிழக்கு ஆசியாவிலும், தெற்கு ஆசியாவிலும் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது சிங்கப்பூர். இதற்குப் பின்னால் நம் நாட்டுத் தலைவர்கள் பல்வேறு சமுகங்களைச் சேர்ந்த ஆர்வலர்களுடன் ஒன்றிணைந்து பல்லாண்டுகளாக மேற்கொண்டுள்ள ஒரு மாபெரும் முயற்சி தலைதூக்கி நிற்கிறது.

இந்த முயற்சியில் அனைத்து குடிமக்களுக்கும் பங்குண்டு என்பது அடிக்கடி நினைவூட்டப்படுகிறது. சமுதாய நல்லிணக்கத்துக்கு பக்கபலமாக சிங்கப்பூர் ஒரு முன்மாதிரி நாடாகத் திகழ அதற்கென திரு லீ குவான் யூ போட்ட வலுவான அடித்தளமே காரணம். சமுதாயத்தில் ஒழுங்குமுறை, அனைத்து நிலைகளிலும் கட்டுப்பாடு, ஆகியவற்றுடன் ஆட்சி, அதிகாரம் ஆகியவை ஒருவரின் தகுதி அடிப்படையிலேயே வழங்கும் முறை உருவாகியுள்ளது.

முடிவாகக் கூறுவதென்றால், சிங்கப்பூர் பலரும் போற்றக்கூடிய ஒரு முன்மாதிரியை உருவாக்கியுள்ளது.

இஸ்ரேல் நாட்டுச் சூழல் அடிப்படையில் வித்தியாசமானது என்றாலும் சிங்கப்பூரை ஒரு முன்மாதிரியான நாடாக ஆராய்வது அறிவுஜீவிகளுக்கு நிச்சயம் ஒரு சவாலாகவே இருக்கும், குறைந்தபட்சம் உள்ளூர் மக்களின் நடத்தை தொடர்பாகவோ அல்லது அதையும் தாண்டியோ.

டாக்டர் கியோரா எலிராஸ், துணைக் கல்வியாளர், ட்ருமன் இன்ஸ்டிடியூட், ஹீப்ரூ பல்கலைக்கழகம், ரெய்க்மன் பல்கலைக்கழகத்தின் பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை ஆய்வுக் கழகத்தின் ஆராய்ச்சிக் கல்வியாளர், ‘ஃபாரம் ஃபார் ரீஜனல் திங்கிங் இஸ்ரேல்’.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!