சீரிய செயலால் என்றும் நிலைத்திருக்கும் கோ.சாரங்கபாணி

வரலாற்றில் ஒரு தலைவர், தொண்டர்கள், சீடர்கள் வழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டுசெல்லப்படுவது சாதாரணமாகவே நிகழ்கிறது.

தான் வாழ்ந்த காலத்தில் நிகழ்த்திய செயல்களால் ஒருவர், தலைமுறைகள் தாண்டி வாழ்வது என்பது தமிழ்ச் சமூகத்தில் அரிதான நிகழ்வு.

அந்த வகையில் சிங்கப்பூர் சமுதாயம் பெருவரமாகப் பெற்றவர்களில் ஒருவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி.

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் தமிழ் மொழி, தமிழ்க் கல்வி, இலக்கியம், கலைகள், நாட்டுடன் இணைந்த தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கு பலரும் பாடுபட்டு வந்துள்ளனர். என்றபோதும் இதற்கெல்லாம் ஆணிவேராக இருந்துள்ளவர் கோ.சாரங்கபாணி. அதற்கும் அப்பால் ஒரு சமுதாயமாக தமிழ் மக்களை ஒன்றுதிரட்டியவர் அவர்.

அவர் இட்ட வலுவான அடித்தளத்தில் இன்றுவரையில் இங்கு தமிழ் மொழியுடன் மக்களும் தொடர்ச்சியான மேம்பாட்டை அடைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் திருவாரூரில் பிறந்த கோ.சாரங்கபாணி 21 வயது இளையராக, 1924ஆம் ஆண்டு சிங்கப்பூர் மண்ணில் காலடி வைத்தார்.

அந்த நாள் முதல் அவர் சிங்கப்பூரர் ஆகிவிட்டார். அவரது சிந்தனை, செயல், இலக்குகள் எல்லாமே இந்த மண் பற்றியும், இந்த மண்ணில் வாழும் மக்களைப் பற்றியதுமாகவே இருந்தது.

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் 1974 மார்ச் 16ஆம் தேதி தமது இறுதி மூச்சை விடும் வரையில் 50 ஆண்டு காலமும் சமூகத்திற்காக அவர் வாழ்ந்துள்ளார்.

தமிழ் முரசு முதல், மலாயா பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறை, தமிழ்ப் பள்ளிகளுக்குக் கிடைத்த அரசாங்க ஆதரவு, தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு, தமிழர் பிரதிநிதித்துவ சபையின் தோற்றம் (தமிழர் பேரவை), தமிழர் திருநாள் என்ற பேரியக்கம், இந்துத் திருமணங்களைச் சட்டபூர்வமாக்குதல், விளிம்புநிலை ஊழியர்களுக்கான உரிமை கோரல், குடியுரிமை பெற ஊக்குவிப்பு என்று கோ.சாரங்கபாணி இந்தச் சமுதாயத்திற்கு தந்த கொடைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளாக ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் நிர்ணயித்தது; அரசியல் சாசனத்திலும் பதிவுசெய்யப்பட்டது. பின்னர் வந்த மக்கள் செயல் கட்சி அரசாங்கமும் அதனைத் தொடர்ந்தது. அதிகாரத்துவ அங்கீகாரம் பெற்ற மொழியைக் கல்வியிலும் இலக்கியத்திலும் ஊடகத்திலும் தழைக்கச் செய்தவர்களில் முதன்மையானவர் கோ.சாராங்கபாணி.

இளைஞனான கோ.சா.விடம் ஈ.வெ.ராமசாமியின் பகுத்தறிவுச் சிந்தனைத் தாக்கத்தை ஏற்படுத்தியதென்றாலும் அவரைப் பெரியார் வழியொற்றியாகச் சுருக்கிவிட முடியாது. கல்வி கற்ற புதுமைவிரும்பிகளாக, இந்த நாட்டினராக, உலக மக்களாக தமிழர்கள் உருமாறத் தேவையானதைக் கைக்கொண்ட கோ.சா., உண்மையான, சுயமான சிந்தனையாளர்.

அவரது எண்ணங்களைச் செயலாக்க கைக்கோலாக அவர் நடத்திய தமிழ் முரசு நாளிதழ் விளங்கியது. 1935ல் தொடங்கப்பட்ட தமிழ் முரசு வழி கோ.சா. தமிழ்ச் சமூகத்தின் மனப்போக்கைச் செறிவாக்கினார்.

வாழும் காலத்திலேயே தங்கள் புகழை நிலைநாட்டிவிடுவதில் கவனம்செலுத்துவோர் போல் இல்லாமல், தன்னைக் குறித்த எந்தத் தடயத்தையும் விட்டுப்போக விரும்பாதவராகவே கோ.சா. இருந்துள்ளார். அவரிடம் பத்திரிகை இருந்தது, அச்சகம் இருந்தது; கொண்டாடிப் போற்ற எண்ணற்றோர் இருந்தனர். ஆனால், தன்னைக் குறித்த ஒரு சிறு குறிப்பையும் அவர் விட்டுச்செல்லவில்லை.

சரியாக நூறாண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்தவர், மறைந்து 50 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், இன்றும் சமூகத்தால் போற்றப்படுவதற்கான காரணம், அவர்தம் செயல்களால் ஏற்பட்ட விளைவுகள்தான்.

1. பிழைப்புக்காக இந்த நாட்டுக்கு வந்த தமிழ் மக்கள் இந்த நாட்டின் மக்களாக உரிமையுடன் வாழ வேண்டும் என நினைத்து, அதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து வலியுறுத்தினார். வீடு வீடாகக் கதவைத் தட்டி மக்களைக் குடியுரிமை எடுக்க வைத்தார்.

2. கல்வியும் கலை இலக்கியமும் தமிழர்களுக்கு உயர்வையும் அடையாளத்தையும் ஏற்படுத்தித் தரும் என்பதை அறிந்து, தமிழர்களை அதைநோக்கித் தொடர்ந்து துரத்தினார். அவர்கள் அறிந்தும் அறியாமலும் அவர்களிடம் அந்தச் சிந்தனையை, எழுத்தாலும் விழாக்களாலும் புகட்டிக்கொண்டே இருந்தார்.

3. ஒற்றுமையே பலம், ஒன்றுபட்டுச் செயல்பட்டாலே உயர்வு காண முடியும் என்பதை உணர்ந்தார், உணர்த்தினார். சமயம், ஊர், சாதிகள் என தனித்தனியாகப் பிளவுபட்டிருந்த தமிழர்களைத் தமிழ் எனும் ஒற்றை அடையாளத்துக்குள் ஒன்றுபடுத்தினார்.

4. பல இன, பல சமூக மக்கள் வாழும் சிங்கப்பூரில் தமிழர்கள் தங்களைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டாலே அவர்கள் இங்குள்ள போட்டியைச் சமாளித்து, நிலைத்திருக்க முடியும் என்பதைக் கணித்தவர்; அதற்காக செயல்களை முன்னெடுத்தவர்.

விளிம்புநிலையில் இருந்த பெரும்பாலான தமிழ் மக்கள், வாழ்வில் உயர பொருளியல் உரிமைகளும் ஏற்றங்களும் வேண்டும். அதற்கு அவர்கள் இந்நாட்டு மக்களாக வேண்டும். அவர்கள் ஒரு சமூகமாக ஒன்றுபட்டு, தங்களுக்கென தனித்த ஓர் அடையாளத்தை வளர்த்தெடுக்க வேண்டும். அதேநேரத்தில் இந்த நாட்டுடன் ஒன்றிணைந்த மக்களாகவும் தமிழர்கள் பங்காற்ற வேண்டும் என்பதே கோ.சா.வின் சிந்தைனையும் செயலுமாக இருந்தது.

இதை அடைய இடைவிடாமல் அவர் மேற்கொண்ட 50 ஆண்டுகாலப் பணிகளால்தான் சிங்கப்பூர், மலேசியத் தமிழ் மக்கள் இன்று, வேற்றுமைகள் களைந்து தமிழர்கள் என்ற பேரடையாளத்துடன் வாழ்கின்றனர்.

இதுவே அவர் வருங்காலத் தமிழர்களுக்கும் விட்டுச்சென்றுள்ள பாடம். அதனால்தான் எக்காலத்திலும் தமிழ்ச் சமூகம் கோ.சாரங்கபாணியை போற்றிக் கொண்டாட வேண்டும். அவர் வழிமொழிந்த பாடங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவது தமிழர்களின் கடமை.

பருந்துபோல உயரத்திலிருந்து இந்தியச் சமுதாயத்தின் வருங்காலத்தைக் கணிக்கக்கூடிய ஆற்றல் பெற்றிருந்தார் கோ.சாரங்கபாணி. எண்ணம், செயல், இலக்கு அனைத்திலும் பேருயரத்தில் இருப்பவரே எதிர்காலச் சிந்தனையுடன் செயல்படமுடியும். அத்தகையவரே ஆண்டாண்டு காலத்துக்கும் ஆளுமையாகத் திகழ்வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!