நம்பிக்கையும் நல்லிணக்கமும் பெருகும் தேசியப் பண்டிகை

தீமைகள் அழிந்து நன்மைகள் விளைந்ததைக் கொண்டாடும் நாள் தீபாவளிப் பண்டிகை.

காலம் காலமாகக் கொண்டாடப்பட்டு வரும் விழாவின் அடிப்படையில் மாற்றமில்லை. ஆனால், காலத்துக்கு ஏற்ப கொண்டாட்டமும் வழக்கங்களும் தீபாவளிக் கதைகளும் மாற்றம் கண்டு வந்துள்ளன.

முன்பு தீபாவளி வருகிறது என்றால் ஒரு மாதத்துக்கு முன்னரே பரபரப்பு தொடங்கிவிடும்.

வீட்டுக்குச் சாயம் பூசுவதில் தொடங்கி, சன்னல் திரைகள், மேசை விரிப்பு மாற்றுவது, வாழ்த்து அட்டைகளை அஞ்சல் செய்வது, முறுக்கு, பலகாரங்களுக்கு மாவு அரைப்பது, நீத்தோர் படையல், நரகாசுரன் படையல் என்று ஏகப்பட்ட வேலைகள்.

பண்டிகை, வீட்டு விஷேசங்களுக்கு மட்டுமே புத்தாடை என்றிருந்த காலத்தில் துணி வாங்கச் செல்வதே ஒரு கொண்டாட்டமாக இருக்கும்.

குடும்பத்தினரும் அக்கம் பக்க நண்பர்களும் ஒரு வீட்டில் கூடி பலகாரம் செய்வது இன்னொரு குதூகலத்தைத் தரும்.

வாழ்க்கை மாற்றங்களும் வசதியும் இதையெல்லாம் மாற்றிவிட்டன.

பலகாரங்களும் சாப்பாடும் கடைகளில் விதவிதமாக கிடைக்கின்றன. இதனால் வீட்டுப் பெண்களும் பண்டிகை நாளில் ஓய்வாக, குடும்பத்தினர் நண்பர்களுடன் ஒன்றுகூடி, ஒன்றாக உணவுண்டு, பேசி மகிழ முடிகிறது.

கொவிட் பெருந்தொற்றிலிருந்து முழுதாக மீண்டு, ஒன்றுகூடி பண்டிகை கொண்டாட முடிவதில் ஒரு பக்கம் நிம்மதி.

மறுபக்கம் ஏறிக்கொண்டே போகும் விலைவாசி ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடிப்படைத் தேவைகளைச் சமாளிக்கவே பலரும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 40 விழுக்காடு சிங்கப்பூரர்கள் மட்டுமே அடிப்படைத் தேவைகளுக்கு அப்பால் செலவு செய்யும் வசதியுடையவர்களாக உள்ளனர் என்று புதன்கிழமை ஓசிபிசி வங்கி வெளியிட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட இவர்களின் எண்ணிக்கை எட்டு விழுக்காடு குறைந்துள்ளது.

நோய்த்தொற்றிலிருந்து மீண்டு வரும் நேரத்தில் ரஷ்யா - உக்ரேன் போர் தொடங்கியது. உலகில் அதிகளவில் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடான உக்ரேன் போர்ச் சூழலில் சிக்கியதால் சமையல் எண்ணெய், கோதுமை என பல பொருள்களின் விலை பல மடங்கு ஏறியது.

பெட்ரோலிய விலை ஏற்றத்தால், சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் உயர்ந்து விட்டது.

எரியும் நெருப்பில் மேலும் எண்ணெய்யை ஊற்றுவதுபோல இஸ்ரேல்- ஹமாஸ் போர் மேலும் நிலைமையை சிக்கலாக்கி வருகிறது.

போதாக்குறைக்கு பருவநிலை மாற்றங்களால் கன மழையும் வறட்சியும் உலகெங்கும் பயிர் விளைச்சலையும் மக்களின் வாழ்க்கையையும் பெருமளவில் பாதித்து வருகிறது.

இந்தச் சம்பவங்களுக்கும் சிங்கப்பூருக்கும் நேரடித் தொடர்போ, பாதிப்போ இல்லாது போலிருக்கலாம். ஆனால், இவற்றின் தாக்கம் நம்மையும் பாதிக்கவே செய்யும்.

தாய்லாந்திலோ, இந்தியாவிலோ நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டால் இங்கே அரிசி விலை ஏறும். மழை மலேசியாவின் காய்கறிப் பயிர்களைச் சேதம் செய்தால் காய்கறி விலை உயரும். வியட்நாமில் வெள்ளம் வாழைத் தோட்டத்தை அழித்ததால் சென்ற ஆண்டு வாழையிலை கிடைப்பதே சிரமமாக இருந்தது.

எத்தனை சிரமங்களும் சிக்கலும் புகை மூட்டமாகச் சூழ்ந்தாலும் அது விரைவில் அகன்று விடும், நம்பிக்கை கீற்றுகள் தோன்றும்.

மற்ற நாடுகளைச் சார்ந்திருந்தாலும் மாற்று வழிகளையும் ஏற்பாடுகளையும் சிங்கப்பூர் உடனுக்குடன் செய்து வருகிறது. விலையேற்றத்தைச் சமாளிக்க உதவிகளையும் வழங்குகிறது.

உலகின் நிலையற்ற பொருளியல்சூழல், அரசியல் தீர்மானங்கள், பருவநிலைப் பாதிப்பு எதுவாக இருந்தாலும் எதையும் சமாளிக்கும் திறனும் திடமும் சிங்கப்பூருக்கு உண்டு. அதற்கு நாம் கடந்து வந்த பாதையே சான்று.

வெளிப்புறத் தாக்கங்களால் இந்த உறுதி அவ்வப்போது தளர்வடைந்தாலும், அதை உதறிவிட்டு முன்னோக்கிச் செல்வதே சிங்கப்பூரர்களின் இயல்பு.

இதுநாள் வரை சிங்கப்பூரரர்கள் ஒரே மக்களாக பலவற்றைச் சாதித்துள்ளனர். அதுபோல் இனிவரப்போகும் சவால்களையும் இன்முகத்துடன் எதிர்கொண்டு சாதித்து ஒரே நாடு, ஒரே மக்களாக உயர்வோம். எல்லாருடைய பங்கும் உள்ளது. எல்லாரும் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதை அடுத்த ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும்போதும் நினைவில் நிறுத்துவோம்.

இருள் நீக்கி ஒளி பெருக்கும் தீபாவளிப் பண்டிகை மக்கள் மனங்களிலும், நாட்டிலும் உலகத்திலும் நம்பிக்கை ஒளியைப் பரப்பட்டும்.

மகிழ்ந்திருப்பதும் மற்றவர்களை மகிழ்விப்பதுமே பண்டிகை கொண்டாடுவதன் நோக்கம்.

பல இன, சமய, மொழி பேசும் மக்கள் ஒன்றிணைந்து வாழும் சிங்கப்பூர் சமுதாயத்தில் வேறு பல வெளிநாட்டு மக்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. வசதி அடிப்படையில் மக்களிடையே இடைவெளியும் அதிகரித்து வருகிறது. இச்சூழலில் புரிந்துணர்வும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவையாகிறது. இவற்றை வளர்ப்பதில் பண்டிகைகள் முக்கியப் பங்காற்றுகின்றன.

சிங்கப்பூரின் தேசியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை இந்துக்களுடன் சேர்ந்து மற்ற இன, சமய மக்களும் கொண்டாடி மகிழும் இந்நாள் எல்லாருக்கும் இன்பமான நாளாக அமையட்டும். எல்லார் மனதிலும் நல்லெண்ணம் பரவட்டும்.

இந்த இன்பம் ஆண்டு முழுவதும் நீடிக்கட்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!