தனுஷ்: புது அனுபவம் கிடைத்தது

‘கொடி’ படத்தில் இரட்டை வேடங்களிலும், அரசியல்வாதியாக வும் நடித்துள்ளார் தனுஷ். இப்படத்தில் திரிஷா, அனுபமா பரமேஸ்வரன் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில், ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கி இருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் இப்படம் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். “இந்தப் படத்தில் இரட்டைச் சகோதரர்களாக நடித்து இருக்கிறேன். அதில் தாடி வைத்திருப்பவர் மூத்தவர். அவர்தான் அரசியல்வாதி. அவருக்கு ஜோடி திரிஷா. எனக்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணனும் அப்பாவாக கருணாசும் நடித்து இருக்கிறார்கள்.

அரசியல்வாதியாக நடித்த அனுபவம் பற்றி? “அரசியல் கதையம்சம் உள்ள படத்தில் நான் அரசியல்வாதியாக நடித்தது புதிய அனுபவமாக இருந்தது. இது அரசியல் தொடர்பான கதை என்றாலும் படத்தில் யாரையும் தாக்கவில்லை. அரசியலில் உள்ள நல்ல விஷயங்களையும் சொல்லி இருக்கிறோம். அதேபோல் பாதகமான விஷயங் களையும் அலசியுள்ளோம். “இது குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும். அரசியல் ஒரு சாக்கடை என்று கூறுவார்கள். அதில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது. இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டுமா? வரக்கூடாதா? என்ற கேள்விக்கான பதில் இப்படத்தில் இருக்கிறது. ‘ஆடுகளம்’ படத்திலேயே உங்களுடன் ஜோடி சேர இருந்தவர் திரிஷா. அப்போது நடிக்க முடியவில்லை என்பதற்காக இப்படத்தில் சேர்க்கப்பட்டாரா? “அப்படியில்லை. கதாபாத்திரத்துக்கு அவர் பொருத்த மாக இருப்பதாக இயக்குநர் கருதியதால் சேர்க்கப்பட்டார். இரட்டை வேடங்களில் நடிக்க சிரமமாக இருந்ததா? “சிரமம்தான். ஒவ்வொரு காட்சியிலும் இருமுறை நடிக்க வேண்டியிருந்தது. இதற்கு முன்பு இரட்டை வேடங்களில் நடித்ததில்லை என்பதால், புது அனுபவமாக இருந்தது. இரட்டை வேடங்களில் நடித்தவர்கள் மீது பெரிய மரியாதையும் ஏற்பட்டது,” என்றார் தனுஷ்.

Loading...
Load next