சிறப்புப் பார்வை: 2021ல் தமிழ் சினிமாவும் சமூக ஊடகமும்

2021ஆம் ஆண்டை, தமிழ் திரைப்படங்கள், வெகுசனப் பண்பாடு, சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் நிறைய கருத்து விவாதங்களை ஏற்படுத்திய ஆண்டாகச் சொல்லலாம்.

1. தமிழ் திரைப்படங்களில் சமூக நீதியும் சொல்லப்படாத கதைகளும்

தமிழ் திரைப்படங்களிலும் வெகுசனப் பண்பாட்டிலும் விளிம்புநிலை மக்களின் நிலையும் சமூக நீதியும் முக்கிய இடம்பிடித்தன.

அண்மைய ஆண்டுகளில் பரியேறும் பெருமாள், விசாரணை, மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட பல படங்கள் இந்தக் கருப்பொருள்களைப் பேசியுள்ளன. இருப்பினும் சமூக நீதியும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலும் ஆகச் சத்தமாக ஒலித்த ஆண்டு 2021 என்று சொல்லலாம்.

கர்ணன், ஜெய் பீம், சார்ப்பட்டா பரம்பரை போன்ற மாற்றுப் பார்வையை வைத்த படங்கள், பொதுச் சமூகம் பார்த்து, ரசித்து ஏற்றுக் கொண்டாடும் வண்ணம் வெளிவந்தன.

அடிமட்ட மக்களின் பிரச்சினைகளையும் வாழ்க்கையையும் பற்றிய புதிய புரிதலை அவை உருவாக்கின.

அதே நேரத்தில் இந்தப் படங்களுக்கு எதிர்க்கருத்துகளும் இருந்தன. இந்த எதிர்க்கருத்தியலைக் கொண்ட ருத்ர தாண்டவம் போன்ற சில திரைப்படங்களும் வெளிவந்தன.

இந்த பல்வேறு படைப்புகள், பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய விவாதங்களையும் எதிர்விவாதங்களையும் உருவாக்கின.

உலகமே வரவேற்ற என்ஜாய் எஞ்சாமி பாடலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசியது.

புலம் பெயர்ந்த உழைக்கும் மக்கள் அந்நியப்படுத்தப்பட்டது, அவர்களின் வலி, இயற்கைக்கும் மனிதர்க்கும் உள்ள உறவு போன்ற பல கருத்தியல்களை அந்தப் பாடல் ஆராய்ந்தது.

திரைப்படம் சாராத, தன்னிச்சையான இசையின் பக்கமும் பலரது கவனம் திரும்ப அது காரணமாகவும் இருந்தது. அறிவு போன்ற நல்ல கலைஞர்களை அது முன்னிலைப்படுத்தியது.

2. பிக் பாஸ்- சர்வைவர் - உண்மைக்கு வெகு அருகில்?

ஒவ்வோர் ஆண்டும் ஒலிபரப்பாகும் பிக் பாஸ், நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டு உலகப் புகழ் பெற்ற சர்வைவர் நிகழ்ச்சி தமிழுக்கு வந்தது.

இவற்றை வம்புகள், இச்சைகள், புரளிகள் ஆகியவற்றைப் பார்த்து ருசிக்கும் வெறும் நிகழ்ச்சிகளாகப் பார்க்கலாம்.

அதேநேரத்தில் நம்மை பிரதிபலிக்கும் சமூகக் கண்ணாடியாகவும் இத்தொடர்களைப் பார்க்கலாம்.

அவ்வாறு பார்த்தால், கலாசாரம், அவை அடக்கம், அறம், நேர்மை, போட்டித்தன்மை, நட்பு, சமூக நியமங்கள் (social conditioning), ஆண் -பெண் உறவு நிலை, பாலின பங்கு (gender roles) போன்ற பல அம்சங்களை இந்த நிகழ்ச்சிகள் 2021ல் பேசியுள்ளன. கேள்விக்கும் உட்படுத்தியுள்ளன.

அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சிகளில் வருபவர்களை நாம் எவ்வாறு திரையில் பார்த்து மதிப்பிடுகிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு ஆரி, பாலா, ராஜு, பிரியங்கா, உமாபதி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யா, சரண், விக்ராந்த் - இவர்களின் வெவ்வேறு குணநலன்கள், பார்வைகளை நாம் எவ்வாறு பார்க்கிறோம் என்பதையும் சுயபரிசீலனை செய்யலாம்.


அவர்கள் நிகழ்ச்சியில் செய்யும் செயல்களை மதிப்பிடுகிறோமா அல்லது அவர்களின் வெளிப்புற வாழ்க்கையை மதிப்பிடுகிறோமா, அல்லது நம்மை அவர்களில் பார்த்து மதிப்பிடுகிறோமா என்று நம்மை நாம் கேட்டுக்கொண்டால் நம்மைப் பற்றித் தெரிந்துகொள்ள இது நல்ல வாய்ப்பு.

நம்மையும் நமது சமூகத்தையும் பற்றி பல பார்வைகளும் கருத்துகளும் விவாதங்களும் இந்த நிகழ்ச்சிகளின் வழி முன்வைக்கப்பட்டுள்ளன.

அதே நேரம் உளவியல் எல்லைகள் (boundaries), முடியாது என்று சொல்வது (saying no), ஒருவரை மனரீதியாக நிலைலையச் செய்வது போன்ற எதிர்மறைப் பண்புகளையும் இந்த நிகழ்ச்சிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

உணர்வுகளைத் தூண்டும் இது போன்ற அம்சங்களைத் தள்ளி நின்று பார்க்காமல், நம்மைப் பாதிக்க அனுமதிப்பது இன்றைய சூழலில் மனநலனுக்கு ஆபத்தான ஒன்று. சில நேரங்களில் பொருளற்ற வாக்குவாதங்களுக்கு இது இட்டுச் செல்கிறது.

4. ஓடிடி தளங்களின் ஆதிக்கம்

உலகமயத்துக்கு ஏற்ப தமிழ்த் திரைப்படம் தன்னை மாற்றிக்கொள்ளத் தொடங்கியுள்ள ஆண்டு 2021 என்று சொல்லலாம்.

கொவிட்-19 சூழல் தொடர்ந்ததால், தமிழ்த் திரையுலகம், ஓடிடி தளம் எனும் இணையத் தளங்களில் திரைப் படைப்புகள் நம்மை அதிகமாக வந்து சேர்ந்தன.

நிறைய நல்ல படங்களை நாம் இணையம் வழியாகப் பார்த்தோம். தமிழ் இணையத் தொடர்களும் படைக்கப்பட்டன. அவற்றில் ஜெய்பீம் பிரதான இடத்தைப் பிடித்தது.

திரைப் படைப்புகளையும் உருவாக்கவும் அவற்றைப் பார்த்து ரசிக்கவும் ஓடிடி புதிய வழிகளை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதிலும் இருந்து வரும் போட்டியைச் சமாளிக்க, புதிய கதைகள், திரைக்கதைகள், திரைமொழிகள், தத்துவ அடிப்படைகள் போன்றவற்றை தமிழ் சினிமா கொண்டிருந்தது. இது புத்தாக்கத்துக்கு வழி விட்டிருக்கிறது.

5. பெண்களின் குரல்

2021ல் பெண்களின் குரல் சினிமாவில் ஓங்கிக் கேட்டது என்று சொல்வேன்.

இந்தியத் திரைப்படங்கள் பற்றி சமூக ஊடகங்களில் பேசும் பெண்கள் அதிகரித்தனர்.

உதாரணத்துக்கு, womenofcinema, filmyponnu,thamizhpen, bebadass.in போன்ற இன்ஸ்டகிராம் கணக்குகளில் திரைப்படங்கள் பற்றி விமர்சனமும் ஆய்வும் செய்தனர்.

குறிப்பாக திரைப்படங்களில் ஆண்-பெண் பாத்திரங்கள் பற்றியும் சமூகச் சிந்தனைகள் பற்றியும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லப்பட்ட விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பி, மீள்பார்வையை முன்வைத்தனர்.

அடுத்து, மைய நீரோட்டத் திரைப்படங்களில் வலுவான பெண் பாத்திரங்கள் படைக்கப்பட்டதை ஆக்ககரமாகப் பார்க்கிறேன். இவர்கள் சமூக நிகழ்வுகளைப் பற்றி அழுத்தமான கருத்துகளைப் பேசினர்.

பெண்சார்ந்த விஷயங்கள், அவர்கள் பேசிய சமூகக் கருத்துகள் ஆகியவற்றுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருக்கவே செய்கிறது. ஆனால் இங்கு கருத்துப் பரிமாற்றமும் விவாதமும் நடைபெறுகிறது என்பதே முக்கியமானது.

இது போன்ற அம்சங்கள் சிறிய மாற்றம் என்றாலும், இது அதிகரித்து வரும் மாற்றம் என்பது வரவேற்கவேண்டிய ஒன்று.

6. தமிழ் அடையாளத்தை முன்னிறுத்திய உள்ளூர் பிரபலம்

சிங்கப்பூரைப் பார்த்தால் யங் ராஜாவைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். பல சாதனைகளை இந்த ஆண்டு நிகழ்த்தியுள்ளார் யங் ராஜா.

உலகப் புகழ்பெற்ற ராப் இசைக்கலைஞர் ஸ்னூப் டாக் வெளியிட்ட உலக அளவிலான ஆல்பத்தில் யங் ராஜாவின் ராப் வரிகள் இடம்பெற்றன. அதில் தமிழும் கலந்திருந்தது.

அதே நேரத்தில் யங் ராஜாவின் சமூக ஊடகப் பக்கத்தில் அவரது இன்னொரு பக்கமும் தெரிந்தது. பெற்றோருடன் அவர் உரையாடும் பல காணொளிகளை அவர் பதிவேற்றினார். குறிப்பாக அவற்றில் பெற்றோருடன் தமிழில் பேசினார்.

அதன் வழி, தமது தமிழ் அடையாளத்தை வெளிப்படையாக அரவணைத்து ஏற்றுக்கொண்டார்.

சமூக ஊடகத்திலும் பொது வெளியிலும் பலரும் வெளிப்படுத்தப் பயப்படும் தங்கள் தனிப்பட்ட, அந்தரங்கப் பக்கத்தை அவர் காட்டினார்.

தமிழில் பேசத் தயங்கி, அந்த அடையாளத்திலிருந்து விலகும் போக்கு இருந்துவரும் நேரத்தில் இதுபோன்றவர்கள் நல்ல முன்னுதாரணங்கள்.


7. சமூக ஊடகத்தில் பொதுநலன் பேசிய இந்தியர்கள்

2021இல் அதிகமான இந்தியர்கள், சமூக நலனில் கவனம் செலுத்தும் சமூக ஊடகப் பக்கங்களைத் தொடங்கி, பல விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். உதாரணத்துக்கு மெண்டல் ஹெல்த்எஸ்ஜி, டோன்ட்சேஓகேகண்மணி, போன்றவை ஏற்பாடு செய்த மனநலன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் சொல்லலாம்.

நீண்டநாள்களாகத் தொடரும் பெருந்தொற்றுச் சூழல், இனவாதம் மற்றும் இன உறவுகள் பற்றிய விவாதங்கள் போன்றவற்றால் ஏற்பட்ட அழுத்தங்களைச் சமாளிக்க இந்தப் பக்கங்கள் உதவின.

மனநலம் போன்ற இந்தியர்கள் பேசத் தயங்கும் அம்சங்களை இந்தப் பக்கங்கள் ஆக்ககரமான வகையில் கையாண்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!