5,400 கி. மீ. மனிதநேயப் பயணம்

கம்போடியா நாட்டில் ஏழ்மையில் வாழும் குழந்தைகளைப் பற்றிப் படித்து, அவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் 12 நாட்களுக்கு 5,403 கிலோ மீட்டர் தூரம் குடும்பத்துடன் பயணம் செய்தார் திரு கெவின் ராஜா, 53.

சிங்கப்பூரிலிருந்து கம்போடியாவிற்கு தமது மனைவி திருமதி செல்வராணி ராஜா, 51, செல்வி ஷக்‌ஷி, 20, உஷா, 15, கோபினெஷ், 12, ஆகிய மூன்று குழந்தைகளோடும் கார் பயணத்தை மேற்கொண்டார் திரு கெவின். “வழக்கமான சுற்றுபயணிகளைப்போல் விமானத்திலேயே கம்போடியாவிற்குச் செல்ல நிறைய பேர் சொன்னார்கள். ஆனால் எனக்கு நீண்ட கார் பயணங்கள்தான் விருப்பம். தொடக்கத்தில் நண்பர்களோடு தாய்லாந்து செல்ல திட்டமிட்டேன். ஆனால் அவர்களால் வரமுடியாத நிலையில் என் குடும்பத்துடன் கம்போடியா செல்ல முடிவெடுத்தேன்,” என்றார் வட்டார தரவு பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரியும் திரு கெவின்.

நவம்பர் 28ஆம் தேதி தொடங்கிய பயணம் 12 நாட்களுக்கு நீடித்தது. ஆறு நாட்கள் மலேசியா, தாய்லாந்து பயணம் செய்து டிசம்பர் 3ஆம் தேதி கம்போடியாவை அடைந்தார் அவர். “கம்போடியா பற்றி விசாரித்தபோது சில பகுதிகளில் உணவு, கல்வி போன்ற அத்தியாவசிய தேவை களின்றி குழந்தைகள் தவிக்கி றார்கள் என்பது தெரிய வந்தது. அதுபோன்ற குழந்தைகளுக்கு உதவும் நோக்கத்தில் இப்பயணத்தை மேற்கொண்டோம்,” என்றார் திரு கெவின். கம்போடியாவின் சியம் ரெப் நகரத்தில் அமைந்திருக்கும் சிங்கப்பூர்த் தூதரகத்துடன் தொடர்புகொண்டு அங்கு இயங்கும் உதவி அமைப்புகளைப் பற்றி விசாரித்தார் திரு கெவின்.

தூதரகத்தால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று அமைப்புகளில் ‘ஃபீடிங் டிரீம்ஸ் கம்போடியா’ (Feeding Dreams Cambodia) என்ற அரசு சார்பற்ற அறநிறுவன அமைப்பைத் தேர்வு செய்து உதவினார் அவர். சியம் ரெப் நகரத்தின் சேரிப் பகுதிகளில் வசிக்கும் ஏறக்குறைய 800 குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் இந்த அமைப்பு உதவி வருகிறது. பள்ளி ஒன்றை நடத்தி குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி கற்றுக்கொடுப்பது உட்பட வேலை வாய்ப்புகளுக்கான திறன்களையும் வளர்த்து வருகிறது ‘ஃபீடிங் டிரீம்ஸ் கம்போடியா’.

டிசம்பர் 5ஆம் தேதி அங்கு சென்றபோது திரு கெவினின் குடும்பத்தினர் ஏறத்தாழ 30 மாணவர்களைச் சந்தித்துப் பேசினார்கள்.

“சியம் ரெப் நகரம் சுற்றுலாத்தலமாக இருப்பதால் அடிப்படைக் கல்வி உட்பட துறை சார்ந்த திறன்களையும் வளர்ப்பதற்கு இந்த அமைப்பு உதவுகிறது. குறிப்பாக தங்குவிடுதி நிர்வாகத் துறை (hotel management) சார்ந்த திறன்களைப் பெரும்பாலான மாணவர்களிடம் வளர்க்கிறார்கள். அதுபோக காற்பந்து போன்ற விளையாட்டுகளிலும் ஈடுபடுத்துகிறார்கள்,” என்றார் திரு கெவின்.

சிங்கப்பூரைப் பற்றிய சுவாரசிய அம்சங்கள், சிங்கப்பூரிலிருந்து கம்போடியாவிற்கு வந்த பயணம், தமிழர் பாரம்பரியம், வரலாறு போன்றவற்றை ஒட்டி கலந்துரையாடல் இடம்பெற்றது.

“என் நெற்றியில் இருந்த குங்குமப் பொட்டைப் பார்த்து குழந்தைகள் ஆர்வத்துடன் அதைப் பற்றி விசாரித்தனர். அதனால் இந்திய பாரம்பரியம் பற்றிப் பேசினேன். அங்குள்ள சிறுமியருக்கும் பொட்டு வைத்து அழகு பார்த்தேன்,” என்றார் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் தாதியாகப் பணியாற்றும் திருமதி செல்வராணி.

“அங்குள்ள பிள்ளைகளின் பின்னணிகளைப் பற்றி ‘ஃபீடிங் டிரீம்ஸ் கம்போடியா’ பள்ளியின் ஆசிரியர்கள் விளக்கமளித்தனர். அதைக் கேட்டு நாங்கள் கவலை அடைந்தோம்,” என்று குறிப்பிட்டார் திருமதி செல்வராணி.

“முறையான ஊட்டச்சத்து உணவு இல்லாததால் அக்குழந்தைகள் வளர்ச்சியின்றி சிறிதாக காணப்படுவர். சிலர் சிறு வயதில் ஆதரவற்றவர்களாகிவிடுகின்றனர். அவர்களின் சோகக் கதைகளைக் கேட்கும்போது கண்ணீர் தானாக வந்துவிடும். நிச்சயம் தொடர்ந்து இந்த அமைப்புக்கும் குழந்தைகளுக்கும் ஆதரவு வழங்கி வருவோம்,” என்றார் திருமதி செல்வராணி.

11 நண்பர்களிடம் திரட்டப்பட்ட பணமும் தனிப்பட்ட பணத்தையும் சேர்த்து திரு கெவின் குடும்பத்தினர் ‘ஃபீடிங் டிரீம்ஸ் கம்போடியா’ அமைப்பிற்கு US$1,000 வழங்கினர். அத்துடன் அலங்காரப் பதக்கம் ஒன்றையும் வழங்கினர்.

சிங்கப்பூரில் இயங்கும் ‘Wish a Smile Foundation’, ‘Ikilledsuicide’ போன்ற பல உதவி, அறநிறுவன அமைப்புகளிலும் திரு கெவின் தொண்டூழியராக சேவையாற்றி வருகிறார். சிங்கப்பூர் இந்திய கலைஞர் சங்கத்தின் உறுப்பினராகவும் அவர் இருக்கிறார். அச்சங்கம், ‘அங்கோர் தமிழ்ச் சங்கம் கம்போடியா’ அமைப்புடன் தொடர்புகளை வளர்க்கும் வகையில் வாழ்த்து மடலையும் அலங்காரப்பதக்கத்தையும் வழங்கினார் திரு கெவின்.

திரு கெவின் குடும்பத்தினர் இம்மாதம் 9ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பினர். மியன்மார், இந்தியா போன்ற நாடுகளில் உள்ள வசதி குறைந்தகுழந்தைகளுக்கும் உதவ கார் பயணம் செல்ல ஆசைப்படுகிறார் திரு கெவின்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!