கிருமித்தொற்றால் ஏற்படும் சரிவுக்காக வரவுசெலவுத் திட்டத்தில் ‘வலுவான’ நிவாரணத் தொகுப்பு

வர்த்தகம் சார்ந்த பொருளியல் நாடான சிங்கப்பூரில், ‘கோவிட்-19’ எனப்படும் கொரோனா கிருமித் தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளியல் சரிவைச் சமாளிக்க உதவும் வகையில், அடுத்த வாரம் வெளியாகவுள்ள வரவுசெலவுத் திட்டத்தில் “வலுவான” பொருளியல் தொகுப்பு பற்றி அறிவிக்கப்பட உள்ளது.

சீனாவில் கொரோனா கிருமித் தொற்றின் தாக்கம் மிகவும் மோசமாக இருப்பது உள்ளிட்ட பல காரணங்களால் சிங்கப்பூரின் பொருளியலுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தேசிய வளர்ச்சி அமைச்சரும் கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்கும் அமைச்சர்கள்நிலை பணிக்குழுவின் தலைவர்களுள் ஒருவருமான திரு லாரன்ஸ் வோங் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா கிருமித் தொற்றால் சிங்கப்பூரின் பயணத் துறை, விருந்தோம்பல் துறை போன்றவை ஏற்கெனவே மந்தமடைந்துள்ள நிலையில் மற்ற துறைகளிலும் இதன் தாக்கம் சற்று கடுமையாகவே இருக்கும் என்றார் அவர்.

அதனைத் தொடர்ந்து, வரும் 18ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள வரவுசெலவுத் திட்டத்தில் உற்ற நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் என்றார் அவர்.

2003ஆம் ஆண்டில் சார்ஸ் தொற்றுக் காலத்தில் $230 மில்லியன் நிவாரணத் தொகுப்பாக வழங்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்படவுள்ள தொகுப்பு எவ்வளவு மதிப்பிலானது என்பது பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

#தமிழ்முரசு #வரவுசெலவுத் திட்டம் #கொரோனா #கொவிட்-19

Loading...
Load next