கொரோனா கிருமித்தொற்றால் மேலும் மூவர் பாதிப்பு; எண்ணிக்கை 50 ஆனது

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாக  இன்று (பிப்ரவரி 12) தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிங்கப்பூரில் அந்தக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. மூவரும் சீனாவுக்கு அண்மையில் பயணம் மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது.

அதில் இருவர் ‘கிரேஸ் அசெம்பிளி ஆஃப் காட்’ என்ற தேவாலயத்தின் இரு வழிபாட்டுத்தலங்களுக்குச் சென்றவர்கள். ஒரு தலம் தங்ளின் வட்டாரத்திலும் மற்றொரு தலம் புக்கிட் பாத்தோக் வட்டாரத்திலும் உள்ளது.

மூன்றாம் நபர் மரினா பே நிதி மையத்தில் அமைந்துள்ள ‘டிபிஎஸ்’ வங்கியில் பணியாற்றுபவர்.

வங்கி ஊழியருக்கு கொரோனா கிருமித்தொற்று உள்ளதை நிறுவனம் அறிந்ததுமே கிட்டத்தட்ட 300 ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அனுப்பிவிட்டதாகக் கூறப்பட்டது.

இதுவரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 15 பேர் குண மடைந்துள்ளதாகவும் மீதம் 35 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதில் எட்டு பேரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக இன்று மாலை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.

கொரோனா கிருமித்தொற்று தொடர்பில் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் நிலை பணிக்குழுவிற்குத் தலைமையேற்றவர்களில் ஒருவர் திரு கான்.

“கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் குணமடைந்தாலும் சிலர் கடுமையாகப் பாதிக்கப்படலாம். அதில் மிகச் சிலர் நாளடைவில் கிருமி பாதிப்புக்குப் பலியாகலாம். நாம் எதற்கும் தயாராக இருக்கவேண்டும்,” என்று கூறினார் திரு கான்.

#தமிழ்முரசு #கொரோனா #50

Loading...
Load next