கொவிட்-19: தென்கொரிய தேவாலயத்தின் 200,000 உறுப்பினர்களிடம் பரிசோதனை

தென்கொரியாவில் மேலும் 60 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியதாக இன்று உறுதி செய்யப்பட்டது. 

இவர்களையும் சேர்த்து கொரோனா  நோயாளிகளின் எண்ணிக்கை அங்கு 893 ஆகி உள்ளதாக கொரிய தொற்றுநாய் தடுப்பு நிலையம் தெரிவித்தது. 

சீனாவுக்கு வெளியில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடு தென்கொரியா. 

மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் தென்கொரியாவில் அதிகரித்து வருகிறது. 

இதுவரை அங்கு ஒன்பது பேர் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்துவிட்டனர். 

புதிதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 16 பேர் தென்கிழக்கு நகரான டேகுவில் உள்ள தேவாலயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள். 

கொரோனா கிருமி பரவத் தொடங்கிய இடமாக அது கருதப்படுகிறது. 

இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 68 விழுக்காட்டினர் இந்த தேவால யத்துடன் தொடர்புடையவர்கள். 

அங்கு நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்ற 61 வயது மாதுவிடம் முதன்முதலாக கிருமித் தொற்று கண்டறியப்பட்டது. 

இந்நிலையில், கிருமிப் பரவல் மையமான டேகு நகருக்கு அதிபர் மூன் ஜே இன் இன்று முதல்முறையாகச் சென்றார். 

அங்குள்ள நிலவரம் பற்றி செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட அவர், “மிகவும்  கொடூரமாக உள்ளது,” என்றார்.  

மேலும், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வரும் வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றார் அவர்.

இருப்பினும் டேகு நகரை முடக்கிவைக்கும் எண்ணம் எதுவும் அரசாங்கத்திற்கு இல்லை என்றார் அதிபர்.

இதற்கிடையே, நார்த் ஜியோங்சாங் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி இன்று உயிரிழந்தார். ஷின்சியோன்ஜி தேவாலய உறுப்பினர் ஒருவருடன் தொடர்பில் இருந்தவர் அவர் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், தமது உறுப்பினர்கள் அனைவரின் பெயரையும் அரசாங்கத்திடம் அளிக்க முன்வந்துள்ளது தேவாலய நிர்வாகம். 

தற்போது அதில் கிட்டத்தட்ட 215,000 பேர் உறுப்பினர்களாக உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. 

அரசாங்கத்தின் அனுமதி கிடைத்ததும் கூடிய விரையில் அவர்கள் அனைவரிடமும் கொரோனா கிருமித்தொற்றுக்கான மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என தென்கொரிய பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. 

பொதுமக்களின் ஆத்திரத்தைத் தணிக்கவும் கிருமிப் பரவலைத் தடுக்கவும் இந்தப் பரிசோதனை அவசியம் என்றது அலுவலகம்.  

இந்நிலையில், தேவாலயத்தைக் கலைக்க இணையம் வழியாக 552,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இதற்கான இயக்கம் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. 

தேவாலய உறுப்பினர்களைத் தொடர்புகொள்வது மிகவும் சிரமமாக உள்ளது என்றும் பதிலளிக்க அவர்கள் முன்வருவதில்லை என்றும் தென்கொரிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்களின் சினம் அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

#கொரோனா #கொவிட் #தென்கொரியா #தமிழ்முரசு