இந்தியாவில் அமைச்சர் சுட்டுக்கொலை

புவனேஸ்வர்: நெஞ்சில் சுடப்பட்ட ஒடிசா மாநில சுகாதார, குடும்ப நல்வாழ்வுத்துறை அமைச்சர் நப கிஷோர் தாஸ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஜார்சுகுடா மாவட்டம், பிரஜ்ராஜ் நகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகச் சென்றுகொண்டிருந்தபோது திரு நப தாஸ் சுடப்பட்டார்.

அமைச்சர் தமது காரிலிருந்து இறங்கியபோது காவல்துறைத் துணை ஆய்வாளர் கோபால் தாஸ் அவரைச் சுட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, உள்ளூர் மருத்துவமனைக்கு விரைந்து எடுத்துச் செல்லப்பட்ட திரு நப தாஸ், பின்னர் விமானம் மூலமாக தலைநகர் புவனேஸ்வருக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

“மக்கள் குறைதீர்ப்பு மையத் திறப்புவிழாவிற்கு திரு நப தாஸ்தான் தலைமை விருந்தினர். காரைவிட்டு இறங்கியதும் மக்கள் கூடி நின்று அவரை வரவேற்றனர். அப்போது, துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அருகிலிருந்து சுட்டபின் காவல்துறை அதிகாரி ஒருவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததைக் கண்டோம்,” என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறியதாக ஏஎன்ஐ செய்தி தெரிவிக்கிறது.

திரு நவ தாசின் மறைவு தமக்கு வருத்தமளிப்பதாகக் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொண்டார்.

“அரசாங்கத்திற்கும் கட்சிக்கும் அவர் சொத்தாகத் திகழ்ந்தார். அவரது மறைவு ஒடிசாவிற்குப் பேரிழப்பு,” என்று குறிப்பிட்டார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.

மும்முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு நப தாஸ், ஒடிசா அமைச்சர்களிலேயே ஆகப் பெரும் பணக்காரர் என்று நம்பப்படுகிறது. அவரிடம் சொகுசுக் கார்கள் உட்பட 40 கார்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கோபால் தாஸ் எதற்காக அமைச்சரைச் சுட்டார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவரைக் கைதுசெய்து விசாரித்து வருகிறோம் என்றும் காவல்துறை தெரிவித்தது.

இதனிடையே, அமைச்சர் கொலை குறித்து விசாரிக்க காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ் தோரா தலைமையில் எழுவர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!