“18 ஆண்டுகளில் முதல் விடுமுறை”: பேர் க்ரில்ஸின் “மேன் வர்சஸ் வைல்டு” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, டிஸ்கவரி ஒளிவழியின் “பேர் க்ரில்ஸ் மற்றும் பிரதமர் மோடியுடன் வேன் வர்சஸ் வைல்டு” நிகழ்ச்சிக்காகக் காட்டுப்பகுதிக்குள் நடந்து சென்று, குளிர்ந்த ஆற்றில் படகுப்பயணமும் செய்தார். 

இயற்கைவளப் பாதுகாப்பு, தூய்மை ஆகிய இரண்டின் மேம்பாட்டுக்காகவும் உத்தரகாண்ட்டில் உள்ள ஜிம் கோர்பெட் தேசியப் பூங்காவின் காட்டுப்பகுதிக்குள் மழையையும் குளிரையும் பொருட்படுத்தாமல் பிரதமர் மோடி பயணித்தார். அவர் “மனப்பூர்வமான ஆர்வத்துடன் பங்கெடுத்தார்” என்று பேர் க்ரில்ஸ் கூறினார். 

நிகழ்ச்சியின் கலந்துரையாடிய பிரதமர் மோடி, மக்களின் கனவுகளை நிறைவேற்றுவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். அதோடு, தனது கவனம் முழுவதும் மேம்பாட்டில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில், “எனது பதவியால் எனக்குத் தலைக்கனம் ஏற்படுவதில்லை,” என அவர் பதிலளித்தார். 

உலகப் பிரபலங்களைத் தனது நிகழ்ச்சியில் பங்கேற்கவைக்கும் பேர் க்ரில்ஸ், பிரதமர் மோடியின் இளம்பிராயம், பிரதமராக அவருக்குள்ள கனவுகள், வாழ்க்கையில் அவருக்கிருந்த ஏதேனும் பயம் பற்றியும், அரசியல் பேரணிக்கு முன்பாகப் பதற்றமாக இருக்குமா என்றும் கேள்விகள் கேட்டார். 

“பதற்றம்” தனது அனுபவத்தில் இருந்ததில்லை என்பதால் அதுபற்றி தன்னிடம் நல்லதொரு பதில் இல்லை என்றார் பிரதமர் மோடி. 

(படம்: ஏஎஃப்பி)
(படம்: ஏஎஃப்பி)

“நான் இதுபோன்ற அச்சங்களை அனுபவித்ததில்லை என்பதே எனது பிரச்சனை. அதனால் பதற்றம் என்பது என்ன என்பதையும், அதனை எவ்வாறு சமாளிப்பது என்பதையும் மக்களிடம் என்னால் விளக்கிக்கூற இயலவில்லை. எனது மனப்பான்மை மிகவும் நம்பிக்கை மிகுந்தது. நான் எல்லாவற்றிலும் நல்லதையே பார்ப்பேன். அதனால்தான், நான் ஒருபோதும் ஏமாற்றமடைவதில்லை,” என்றார் அவர். 

“இளைய தலைமுறையிடம் ஏதாவது கூற வேண்டுமெனில், நமது வாழ்க்கையைப் பற்றி கூறு கூறாக யோசிக்கக்கூடாது என்று சொல்வேன். நமது வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக யோசிக்கும்போது, ஏற்ற இறக்கங்கள் இருப்பதை உணர்வோம். நாம் ஓர் இறக்கத்தை அனுபவிக்கும்போது அதுபற்றி யோசிக்கக்கூடாது, ஏனெனில் ஏற்றத்திற்கான பாதை அங்கிருந்துதான் தொடங்குகிறது,” என பிரதமர் மோடி கூறினார். 

ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் (“வாசுதேவ குடும்பகம்") என்பதே இந்தியா உலகுக்குக் கூறவிரும்பும் தகவல் என்றார் பிரதமர் மோடி. 

பிரதமராகவேண்டும் என்ற கனவு இருந்ததா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், நாட்டின் முன்னேற்றமே எப்போதும் தனது இலக்காக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். 

“நான் 13 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்தேன். அது எனக்குப் புதியதொரு பயணம். அதன்பிறகு, நான் இந்தப் பணியைச் செய்யவேண்டும் என என் நாடு தீர்மானித்தது. அதனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறேன்.

“ஆனால் என் கவனம் எப்போதும் ஒன்றின்மீதே இருந்து வந்துள்ளது. அதுதான் வளர்ச்சி. அந்தப் பணியில் எனக்குத் திருப்தியே. இன்று, இங்கு செலவிடும் இந்த நேரத்தை நான் விடுமுறையாகக் கருதினால், 18 ஆண்டுகளில் நான் எடுக்கும் முதல் விடுமுறை இது என்பேன்,” என்றார் பிரதமர் மோடி. 

தனது இளம்பிராயத்தில் வறுமை இருந்தபோதிலும், தனது குடும்பம் எப்போதுமே இயற்கையோடு ஒன்றியிருந்ததாக அவர் தெரிவித்தார். அதனால்தான் அவரது அப்பா, காசில்லாதபோதுகூட, தங்களது கிராமத்தில் மழை பெய்யத் தொடங்கிய உடனே, 20 முதல் 30 தபால் அட்டைகளை வாங்கி, உறவினர்களிடம் தெரியப்படுத்துவார் என அவர் கூறினார். 

நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில், கையில் கிடைத்த பொருட்களைக்கொண்டு ஓர் ஈட்டியைச் செய்த க்ரில்ஸ், தாங்கள் நடந்து செல்லும் பகுதியில் புலிகள் இருப்பதாகப் பிரதமரை எச்சரித்தார். அதற்குப் பதிலளித்த மோடி, “கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்,” என்றார். 

தனது நம்பிக்கைகள் யாரையும் கொல்ல அனுமதிப்பதில்லை என்றாலும், க்ரில்ஸுக்காக ஈட்டியைப் பிடித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார். 

“இயற்கையைப் பார்த்து யாரும் ஒருபோதும் அஞ்சக்கூடாது. ஏனெனில், நமக்கும் இயற்கைக்கும் இடையில் முரண்பாடு இருப்பதாக நாம் நினைக்கும்போதுதான் பிரச்சனை ஆரம்பமாகிறது,” என்றார் பிரதமர் மோடி. 

 

 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அந்த ஆடவரை மடக்கிப் பிடித்த ஒரு பெண் போலிஸ், தனது காலணியக் கழற்றி  சரமாரியாக அந்த ஆடவரைத் தாக்கினார். படம், காணொளி: இந்திய ஊடகம்

11 Dec 2019

மாணவிகளைக் கிண்டல் செய்த ஆடவரை ‘ஷூ’வால் ‘வெளுத்த’ பெண் காவலர்

சுவீடன் நாட்டுத் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற நோபெல் பரிசு வழங்கும் விழாவில் பொருளாதாரத்திற்கான நோபெல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி இந்திய பாரம்பரிய உடையணிந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.  படம், காணொளி: ஊடகம் / டுவிட்டர்

11 Dec 2019

வேட்டி, சேலையில் சென்று நோபெல் பரிசு பெற்ற அபிஜித் - எஸ்தர் தம்பதி