எழுத்தாளர் சுனில் நடத்தும் புனைவு, விமர்சனப் பயிலரங்குகள்

படைப்பாற்றல் என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் வேட்கை. சரியான வழிமுறைகளைப் பயன்படுத்தி ஆர்வத்தைத் தூண்டினால் மட்டுமே புத்தாக்க சிந்தனைகள் செயலாக்கம் பெறும் என்பது எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் அனுபவம்.

தீவிர இலக்கியத்தில் இடையறாது செயலாற்றுபவரும் காந்திய அறிஞருமான சுனில் கிருஷ்ணன், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் தேசியக் கலை மன்றமும் இணைந்து நடத்தும் ‘ஆசிய எழுத்துக்கலை படைப்பாக்கத்திறன் திட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட மூன்று மாத காலம் சிங்கப்பூரில் இலக்கிய பயிலரங்குகளை நடத்தவும் உரையாற்றவும் உள்ளார்.

ஆயுர்வேத மருத்துவரான 37 வயது சுனில் கிருஷ்ணன், புனைவு, மொழிபெயர்ப்பு, விமர்சனம், கட்டுரை எனப் பன்முகத்திறன் கொண்டவர். 

காந்தி குறித்த இவரது நூல்கள் பலரது கவனத்தையும் ஈர்த்தவை. 

மருத்துவமும் எழுத்தும் ஒரே சிந்தாந்தத்தில் இயங்குவதாகக் கருதும் சுனில், “ஆயுர்வேத மருத்துவ முறைப்படி ஒவ்வொரு நோயையும் உள்ளத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். உடலைத் துப்பறிவதே மருத்துவம். ஆகவே, தன்னியல்பிலேயே மருத்துவம் புனைவு சார்ந்த ஒன்றாக அமைகிறது,” என்கிறார். 

தமிழ்நாட்டின் காரைக்குடியில் ஆயுர்வேத மருந்தகத்தை நடத்தும் டாக்டர் சுனில், “அன்றாட வாழ்க்கை வழக்கங்களிலிருந்து நாம் நேரத்தைச் சேமித்து படைப்பாற்றலுக்காக ஒதுக்க வேண்டும். நமக்குள் இருக்கும் புத்தாக்கத்திறனை விழிப்புநிலையிலேயே வைத்திருப்பது அவசியம்,” என்று கூறினார். 

இம்மாதம் 13ஆம் தேதி சிங்கப்பூர் வந்த இவர், இங்கு தங்கியிருக்கும் மூன்று மாத காலத்தில் அறிவியல் விமர்சனங்கள், குறுங்கதைகள், வரலாற்றுப் புனைவுகள் போன்ற பரந்துபட்ட தலைப்புகளில் பல்வேறு நிகழ்வுகளை வழிநடத்தவுள்ளார். 

இளையர்கள், மாணவர்கள், அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்கள், எழுத்துத்துறையில் கால்பதிக்க முயல்வோர், வாசிப்பில் ஆர்வமிருப்போர் என ஒவ்வொருவருக்கும் இந்நிகழ்வுகள் ஏதேனும் ஒரு வகையில் பயனளிக்கும் என்கிறார் டாக்டர் சுனில். 

சிங்கப்பூருக்கும் புனைவுக்கும் நெருக்கமான உறவு இயல்பாகவே இருக்கிறது என்றும் பல்வேறு கோணங்களில் வளர்ச்சிகண்ட நாடான சிங்கப்பூரில் உள்ளவர்கள் தங்களுடைய வாழ்வியல் முறைகளை அடிப்படையாகக்கொண்டே பல்வேறு சிறந்த புனைவுப் படைப்புகளை உருவாக்க முடியும் என்றும் இவர் தெரிவித்தார். 

தமிழ்ப் படைப்புலகில் சிங்கப்பூர் எழுத்து கவனத்தை ஈர்ப்பதாக குறிப்பிட்ட திரு சுனில், மொழியுணர்விற்கும், மரபைப் பேணுவதற்கும் வசிப்பிடம் ஒரு தடையே இல்லை என்பதற்கு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளே சான்று என்றும் சொன்னார். 

படைப்பாளரும் விமர்சனங்களை ஆக்ககரமாக எடுத்துக்கொள்வது அவர்களின் சிந்தனைத்திறனை பல்வேறு கோணங்களில் தூண்டுவதோடு, படைப்புகளின் தரத்தையும் பன்மடங்கு உயர்த்தும் என்றும் இவர் குறிப்பிட்டார்.  

மேலும், எழுத்துத்துறையில் கால்பதிக்க தமிழ் இலக்கணம் கற்றிருக்க வேண்டும் என்ற தவறான அனுமானமும் பலரிடம் இருப்பதை சுட்டிய இவர், மொழியின் அடிப்படைகளும் தடையற்ற ஆர்வமும் சிந்தனையுமே எழுதத் தொடங்க போதுமானவை என்றார்.

காலப்போக்கில் ஒவ்வொரு படைப்பும் படைப்பாளனை மெருகேற்றிக்கொண்டே செல்லும் என்றும் இவர் சொனனர்.  

“தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் இக்கால இளையர்களுடைய கவனத்தின் கால அவகாசம் வெகுவாக குறைந்துள்ளது. மொழியினை அவர்களுக்குப் பிடித்த வழியில் இட்டுச்சென்றால் மட்டுமே அடுத்த தலைமுறையினரை அது நிலையாய்ச் சென்றடையும்,” என்றார் திரு சுனில் 

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் பங்குகொள்ளும் நிகழ்வுகள் இம்மாதம் 23ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்நிகழ்வுகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கும் பதிவுக்கும் https://blogs.ntu.edu.sg/acwp/suneel-krishnan/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம்

தமிழில் அறிவியல் புனைகதை - ஓர் அறிமுகம் என்ற பயிலரங்கு  என்டியு@ஒன் நார்த், சிங்கப்பூர் 138664 என்ற இடத்தில், சனிக்கிழமை (செப்டம்பர் 23) காலை 9 முதல் பகல் 12 மணி வரை நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.

டாக்டர் சுனில் கிருஷ்ணனின் படைப்புகள்:

சிறுகதை & நாவல்: ‘அம்புப்படுக்கை’ (2018), ‘விஷக் கிணறு’ (2020), “நீலகண்டம்’ (2020)

மொழிபெயர்ப்பு: ஷித்திமோகன் சென்னின் ‘இந்து ஞானம் ஓர் எளிய அறிமுகம்’, ராஜ் மோகன் காந்தியின் ’சுதந்திரமும் சமூகநீதியும்’, வானொலி அஞ்சலிகள் – ’மகாத்மாவுக்கு அஞ்சலி’

விமர்சனம்: ‘சமகால சிறுகதைகளின் பரிணாமம்’, ‘வளரொளி’

தொகுத்த தொகை நூல்கள்: ‘காந்தி எல்லைகளுக்கு அப்பால்’ - காந்தியைப் பற்றிய மொழியாக்கக் கட்டுரைகள் (2012), ‘பின்நவீனத்துவவாதியின் மனைவி’ – சுரேஷ்குமார இந்திரஜித்தின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (2019), ‘காந்தியைச் சுமப்பவர்கள்’ (2021), ‘மகாத்மா காந்தி தமிழில் – ஒரு தொகுப்பு’ (பாரதிய வித்யா பவன்)

டாக்டர் சுனில் கிருஷ்ணன் பெற்ற விருதுகள்:

2018: சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது - ‘அம்புப்படுக்கை’

2018: கணையாழி அசோகமித்திரன் குறுநாவல் பரிசு – ‘பேசும் பூனை’ 

2018: இளம் எழுத்தாளர்களுக்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது – ‘அம்புப்படுக்கை’ 

2020: க.நா.சு. சிறுகதை பரிசு – ‘எப்போதும் முடிவிலே இன்பம்’

ஈரோடு  அறம்  அறக்கட்டளை  வழங்கிய அறச்செம்மல் விருது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!