வருமானம் ஈட்டத் தொடங்கும் இளையருக்கு நிதி ஆலோசனை

தனிப்பட்ட நிதி நிர்வாகத்தில் வயது ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

வயதுக்கேற்ப மாறுபடும் நிதி சார்ந்த பொறுப்புகள், முதலீடு, சேமிப்பு போன்றவற்றிலும் வெளிப்படும்.

படிப்பை முடித்து பணிக்குச் செல்வது தொடங்கி, அடுத்த பத்தாண்டுகள் மிக முக்கியமான காலகட்டம்.

அந்தக் காலகட்டத்தில் நிதி நிர்வாகப் பழக்கத்தை நெறிமுறைப்படுத்துவது, பிற்காலத்தில் மிகவும் நன்மை அளிக்கும் என்பது நிதி ஆலோசகர்களின் கருத்து.

“பதின்மப் பருவத்தில், தாய் தந்தையரின் பணத்தில் செலவுசெய்யும் இளையர்களுக்கு, தாங்கள் நினைக்கும் பலவற்றை வாங்கவும் செயல்படுத்தவும் இயலாமல் போகும். பணிக்குச் சென்று முதன்முறையாக தானாக சம்பாதிக்கும் பொழுது, தவறவிட்ட அனைத்தையும் செய்து முடிக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும்.

“பொறுப்புகள் இல்லாததனால், செலவழிக்க ஏதுவான சூழல் அமைந்து விடுகிறது. அதில் சிக்காமல், நிதி நிர்வாகம் குறித்து அறிந்துகொள்ள இளையர்கள் முயல வேண்டும்” என்கிறார் நிதி ஆலோசகர் ஹபிடா ஷா.

“முதலில் தங்களது இன்றியமையாத் தேவைகள் என்ன, ஆடம்பரத் தேவைகள் என்ன என்பதையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்றபடி தங்கள் செலவினங்களைத் தீர்மானிக்கப் பழக வேண்டும்,” என்கிறார் அவர்.

செலவுபோக மீதியைச் சேமிக்க வேண்டும் என்றில்லாமல், சேமிப்பிற்குப் பின் மீதமிருப்பதற்கேற்ப செலவினங்களைத் தீர்மானிக்க வேண்டும் என்று திருவாட்டி ஹபிடா சொல்கிறார்.

‘50:30:20’ விதி

செலவினங்களை முறைப்படுத்தும் எவருக்குமே, 50:30:20 எனும் விதி பொதுவானது. அதனை இன்னும் விளக்கமாகத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்கிறார் ஹபிடா.

செலவினங்களுக்கு 50 விழுக்காடு போக, 10 விழுக்காட்டை சமூக வாழ்க்கை, பொழுதுபோக்கு ஆகியவற்றுக்கும் 10 விழுக்காட்டை முதலீடாகவும் 10 விழுக்காட்டைச் சேமிப்பாகவும் 10 விழுக்காட்டை அவசர அல்லது நெருக்கடிகால நிதியாகவும் எஞ்சிய 10 விழுக்காட்டைத் திறன் மேம்பாட்டுக்கெனவும் ஒதுக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.

இதுகுறித்து பேசிய மற்றொரு தனியார் நிறுவன நிதி ஆலோசகர் சசிகுமார், “50:30:20 திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது நல்லதுதான். ஆனால், உலகளாவிய கண்ணோட்டத்தில் பார்த்தால், சிங்கப்பூரில் சில செலவுகளைக் குறைப்பது எளிது.

“எடுத்துக்காட்டாக, பல நாடுகளில் கல்விக்காகவும் வேலைக்காகவும் இடம்பெயர வேண்டியிருக்கும். அங்குள்ள செலவுகளையும் பிற பொறுப்புகளையும் ஒன்றாகச் சமாளிக்க வேண்டிவரலாம். அந்தப் பிரச்சினைகள் சிங்கப்பூரில் இல்லை.

“அப்படிப் பார்த்தால், அடிப்படைச் செலவிலிருந்து 5 முதல் 10 விழுக்காடு குறைந்து, அதையும் சேமிக்க வாய்ப்பு உள்ளதாகவே பார்க்கிறேன்,” என்கிறார்.

ஏஐஏ நிறுவனத்தில் பணியாற்றும் நிதி ஆலோசகரான அர்ஷத் அப்துல் ஜலீல், “பணம் ஈட்டும் வயதில் அதனை அனுபவிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருப்பது தவறன்று. ஆனால், அவற்றை முறைப்படி செய்வது அவசியம்.

“நினைத்தபடியே செலவு செய்யாமல், அதற்கென ஒரு நிதியை ஒதுக்கி, சற்று பொறுத்து செய்யும் அணுகுமுறை சீரான வாழ்க்கைக்கு உதவுவதோடு, வெகுமதி மனப்பான்மையையும் அதிகரிக்கும்,” என்கிறார்.

வருமானம் ஈட்டும் காலக்கட்டத்தில் தீவிரமாகச் சேமிக்க வேண்டும் என்றும் அவர் சொல்கிறார்.

செலவினத் திட்டமிடல் குறிப்புகள்

வருமானம் ஈட்டத் தொடங்கியவுடன், வரவுசெலவுத் திட்டமொன்றை வகுத்துக்கொள்ள வேண்டும். அதற்கெனத் தனித்துவமான முன்வடிவுப் படிவங்களும் (டெம்ப்ளேட்) இலவசச் செயலிகளும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றின் உதவியோடு ஓர் அடிப்படைத் திட்டத்தை உருவாக்கிக்கொள்வது நல்லது.

“ஒருவர் தனது வருமானத்திற்கும் ஒரு படி கீழ்நிலையில்தான் தங்கள் வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்ள வேண்டும்’ என்பது நிதி ஆலோசகர்களின் முக்கியமான ஆலோசனை. அது எக்காலத்துக்கும் பொருந்தும் என்பது அவர்களின் கருத்து.

அடுத்த முக்கிய ஆலோசனை, அவசரகால நிதி. சேமிப்பின் முதல்படியாக, 3 முதல் 6 மாத செலவினங்களுக்கு ஈடான பணத்தைச் சேமிக்க வேண்டும். இன்ன பிற சேமிப்புகளுக்கும் முதலீடு செய்வதற்கும் முன்பாக இதனைச் செய்ய வேண்டும்.

அடுத்தபடியாக, செலவினங்களைக் கண்காணிக்க வேண்டும். மாறுநிலைச் (வேரியபிள்) செலவுகள் என்னென்ன செய்கிறோம் என்பதை ஆராய வேண்டும். குறிப்பாக, கணநேர உந்துதலில் பொருள்கள் வாங்குவது, டாக்சி, இணையம்வழி உணவு வாங்குதல், இன்ன பிற பொழுதுபோக்குகள் ஆகியவற்றுக்கான செலவு குறிப்பிட்ட தொகையை மீறிப் போகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும்.

ஒவ்வொருவரின் நீண்டகால இலக்குகளைப் பட்டியலிட்டு, அதற்கேற்றவாறு நிதித் திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். அது குறித்த அறிவுரைகளை நிதிசார்ந்த இணையதளங்கள், புத்தகங்கள் மூலமும் பெறலாம். குறிப்பிட்ட சில தகவல்களுக்கு நிதி ஆலோசனை வழங்கும் நிபுணர்களையும் அணுகலாம்.

இளையர்கள், குறிப்பாக பணியில் சேர்ந்தவுடன், அன்றாட நிதி நிலைமை குறித்த செய்திகளையும் அறிந்துகொள்வது நல்லது. அது பிற்காலத்தில் முதலீடு செய்யும்போதும், வீடு வாங்குவது, மறுசீரமைப்பு செய்வது, வாகனம் வாங்குவது போன்ற பெரிய செலவினங்கள் குறித்த முடிவுகளை அறிவார்ந்து எடுக்கவும் மிகவும் உதவியாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!