மகாதீர்: வழிபாட்டுக் கட்டடங்கள் கட்டுவதில் போட்டி போடவேண்டாம்

சமய வழிபாட்டுக்காக பெரிய அளவிலான கட்டடங்களைக் கட்டிக் கொள்வது ஏற்புடையதே. இருப்பினும் அவற்றை போட்டியின் காரணமாக பெரிதாகக் கட்டுவது என்பது ஏற்புடையதல்ல என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது கூறியுள்ளார்.

"ஏற்கெனவே பெரிய அளவில் ஒரு சமய வழிபாட்டுக் கூடம் கட்டப்பட்டிருக்கிறது என்றால் அதனைக்காட்டிலும் பெரிதாகவும் உயரமாகவும் கட்டவேண்டும் என்னும் போட்டி மனப்பான்மையில் நாம் புதிய கட்டடம் கட்டுவதில் ஆர்வம் காட்டக்கூடாது.

"சமய வழிபாட்டுக்கென பெரிய அளவில் சமயக்கூடங்களை அமைப்பதற்கு மக்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. 

"இருப்பினும் தற்போது உயரமாக, பெரிதாக உள்ள சமயச் சின்னங்கள், கட்டடங்களைக் காட்டிலும் பெரிதாக கட்டவேண்டும் என்று ஒருவருக்கொருவர் போட்டிபோட வேண்டாம்," என்று திரு மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

பங்சார் என்னுமிடத்தில் அரசாங்கத்தின் மின்சார வாரியமான ‘டிஎன்பி’ என்றழைக்கப்படும் தெனகா நேசனலின் தலைமையகம் உள்ள இடத்தில் ‘பாலை இஸ்லாம் காம்ப்ளக்ஸ்’ என்னும் சமய வழிபாட்டுக் கூடம் திறக்கப்பட்டுள்ளது.

பாலை இஸ்லாம் காம்ப்ளக்ஸின் கட்டடத் திறப்புவிழாவிலும் மின்சார வாரியத்தின் 70 ஆண்டு நிறைவு விழாவிலும் கலந்துகொண்டு பிரதமர் மகாதீர் உரையாற்றினார். பங்சாரில் திறக்கப்பட்ட அந்த சமய வழிபாட்டுக் கூடம் கிட்டத்தட்ட 2,850 பேர் ஒரே நேரத்தில் சமய வழிபாடுகளில் கலந்துகொள்வதற்கு பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.

#மலேசியா #மகாதீர் #தமிழ்முரசு