மலேசியாவில் குற்றங்கள் குறைந்தன

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த ஆண்டு குற்ற விகிதம் 7.5% குறைந்தது. அதாவது, 100,000 பேருக்கு 249 என்ற விகிதத்தில் குற்றச் செயல்கள் அரங்கேறின.

அந்த எண்ணிக்கையை 269ஆகக் குறைக்கவேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதற்கும் குறைவாக குற்றங்கள் பதிவானதால் போலிஸ் தலைமை ஆய்வாளர் அப்துல் ஹமீத் படோர் குற்ற விசாரணைப் பிரிவை (சிஐடி) வெகுவாகப் பாராட்டினார் .

குறிப்பாக, போதைப்பொருள் தடுப்பில் போலிசார் அதிக கவனம் செலுத்தியதாகவும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு ஒன்பது சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் திரு படோர் தெரிவித்தார்.

“2019 செப்டம்பர் 10ஆம் தேதி 2.4 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 12 டன் கொக்கைன் போதைப்பொருளைப் பறிமுதல் செய்ததைப் பெரும் வெற்றியாகக் கருதுகிறோம்,” என்றார் அவர்.

‘ஆபரேஷன் புளூ டெவில்’ மூலமாக போதைப்பொருள் புழங்கியதாக காவல்துறையினர் 269 பேர் கைது செய்யப்பட்டனர். 

அதேபோல, இம்மாதத் தொடக்கத்தில் இருந்து 17ஆம் தேதி வரை போதைப்பொருள் புழங்கிய குற்றத்திற்காக ஒன்பது போலிஸ் அதிகாரிகளும் ஊழியர்களும் பிடிபட்டனர்.

ஒட்டுமொத்தத்தில், கடந்த ஆண்டு மட்டும் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு மேற்கொண்ட 17,582 நடவடிக்கைகள் மூலம் 15,876 பேர் சிக்கியதாக திரு படோர் குறிப்பிட்டார்.

இதனிடையே, போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறையினர் சென்ற ஆண்டில் பல்வேறு போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பில் 3,086 பேரையும் வேறு குற்றங்களுக்காக 296 பேரையும் கைது செய்தனர்.