தடையுடைத்து தங்கம் வென்ற சுவப்னா

ஜகார்த்தா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய திடல்தட வீரங்கனை சுவப்னா பர்மனின் முனைப்புமிக்க செயல்பாடு அனை வரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. பெண்களுக்கான ஹெப்டத் தலோன் போட்டியில் சுவப்னா தங்கம் வென்றார். உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டப் பந்தயம், 200 மீட்டர் ஓட்டப் பந்தயம், 800 மீட்டர் ஓட்டப் பந்தயம் ஆகியவற்றைக் கொண்ட ஹெப்டத்தலோன் போட்டியில் பங்கேற்ற மற்ற போட்டியாளர் களைவிட அதிகப் புள்ளிகள் பெற்று சுவப்னா வாகை சூடினார். கடைசிப் போட்டியான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்துக்கு முன்பு சுவப்னா இரண்டாவது நிலையில் இருந்த சீன வீராங்கனையைவிட கூடுதலாக 64 புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருந்தார். 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் நான்காவதாக முடித்த சுவப்னா, ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

ஆனால் இந்த வெற்றியைச் சுவைக்க சுவப்னா பல தடைகளை முறியடிக்க வேண்டி இருந்தது. இறுதிப் பந்தயமான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தின்போது அவரது ஈறுகள் வீங்கியிருந்தன. ஒரு கட்டத்தில் வலி தாங்கமுடியாமல் போட்டியிலிருந்து விலகுவது குறித்து எண்ணியதாக அவர் ஒப்புக்கொண்டார்.

தாடையில் கட்டுடன் ஓடி பந்தயத்தை முடிக்கும் இந்திய வீராங்கனை சுவப்னா பர்மன். ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் தங்கம் வென்று மகிழ்ச்சியுடன் கைகளை உயர்த்திக் கொண்டாடினார். படம்: இபிஏ-இஎஃப்இ