வெளிநாட்டு ஊழியர்களுக்கு நம்பிக்கை தரும் மருத்துவர்

கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகள் இரண்டாம் கட்டமாக தளர்த்தப்பட்டதை அடுத்து, வெளிநாட்டு ஊழியர்கள் படிப்படியாக வேலைக்குத் திரும்புகின்றனர். அவர்களிடையே கிருமிப் பரவல் குறித்த பயத்தைப் போக்க டாக்டர் ஹமிட் ரஹ்மத்துல்லா போன்ற தமிழ் தெரிந்த மருத்துவர்கள் உதவுகின்றனர்.

தாயகத்தில் உள்ள அன்பு சொந்தங்களைவிட்டு பிரிந்து இங்கு பணிபுரியும் ஊழியர்கள் எதிர்நோக்கும் சிரமங்களைத் தம்மால் உணர முடிவதாக செங்காங் பொது மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் ஹமிட், 35, கூறினார்.

கிருமி பரவத் தொடங்கிய காலத்தில் பயிற்சி, ஆராய்ச்சி திட்டத்திற்காக தமது மனைவி, ஏழு வயது மகள், நான்கு வயது மகனுடன் அவர் பிரிட்டனுக்குச் சென்றிருந்தார். கொரோனா கிருமி அசுர வேகத்தில் பரவுவது குறித்து ஆரம்பத்தில் தமக்கும் பயம் ஏற்பட்டதாகக் கூறிய அவர், மார்ச் மாதம் பிற்பகுதியில் சிங்கப்பூர் திரும்பிய போதுதான் தாம் நிம்மதி அடைந்ததாக சொன்னார்.

சிங்கப்பூர் கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக உலக சுகாதார நிறுவனம்கூட பாராட்டியது. எனினும், அதன் பிறகு இங்கும் சோதனைக் காலம் தொடங்கியது. வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கொரோனா கிருமி வேகமாகப் பரவத் தொடங்கியது.

தினந்தோறும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பெருமளவில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. மருத்துவ உதவி, தொடர்புச் சேவைகளுக்கு தமிழ், வங்காளம் உள்ளிட்ட மொழிகளைப் பேசத் தெரிந்த மருத்துவர்களின் உதவி அவசரமாகத் தேவைப்பட்டது. அப்போதுதான் டாக்டர் ஹமிட் உதவ முன்வந்தார்.
செங்காங் பொது மருத்துவமனையின் கொவிட்-19 செயலாக்கப் பணிக்குழுவின் உதவித் தலைவராக பொறுப்பு வகிக்கும் அவர், மருத்துவப் பணிக்கு அப்பாற்பட்டு வெளிநாட்டு ஊழியர்களின் மனஅழுத்தத்தையும் குறைக்க உதவினார்.

தங்கும் விடுதிகளில் கிருமிப் பரவலைக் குறைக்க அமைக்கப்பட்ட ‘ஃபாஸ்ட்’ பணிக்குழுவிலும் அவர் இடம்பெற்றார். மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்பிருந்த நிலையைவிட தற்போது நிலை ஓரளவு சீரடைந்திருப்பதாக டாக்டர் ஹமிட் கூறினார்.

“தொடக்கத்தில் வாரத்திற்கு மூன்று, நான்கு முறை நான் தங்கும் விடுதிகளுக்குச் செல்வேன். இப்போது அந்த எண்ணிக்கை குறைந்திருக்கிறது. சளி மாதிரி, ரத்தப் பரிசோதனை முன்பைவிட தற்போது குறைந்து இருக்கிறது,” என்றார் அவர்.

கிருமித்தொற்றுப் பரிசோதனை என்பது என்ன, கிருமி தொற்றியவர்கள் எவ்வளவு காலம் தனிமைப்படுத்தப்படுவர், மேலும் என்னென்ன பரிசோதனைகளை எதிர்பார்க்கலாம் என கொவிட்-19 தொடர்புடைய தகவல்கள் வெளிநாட்டு ஊழியர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதனால், ஊழியர்களுக்குப் பயம் குறைந்து, கிருமித்தொற்றுப் பரிசோதனை பற்றிய தெளிவு கிடைத்து இருப்பதாகவும் டாக்டர் ஹமிட் குறிப்பிட்டார்.

5,000 முதல் 14,000 ஊழியர்கள் வரை தங்கும் விடுதிகளில் எத்தனை மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவர், ஒவ்வொரு முறை அங்கு அவர்கள் எவ்வளவு நேரம் இருப்பர், அவர்களுக்கான வேலை அட்டவணை எப்படி இருக்கும் போன்றவற்றை மேற்பார்வையிடுவது டாக்டர் ஹமிட்டின் பொறுப்பாகும்.
தீவின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஊழியர் தங்கும் விடுதிகளுக்குச் சென்ற அவர், இதுவரையில் ஏறத்தாழ 10,000 ஊழியர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

ஊழியர்களின் மனநிலை குறித்து தெரிந்துகொண்டு அவர்களுக்கு ஆலோசனையை டாக்டர் ஹமிட் வழங்குகிறார்.

ஊழியர்களிடம் தகவல்களைப் பகிரும்போதும் அவர்களுக்கு பதற்றம் குறைகிறது. தங்களின் நலனுக்காக அரசாங்கம் தொடர்ந்து பாடுபடுவதை அவர்கள் அறிகின்றனர்.
“உண்மையிலேயே நோயைவிட பயம்தான் தங்களை அதிகம் பாதிப்பதாக ஊழியர்கள் கூறினர்.அவர்களது பயத்தைப் போக்கும் விதமாக தமிழில் பேசும்போது அவர்கள் நிம்மதி அடைகின்றனர்.
“எனது தமிழ் மொழி ஆற்றல் அவர்களுக்கு உதவியாக இருப்பதை நினைத்து பெருமை அடைகிறேன்,” என்று அவர் கூறினார்.

தாம் சந்தித்த ஊழியர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரிலேயே தொடர்ந்து வேலை செய்ய விரும்புவதாக டாக்டர் ஹமிட் தெரிவித்தார். சொந்த நாட்டுக்கு திரும்பும் ஏக்கம் அவர்களுக்கு இருந்தாலும் வேலையைக் கைவிட்டு நாடு திரும்பும் எண்ணம் பெரும்பாலானோருக்கு இல்லை என அவர் கூறினார்.
சில விடுதிகளில் கிருமித்தொற்று பாதிப்பு குறைவு, சில விடுதிகளில் பாதிப்பு அதிகம் என்று கூறிய டாக்டர் ஹமிட், ஒவ்வொரு தங்கும் விடுதிக்கும் ஏற்ற பொருத்தமான உத்திகளை அரசாங்கம் வகுத்து இருப்பதாகச் சொன்னார். குறிப்பிட்ட விடுதியில் கிருமித்தொற்று நிலவரத்தைப் பொறுத்து ஊழியர்கள் வேலைக்குத் திரும்ப அனுமதி வழங்கப்படுகிறது.

இதற்கான வழிமுறை விடுதிக்கு விடுதி மாறுபடுவதாக டாக்டர் ஹமிட் கூறினார். இரண்டாம் கட்ட தளர்வு நடவடிக்கையின்போது வேலைக்குத் திரும்பும் ஊழியர்களை கவனத்துடன் இருக்கும்படி கேட்டுக்கொண்ட டாக்டர் ஹமிட், அடிக்கடி கைகளைக் கழுவுவது, முகக்கவசம் அணிவது, பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகளைப் பின்பற்றுவது, கூட்டங்களைத் தவிர்ப்பது, நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரிடம் செல்வது ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்றார்.
குடும்பத்தில் ஒருவராவது மருத்துவராக வேண்டும் என்ற ஆசை தமது தாத்தாவுக்கு இருந்ததாக நினைவுகூர்ந்த டாக்டர் ஹமிட், மருத்துவம் பயில வேண்டும் என்ற ஆசை தமக்கு 12 வயதில் ஏற்பட்டதாகச் சொன்னார்.

தங்ளின் தொடக்கப் பள்ளி, ஆங்கிலோ சீன உயர்நிலைப் பள்ளி, ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரியில் பயின்ற பிறகு, 2004ல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 2009ல் மருத்துவப் பட்டம் பெற்றார் டாக்டர் ஹமிட்.

இவ்வாண்டு ரமலான் மாதத்தின்போது நோன்பு நோற்றவாறு அவர் வேலை செய்தார். சக ஊழியர்களின் ஊக்கத்தால் தமக்கு உந்துதல் கிடைத்ததாக அவர் சொன்னார்.

“மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற மனப்போக்குடன் நான் செயல்பட்டேன்,” என்றார் அவர்.
நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நிரூபிக்கும் வாய்ப்பாக கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலை இளையர்கள் கருத வேண்டும் என்கிறார் டாக்டர் ஹமிட்.
“பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து அவற்றைப் பிறருக்கும் நாம் அறிவுறுத்த வேண்டும்,” என அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!