சீனா கடும் எதிர்ப்பு; கர்ஜனை; ராணுவப்பயிற்சி, தடை, எச்சரிக்கை
தைவானை அமெரிக்கா கை விடாது என்பதைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டவே தமது தைவான் பயணம் இடம்பெற்றதாக அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் திருவாட்டி நேன்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது தைவானுக்கு அமெரிக்காவின் ஆதரவு மிக முக்கியமாக இருக்கிறது என்று தைவானிய அதிபர் சாய் இங்- வென்னிடம் அவர் தெரிவித்தார்.
தைவானிலும் உலகின் வேறு பகுதிகளிலும் ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பது என்ற அமெரிக்காவின் தீர்மானம் இரும்புபோல் உறுதியானது என்றும் திருவாட்டி நேன்சி குறிப்பிட்டார்.
தைவானுக்கு செவ்வாய்க்கிழமை வருகை அளித்த அமெரிக்க நாடாளுமன்ற நாயகர், நேற்று தைவானிய அதிபரைச் சந்தித்தார். அப்போது அவர் தைவானிய அதிபரிடம் இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே, தைவானுக்கு வருகை அளித்ததற்காக திருவாட்டி நேன்சிக்கு நன்றி கூறிய தைவானிய அதிபர், இப்போதைய மிக முக்கியமான காலகட்டத்தில் தைவானுக்கு ஆதரவு அளிப்பது என்ற உறுதியான செயல்களை மேற்கொண்டதற்காக அவரைப் பாராட்டினார்.
அமெரிக்காவுக்கு நம்பிக்கைக்குரிய பங்காளியாக தைவான் இருக்கிறது என்றும் அமெரிக்காவுடன் தொடர்ந்து சேர்ந்து செயல்பட்டு பாதுகாப்பு, பொருளியல் மேம்பாடு, விநியோகக் கட்டமைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை தைவான் பலப்படுத்தும் என்றும் தைவானிய அதிபர் மேலும் குறிப்பிட்டார்.
இதனிடையே, அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் பெலோசியின் தைவான் வருகை சீனாவைப் பெரிய அளவில் சீண்டிப் பார்ப்பதாக அமைந்துவிட்டது.
சர்ச்சைக்கிடமான அமெரிக்க பேராளரின் வருகை சீனாவின் இறையாண்மையில் தலையிடும் ஒன்று என்றும் தைவான் சுதந்திரத்துக்குப் பாடுபடும் தரப்புகளுக்குக் கடும் தண்டனை உண்டு என்றும் பெய்ஜிங் கர்ஜித்தது.
அதோடு மட்டுமின்றி, நேன்சியின் வருகையை எதிர்த்து, அதை எச்சரிக்கும் வகையில் தைவானைச் சுற்றிலும் பெரியஅளவில் ராணுவப் பயிற்சியை சீனா தொடங்கியது.
ராணுவப் பயிற்சி நடப்பதால் தைவானைச் சுற்றியுள்ள ஆகாய வழியைத் தவிர்த்துக்கொள்ளும்படி ஆசியாவில் செயல்படும் விமான நிறுவனங்களுக்கு சீனா எச்சரிக்கை விடுத்தது.
இயற்கை மணலை தைவானுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடை விதித்தது. தைவானில் இருந்து சில வகை உணவுப்பொருள்களை இறக்குமதி செய்யவும் சீனா தடை விதித்தது.
இந்நிலையில், சீனா நடத்தும் பயிற்சியை அனைத்துலக விதிமீறிய செயல் என்று தைவான் கண்டித்தது. தைவான் நீரிணையில் அமைதியும் நிலைப்பாடும் தேவை என்று தைவான் வலியுறுத்திக் கூறியது.
இதனிடையே, இந்தோனீசியாவின் சுமத்ரா தீவு அருகே அமெரிக்க-இந்தோனீசிய இரு நாட்டு ராணுவமும் வருடாந்திர கூட்டுப் பயிற்சியை நேற்று தொடங்கின. அந்தப் பயிற்சியில் இதர நாடுகளின் வீரர்களும் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறையாக தைவானுக்கு மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆக உயரிய அமெரிக்க அதிகாரியின் வருகையாக திருவாட்டி நேன்சி செவ்வாய்க்கிழமை தைவானில் தரையிறங்கினார்.
திருவாட்டி நேன்சி தன்னுடைய தைவான் பயணத்தை முடித்துக்கொண்டு தென்கொரியாவின் சோல் நகருக்குச் சென்றார். அவர் ஜப்பானுக்கும் செல்கிறார்.
தன்னிடம் இருந்து பிரிந்து செல்ல முயலும் தன் மாநிலமாக தைவானை சீனா கருதுகிறது.
தைவானுடன் அரசதந்திர உறவை வைத்துக்கொள்ளும் நாடு களைச் சீனா எதிர்க்கிறது. திருவாட்டி நேன்சியின் தைவான் வருகையை, அது இடம்பெறுவதற்கு முன்பே சீனா கண்டித்தது.