பால் தம்பையா: சுகாதாரக் கொள்கைகளை எளிமைப்படுத்த வேண்டும்

சிங்கப்பூரில் நல்ல சுகாதாரப் பராமரிப்பு உள்ளது. ஆனால் கட்டணம் என்று வரும்போது குழப்பமாக உள்ளது. ஏனெனில், மெடிசேவ், மெடி‌‌‌ஷீல்ட் லைவ், கேர்‌ஷீல்ட் லைவ் என எண்ணற்ற திட்டங்கள் நடப்பில் இருக்க, இதனை எளிமைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைவரான டாக்டர் பால் தம்பையா.

புக்கிட் பாஞ்சாங் தொகுதியில் போட்டியிடும் இவர் நேற்று அங்குள்ள குடியிருப்பாளர்களைச் சந்தித்த வேளையில் தமிழ் முரசுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் பால் தம்பையா, மருத்துவக் கட்டணங்களுக்கு ஓர் அட்டையை மட்டும் கொண்டு கட்டணம் செலுத்தும் வசதியை தமது கட்சி பரிந்துரைக்கிறது என்றார்.

குறிப்பிட்ட அளவுக்கு நிதி உதவி வழங்கும் அந்த அட்டை, பொது மருத்துவமனைகளில் மட்டு மின்றி தனியார் மருந்தகங்களிலும் பயன்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று அவர் விளக்கினார். பொதுவான பொருளாதாரம், சுகாதாரப் பராமரிப்பு, வேலைகள் குறித்த அக்கறைகளும் இந்திய சமூகத்தினருக்கு உண்டு என்று குறிப்பிட்ட டாக்டர் பால் தம்பையா, இந்திய சமூகத்தினரிடையே அதிக அளவில் நீரிழிவு நோய், இதய நோய் போன்றவை இருக்க, நல்ல சுகாதாரப் பராமரிப்புக்கான எதிர்பார்ப்பு அவர்களிடையே இருக்கும் என்றார். தற்போது நடப்பில் இருக்கும் பொருள், சேவை வரியை, அடிப்படை உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கக்கூடாது என அவரது கட்சி நம்புகிறது.

குறைந்த வருமானம் ஈட்டும் நபர்கள் பொருள், சேவை வரி செலுத்தும்போது அவர்களின் வருமானத்தில் அதிக பங்கு வரிக்கு சென்றுவிடுகிறது என்று கூறிய டாக்டர் பால் தம்பையா, அவர்களுக்கு அது சிரமத்தை தரக்கூடும் என்று குறிப்பிட்டார்.

கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு பிந்திய காலத்திற்கு தயாராகும் வேளையில், நிறுவனங்களுக்கு போய் சேரும் நிதி உதவி மக்களையும் போய் சேர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஏனெனில் நேரடியாக கிடைக்கும் பண உதவியை மக்கள் அவரவர் தேவைக்கு இணங்க பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொன்னார் டாக்டர் பால் தம்பையா.

“மக்கள் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு வாக்களிக்க வேண்டும். உலகம் துரித மாற்றம் கண்டு வரும் வேளையில் புதிய கண்ணோட்டத்துடன் வாழ்க்கையை அணுக வேண்டும். பழைய அணுகு முறைகள் பயன் தராமல் போகலாம். அரசாங்க ஆதரவுடன் சொந்த வி‌‌ஷயங்களை செய்வதற்கு சுதந்திரம் தரப்பட்டால் அது உகந்ததாக இருக்கும்,” என்று வலியுறுத்தினார் அவர். வரும் பொதுத் தேர்தலில் புக்கிட் பாஞ்சாங் தொகுதியில் இவர், மக்கள் செயல் கட்சியின் லியாங் எங் ஹுவாவை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.